குரங்கணி சித்தன் கதை - 14: ஆண் மரமா? பெண் மரமா?

By வடவீர பொன்னையா

சேரனுக்குப் பனம்பூ,

சோழனுக்கு அத்திப்பூ,

காடுகளையும் மரங்களையும் பாதுகாக்கணும்னுதான் ராஜ்யத்தை ஆளும் அரசர்களுக்கு, பூவோட பெயரைச் சொல்லி பெரியவங்க ஞாபகப்படுத்துனாங்க. அரசர்கள் மட்டுமில்லாம, படைவீரர்களும் இந்தப் பூவைத் தங்களுக்கு அடையாளமா வச்சுக்குவாங்க. இன்ன வீரன், இன்ன அரசனைச் சார்ந்தவன்னு வேறுபாடு தெரிஞ்சிக்கத்தான், சண்டை போடும்போது அவங்கவங்க நாட்டுப் பூவை, தலையிலயும், நெஞ்சிலயும் கோத்துக்குவாங்க. விஷயத்துக்கு வர்றேன்...

நம்ம சித்தன், பெரும்பிறவி பாண்டியனை மலை உச்சிக்குக் கூப்பிட்டு வந்துட்டான். ‘‘பாண்டியரே... குரங்கணி மலையிலிருந்து நந்திச்சாமி தப்பிச்சுப் போனது இப்பவும் ஒரு சூட்சுமமா இருக்கு. அவரால உங்களுக்கு ஆபத்து நெருங்கிக்கிட்டு இருக்குனு நினைச்சுத்தான், உங்களை இவ்வளவு தூரம் கூப்பிட்டு வந்திருக்கேன். நல்லா யோசிச்சுச் சொல்லுங்க பாண்டியரே... எங்க ஆதிகுடி மக்களையும் சேர்த்துக்கிட்டு, படைதிரட்டி நாயக்க மன்னரை எதிர்க்கணும்னு நந்திச்சாமிகிட்ட எப்பவாவது சொன்னீங்களா?’’

கொஞ்சம் தயங்கின பாண்டியன், ஒருவேளை நந்திச்சாமி ஏதாவது உளறி இருப்பானோனு நினைச்சு, ‘‘ஆமா சித்தா... இப்போதைக்கு குரங்கணி மலையில ஒளிஞ்சுக்குவோம். கொஞ்ச நாளைக்குப் பிறகு சித்தனோட மனசை மாத்தி, ஆதிகுடிகளோட படையை நம்ம படையோடு சேர்த்துக்கிட்டு, நாயக்கர் படையோட மோதுவோம்னு சொன்னேன்!’’

‘‘தப்புப் பண்ணிட்டீங்க பாண்டியரே! நந்திச்சாமியோட குணம் தெரியாமலா இத்தனை வருஷம் காலம் தள்ளுனீங்க? அவருக்கு அண்டிப்பிழைக்கும் குணம் இருக்கே தவிர, போர்க்குணம் கிடையாது. பிறவியிலேயே மூர்க்கம் இருந்தால்தான் போர்க்குணம் வரும். இதுவரை நீங்க தோத்துப்போனதுக்குக் காரணம் எல்லாமே நந்திச்சாமிதான். நேரம் வரும்போது இதை ருசுப்படுத்துறேன். நீங்களும் யோசிங்க ராசா!’’

பாண்டியனும் யோசனை செஞ்சிப் பார்த்தான். ‘மதுரை ராஜ்யத்தைக் காப்பாத்த சோழவந்தானுக்குப் படையோட போயி, தேவராயர்கூட சண்டை போடணும்னு சொன்னபோது, ‘கடைசியா போவோம் பாண்டியரே... மோத முடியலைன்னா சூழ்நிலையத் தெரிஞ்சு கட்டளைபோடுங்க. தப்பிச்சு வந்துருவோம். மதுரை அரசன் ஒரு ஸ்திரீ மூர்க்கன். அந்தப் பெண்பித்தனுக்காக ஏன் சண்டை போட்டு நம்ம உசுர காவு குடுக்கணும்?’னு இந்த நந்திச்சாமி சொன்னானே!’

‘‘நந்திச்சாமியோட புத்தியை நீங்களே புரிஞ்சிக்கிட்டீங்க. அவரை நம்பி எப்படிப் படை சேர்ப்பீங்க? நீங்க நினைக்கிற மாதிரி நாங்களும் உங்க கூட வரமாட்டோம். முதுவார்கள் எல்லோருமே சமாதானத்தைத்தான் விரும்புவோம். எங்க படை தற்காப்புப் படைதான். இந்தக் காடுகளையும், காட்டு விலங்குகளையும் காப்பாத்துற படைதான். அதுலதானே எங்க உசுரு இருக்கு. எங்க ‘கன்னி தெய்வம்’ ஏத்துக்கிட்ட அதே வாக்கை, நாங்களும் காப்பாத்துறோம். உயிர்பலிக்காக ஏங்க மாட்டோம். அதனாலதான் சொல்றேன், உங்ககூட படைதிரட்டி வர முடியாது.

இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட நந்திச்சாமி, நிச்சயமா நாயக்க மன்னரு கிட்ட சரணாகதி ஆகியிருப்பாருனு உறுதியா நம்புறேன், பாண்டியரே!’’

‘‘என்னால நம்பவே முடியல சித்தா’’ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, மரத்துல ஓடிக்கிட்டிருந்த அணில்கள் பொத்து பொத்துன்னு தரையில விழுந்து, உருண்டு ஓடுதுக. ரெண்டு மூணு நரிங்க வாலை மடக்கிக்கிட்டு ஓடுதுக. சித்தன் ஆகாசத்தைப் பார்த்தான். பறவைங்க படபடனு றெக்கைய அடிச்சிக்கிட்டு சலா வட்டம் போடுதுக...

‘‘பாண்டியரே! நாயக்கர் படை வந்திருச்சு! உஷாரா இருங்க. ஆளுக் கொரு திசையில தெறிச்சு ஓட வேண்டியிருக்கும். நீங்க உங்க ஆட்களைக் கூப்பிட்டுக்கிட்டு, தெக்கால கொழுக்கு மலைக்கு ஓடுங்க!’’னு சித்தன் அவசரப்படுத்தினான். முதல்ல பொம்மியக் காப்பாத்தணுமேனு சடசடனு வடக்கால இருந்த புதர்ல விழுந்தடிச்சு ஓடினான்.

அதுக்கு அவசியமே இல்லாம போச்சு... கண்ணுக்கு எதிர்த்தாப்பல நாயக்க படைவீரர்கள் பொம்மியையும், அவளோட புருஷன் கலிங்கா வையும் கையைக் கட்டி இழுத்து வந்தாங்க! சித்தனைப் பார்த்த படை வீரர்கள் ஓடிவந்து அவனை மடக்கிப் பிடிச்சாங்க. சித்தன் தப்பிச்சு ஓட முயற்சி செய்யல.

‘‘சித்தா... நம்ம ஆட்களை மரத்துல கட்டிப்போட்டு எங்களை மட்டும்

இழுத்து வந்துட்டாங்க. ‘யாரு பொம்மி, யாரு சித்தன், யாரு கலிங்கா’ன்னு கேட்டாங்க. நம்ம பேரு இவங்களுக்கு எப்படித் தெரியும்?’’னு கலிங்கா கேட்டான்

‘‘எல்லாம் அந்த நந்திச்சாமியாலதான். பயப்படாதீங்க. யாருக்காவது காயம் இருக்கா?’’

நாயக்க படையில இருந்த வீரமுத்து நாயக்கர், ‘‘யாருக்கும் காயமில்ல... நீதான் குரங்கணி சித்தனா...? பெரும்பிறவி பாண்டியன் எங்க...? அவனை ஒப்படைக்கலன்னா இனிமேதான் எல்லோரும் காயம், ரத்தம், சாவுன்னு சந்திப்பீங்க. சொல்லுங்க... எங்கே பாண்டியன்?’’

சித்தன் கொஞ்சம்கூட யோசிக்காம, ‘‘நேத்தே மலையேறி சேரநாட்டுக் குள்ள போயிட்டாரு. நான்தான் அனுப்பிவச்சேன்’’னு சொன்னான்.

‘‘அப்போ நீங்கதான் குற்றவாளி. நீங்க எல்லோருமே எங்களுக்கு அடிமைதான். ஓடினவங்களை எப்படிப் பிடிக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியும். தரைக்காட்டுக்கு உங்க எல்லோரையும் கூப்பிட்டுப்போறேன். எங்க போடப்ப நாயக்கர்கிட்ட உங்களை ஒப்படைக்கிறேன். ம்... திரும்புங்க போகலாம்!’’னு கட்டளை போட்டாரு, வீரமுத்து.

கொட்டக்குடி ஆத்துக் கரையில, அரண்மனை இடத்துக்காக, மருத மரங்களையும், வேம்பு மரங்களையும், பனை மரங்களையும் கோடாலிக்காரங்க வெட்டுறதை, போடப்ப நாயக்கர் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாரு. ஒருத்தன் நுங்கைப் பதமா சீவி நாயக்கருக்குக் குடுத்துக்கிட்டு இருந்தான்.

 சாயங்காலம் ஆகிருச்சு. சித்தன், பொம்மி, கலிங்கா மூணுபேரையும் இழுத்துக்கிட்டு வந்து போடப்ப நாயக்கர் முன்னாடி நிறுத்தினாங்க. நுங்கு சாப்பிடறதை நிறுத்தாம, கடைவாயில ஒழுகவிடாம, தலையைத் தூக்கி உறிஞ்சின போடப்ப நாயக்கர், ‘‘நீதான் சித்தனா? நீ சித்தன்னு எப்படி நம்புறது? மந்திரம், மாயஜாலம் தெரியுமா? கூடு விட்டுக் கூடுபாயும் கலை தெரியுமா?’’னு சிரிச்சுக்கிட்டே கேட்டாரு.

‘‘உங்களைப் போல அரச பரம்பரை இதயெல்லாம் நம்பிக்கிட்டு இருக்கீங்க. உங்ககிட்ட இருக்கிற பொன், பொருளுக்காகச் சிலபேர் செய்யும் கண்கட்டி வித்தைகளையும் நம்பி மோசம் போனீங்க. சிலபேர் தப்பிதமா சொல்லித்தான், எங்க முன்னோர்கள் வச்ச மரங் களை வெட்டி, காடுகளை அழிக்கிறீங்க..!’’ பதிலுக்குக் கோபமா சொன்னான் சித்தன்.

‘‘உங்க முன்னோர்கள் வச்ச மரமா? கூத்தா இருக்கே!’’

‘‘ஆமா! நாங்க இளமையா இருக்கணும்னு ஆதிகாலத்துல எங்க நாவி ராசா கொடுத்த மரங்கள, இந்த மலைக்காடு முழுசும் பரம்பரையா நட்டுக்கிட்டே புலம்பெயர்ந்திருக்கோம். எங்க ஆதி குடிகள் மூலமாதான் பாண்டிய நாட்டுலேயும், சேரநாட்டுலேயும் இந்தப் பனை மரங்கள் பச்சை நிற வானமா படிஞ்சுபோயிருக்கு! இதை வெட்டுறதுக்கு உங்களுக்கு அதிகாரமில்லை!’’

‘‘ம்ஹம்... உமக்கு என்ன வயசு?’’

‘‘ஆயிரத்தேழு பிறை!’’

புருவத்தைத் தூக்கி ஆச்சரியப்பட்ட நாயக்கர், ‘‘உன்னோட இளமையை மெச்சிப் பாராட்டுறேன். ஆனா, ஆக்கப்பட்ட பொருள் எல்லாம் அரசாங்கத்துக்குச் சொந்தம். ஆக்கவும் அழிக்கவும் எங்களுக்கு அதிகாரம் இருக்கு!’’

‘‘அரண்மனை கட்டுறேன்னு முல்லைவனத்தை அழிக்காதீங்க. எதிர்காலத்துல மழைக்குக் கஷ்டப்படுவீங்க, தண்ணிக்குக் கஷ்டப் படுவீங்க. கொட்டக்குடி ஆத்துல தண்ணியில்லைன்னா, உங்க அரண்மனையோட தாகத்துக்குத் தண்ணி கிடைக்காது. காட்டை அழிக்க உங்களுக்கு அதிகாரமில்லை!’’

‘‘நானே அரசு. ஆக்கவும் அழிக்கவும் எனக்குத்தான் அதிகாரம் இருக்கு! யாரங்கே... இந்த பொம்மியைத் தனிக் குடிசைல அடச்சு வைங்க. கலிங்காவை ஆத்துக்கு அந்தப் பக்கம் கொண்டுபோய்த் தலைய வெட்டுங்க!’’

‘‘ஆண் எது, பெண் எதுன்னு தெரியாம வெட்டுற உங்களுக்கு, அரசு அதிகாரம் மட்டும் எப்படித் தெரியும்?’’

‘‘என்னடா சொல்லற பரதேசி? ஆணையும் பெண்ணையும் எனக்குத் தெரியாதா?!’’

‘‘நீங்க வெட்டுற இந்தப் பனை மரங்கள்ல ஆண் மரம் எது? பெண் மரம் எதுன்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க? பெண் பனை மரம் நூறு இருந்தாலும், ஒரு ஆண் பனை மரம் இருந்தால் போதும்... நூறு பெண் மரமும் சூல் பிடிக்கும். ஆண் மரங்கள் எல்லாத்தையும் வெட்டினால் பெண் மரங்கள் எப்படிக் காய்க்கும்? நீங்க பனை நுங்கு எப்படிச் சாப்பிட முடியும்?’’

சரியான கேள்வி கேட்டான் சித்தன்.

பொம்மி - கலிங்கா, இந்த ரெண்டு ஜீவனும் இன்னைக்கு ராத்திரி கூடணுமே..!

-சொல்றேன்...

-வடவீர பொன்னையா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE