ஹாட் லீக்ஸ்: செயலருக்கு யோகா ‘டிப்ஸ்’ கொடுத்த அமைச்சர்!

By காமதேனு

சர்வதேச யோகா தினத்தில் சென்னை அரசுப் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் துறை செயலர் ராதாகிருஷ்ணனும் மாணவர்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சற்றுத் தாமதமாகவே வரும் விஜயபாஸ்கர் இம்முறை முன்னதாகவே ஆஜரானார். தாமதமாக வந்துசேர்ந்த ராதாகிருஷ்ணனிடம், “என்ன சார்... வீட்ல யோகாவெல்லாம் பண்றதில்லையா?” என்று விஜயபாஸ்கர் கேட்க, “அப்பப்ப பண்ணிக்குவேன்...” என்று சொன்ன ராதாகிருஷ்ணன், “நீங்க ரெகுலரா பண்ணுவீங்களோ..?” என்றார். அதற்கு, “நிச்சயமா சார்... யோகா பண்ணலைனா நம்மால அங்கிட்டு இங்கிட்டு திரும்ப முடியாது..!” என்று சொல்லிச் சிரித்தார் அமைச்சர். யோகா விரிப்பில் உட்கார்ந்த பிறகும் செயலருக்கு யோகா குறித்து ‘டிப்ஸ்’ கொடுத்துக்கொண்டே இருந்தார் அமைச்சர்!

படம்: எல்.சீனிவாசன்

கொடியேத்த மறந்துட்டாங்கப்பா..!

அரசு அலுவலகங்களில் காலை 6 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி மாலை 6 மணிக்கு முன்னதாக இறக்குவது வழக்கம். ஆனால், கடந்த 19-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்ற மறந்துவிட்டார்கள். இதுகுறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனக் கருத்துகளை கிளப்பினார்கள். பதறிப்போன காக்கிகள், பகல் 12 மணிக்கு மேல் அவசர அவசரமாக தேசியக் கொடியை ஏற்றினர். “பழைய கொடி சேதாரமாகிவிட்டதால், புதுக் கொடி வாங்கிவந்து ஏற்றினோம்” என்று காலதாமதத்துக்குக் காரணம் வாசித்தார்கள். நம்பிட்டோம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE