காவிரியை மீட்டுத்தந்த கரிகால்சோழனே - ஜெ ஸ்டைலில் எடப்பாடியாருக்கு நடந்த பாராட்டு விழா

By காமதேனு

‘காவிரியை மீட்டுத்தந்த கரிகால் சோழன், பொன்னியின் செல்வன், பார்த்தால் பூனை.. பாய்ந்தால் புலி, காவிரி நதி நீரைப் பெற்றுத்தந்த பெருமகனார், சேலம் தந்த சிங்கம்.. கொங்குநாட்டுத் தங்கம்' - இத்தனையும் கடந்த 18-ம் தேதி மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு அதிமுக தலைவர்கள் வகைதொகை இல்லாமல் வாசித்தளித்த பாராட்டுப் பத்திரங்கள்!

‘காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமையை மீட்டெடுத்த அதிமுக அரசின் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி 
விளக்க பொதுக்கூட்டம்’ (அப்பாடா... கூட்டத் தலைப்பைச் சொல்லி முடிக்கவே மூச்சு வாங்குதே!) என்ற தலைப்பில் நடைபெற்ற படோடோப பாராட்டுவிழாவில்தான் எடப்பாடிக்கு இப்படி பாராட்டு மழை.

கூட்ட ஏற்பாடுகளையும், கெடுபிடிகளையும் பார்த்தபோது, “அந்த சந்திரமுகியாகவே மாறி நிற்கும் கங்காவைப்பார்...” என்ற `சந்திரமுகி’ படத்தின் வசனம்தான் நினைவுக்கு வந்து போனது. அந்த அளவுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு எத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படுமோ, அத்தனையும் எடப்பாடிக்கும் செய்யப்பட்டிருந்தன. மாலையில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்துக்கு மதியமே காவிரி இல்லம் வந்து சேர்ந்தார் எடப்பாடியார். அவரது பாதுகாப்பை முன்னிட்டு அந்தப் பகுதியின் போக்குவரத்தை முற்றிலுமாக தடைசெய்தது போலீஸ்.

பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு அருகில் யாரையும் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா கூட்டங்களுக்கு அமைக்கப்படுவது போல மேடைக்கு முன்பாக இடைவெளிவிட்டே பார்வையாளர்கள் கேலரிகளை அமைத்திருந்தனர். கட்சி விழா என்றபோதும் செய்தித் துறை அதிகாரிகள் பலரும் முதல்வருக்காக அங்கே முகாமிட்டி ருந்தார்கள். முதல்வரின் கார் மேடைவரை வந்து நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. காருக்குத் தனி பந்தல், அங்கிருந்து மேடைக்கு நடந்துவர சாய்தள வழி. மேடையில் முதல்வருக்கு மட்டும் பிரத்யேக மைக்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE