சொட்டாங்கல்- தமிழச்சி தங்கபாண்டியன்

By காமதேனு

அம்மாசி

“திம்சுக்கட்டைனா ஒம் பல்லப் பேத்துருவேன்”னு எங்கைய முறுக்கி, “டீச்சரு மகள்னா, மப்பா ஒனக்கு”னு எக்கிக் குட்டு வச்ச அம்மாசியப் பார்த்தாலே அம்புட்டுப் பயம் எனக்கு. ரெண்டாப்புலயே ரெண்டு வருசமாப் படிக்கான்னு சகாயமேரி சொன்னதுக்கு, “ஓஞ் சத்துணவு வட்டுல நெளிச்சுப்புடுவேன். கோள்சொல்லிக் கொரங்கு”னு அவளையும் கொட்டுனா. அம்மாசி கொட்டு வச்சா, ஒக்கார எடம் வரைக்கும் எறங்கி உசிரு போயிறும். “ரெட்ட ஒலக்கைய ஒண்ணாப் போடற கை”னு அம்மாசிக்கு அதுல ஊறுன மண்டைக் கனமும் சாஸ்தி.

பி.டி.வாத்தியாருக்கு அம்மாசியதா புடிக்கும். ‘தூரந் தாண்டுற’ போட்டில இருந்து ‘பச்சைக் குதிர’ வெளாட்டு வரைக்கும் அம்மாசிதா நம்பர் ஒன்னு. பாவாடைய வரிஞ்சு பின்னுக்குக் கட்டிக்கிட்டு பத்து நிமிட் வரைக்குங்கூட ‘பச்சக் குதிர’ தாண்டுவா. ‘ஸ்கிப்பிங்’ குதியெல்லாம் நூறு வரைக்கும் ஒரே முட்டா போடுவா. எனக்கு அம்மாசிய எப்பிடியாச்சும் ஃப்ரெண்டு புடுச்சு ‘ஸ்கிப்பிங்’ போட்டுரணும்னு அம்புட்டு ஆச.

ஆனாக்க நா பக்கத்துல போனாலே அவ புடிகொடுக்காம மூஞ்சியத் திருப்பிக்குவா. “ஒல்லிக்குச்சி, ஊத்தவட நீயெல்லாம் ‘பச்சைக் குதிர’ல குனியத்தா லாயக்கு”னுவா. அம்மாசி அதிரசம்னா ஆவியக் கொடுப்பா, அதக் காட்டியும் அந்தக் கெட்டி மாவுன்னா உசிரக் கொடுத்துருவான்னு ‘மொட்டாக்கு’ சொன்னதக் கேட்டு, ஒரு நா டிப்பன் டப்பாயில அதிரச மாவ அடச்சுகிட்டுத் தகிரியமா அவ கிட்டக்கப் போனேன். அவ எப்பவும் ரீசஸ் பீரியட்ல தேர் முட்டிக்குப் பக்கத்துல இருக்க பென்னம் பெரிய ஆட்டுரலு மேலதா ஒக்காந்திருப்பா. அம்மாசிகிட்ட டிப்பன் டப்பாய நீட்டுனேன். “ஏந் தெறந்து தர மாட்டயாக்கும்”னா. சனியன், அப்பன்னு பாத்து டப்பாய் தொறக்க வல்ல. “‘கீரைத்தண்டு’, ஒரக்கிற மாரி அமுக்கித் தொற”னு லந்தடிச்சுகிட்டே எங்கிட்ட அத வாங்கி ஒரே அமுத்தல்ல தொறந்துட்டா. ஒரு வாய் அதுரச மாவ அள்ளிப் போட்டுக்கிட்டு, எனக்குந் தந்தா. அப்பலருந்து எங்கனயும் ரெண்டு பேரும் ஒண்ணாத்தா சுத்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE