நீதிநாயகமே, காத்திருக்கிறது ஜனநாயகம்!

By காமதேனு

மிழக மக்கள் பரபரப்பாக எதிர்பார்த்த பதினெட்டு எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட இருவேறு தீர்ப்புகள் வந்திருக்கின்றன. இதன் மூலம் முன்றாம் நீதிபதியின் பொறுப்புக்கு முடிவை நகர்த்தியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இது, ஒரு முக்கியமான வழக்கை நம்முடைய நீதிமன்றங்கள் அணுகுவதில் உள்ள சிக்கல்கள், குறைபாடுகள் பற்றிய விவாதத்துக்கு மேலும் வலுவூட்டுகிறது. ‘சட்ட மன்றம் பெரிதா, நீதிமன்றம் பெரிதா’ என்ற சர்ச்சையை நோக்கி இப்படியான வழக்குகள் செல்வது நீதிமன்றத்தின் மீது மக்களுக்குள்ள நம்பகத்தன்மையைக் குலைக்கவே வழிவகுக்கும்.

நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்நோக்கி ஒரு சர்ச்சை வரும்போது, கால தாமதமின்றி அதைத் தெளிவுக்குக் கொண்டுவர வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு இருக்கிறது. ஒரு சாமானியனின் பார்வையில் இந்த வழக்கில் அவன் எதிர்பார்க்கும் நியாயம் என்ன? ஒன்று, இந்தப் பதவிநீக்கம் செல்லும் என்று சொல்லுங்கள் அல்லது செல்லாது என்று சொல்லுங்கள். எதுவாயினும் காலத்தோடு சொல்லுங்கள். ஏனென்றால், 18 தொகுதிகளில் பல லட்சம் மக்கள் சட்டமன்ற உறுப்பினர் இன்றி, தங்களுக்கான பிரதிநிதித்துவம் இன்றி காத்திருக்கின்றனர். தவிர, ஆளுங்கட்சிக்குப் பெரிய தனிப் பெரும்பான்மை இல்லாத சூழலில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்காலத்துடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது இந்த வழக்கு.

அப்படியென்றால், மிக அவசரமாகக் கருதி அணுக வேண்டிய வழக்கு அல்லவா இது? இப்படியா இழுத்தடிப்பது? ‘தாமதிக்கப்பட்ட நீதி நிராகரிக்கப்பட்ட நீதி’ என்றால், இந்த வழக்கை நீதிமன்றம் அணுகும் முறையை எப்படி வரையறுப்பது?

சென்னை உயர் நீதிமன்றம் இனியாவது மிக அவசர வழக்காகக் கருதி கையாள வேண்டிய வழக்கு இது. இந்த வழக்கு இப்போது தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் சார்ந்ததாக மட்டும் அல்ல; நீதிமன்றம் மீதான சாமானிய மக்களின் நம்பகத்தன்மை சார்ந்ததாகவும் மாறிவிட்டது என்பதை நீதியரசர்கள் உணர வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE