முடிவற்ற சாலை 6: கம்பனின் நினைவிடம்...

By எஸ்.ராமகிருஷ்ணன்

ஜப்பானுக்குப் போயிருந்தபோது ஜென் கவிகளின் பிதாமகனாகக் கருதப்படும் கவிஞர் பாஷோவின் மியூசியத்தைக்காணச் சென்றிருந்தேன். 1680-களில் பாஷோ, டோக்கியோவில் சிறிய குடில் அமைத்துத் தங்கியிருந் திருக்கிறார். அதன் நினைவாகவே இந்த மியூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பாஷோ மகத்தான ஹைக்கூ கவிஞர். ஜப்பானிய மொழியில் பாஷோ என்றால் வாழை மரம் என்று அர்த்தம். 1684-ம் ஆண்டு தனது சீடனுடன் ஈடோவிலிருந்து நீண்ட பயணத்தைத் தொடங்கினார் பாஷோ. ஆறு, மலை, காடு, பௌத்த மடாலயங்கள் என நீண்டு போனது இப்பயணம். தன் வாழ்வின் இறுதிவரை கவிதைகள் எழுதிக்கொண்டேயிருந்தார் பாஷோ.

மியூசியத்திற்குள் நுழைந்தபோது பௌத்த கோவிலுக்குள் நுழைந்து விட்டதுபோல அத்தனை அமைதி. பாஷோவின் வாழ்க்கை மற்றும் அவரது பயணங்கள் குறித்த வீடியோ காட்சி ஓடுகிறது. தலையில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பார்த்து ரசிக்கிறார்கள்… ஒரு மணி நேரம் ஓடக்கூடிய படமது.

பாஷோவின் கவிதைகள், மற்றும் அவரைப் பற்றிய குறிப்புகள் யாவும் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டுள்ளன, ஆங்கிலத்தில் ஒரு வாசகம்கூடக் கிடையாது.

மியூசியத்தைச் சுற்றிலும் அழகான தோட்டம் ஒன்று உள்ளது, கூடவே சிறிய மீன்குளம். பின்பகுதியில் சுமிதாஆறும் பாலமும் தென்படுகின்றன. மியூசியத்தின் உள்ளே நடந்து செல்லும் காலடி சப்தம் கூடக் கேட்கக் கூடாது என்பதற்காகத் துணிச்செருப்பு போல ஒன்றை அணிந்துகொள்ளச் செய்கிறார்கள். மியூசியத்தைப் பார்வையிட்டதன் நினைவாக அட்டையில் பாஷோவின் உருவம் கொண்ட முத்திரை பதித்துத் தருகிறார்கள். என்னிடமிருந்த பாஷோவின் கவிதை நூலில் அந்த முத்திரையைப் பதித்துக்கொண்டேன். நுழைவாயிலில் பாஷோவின் உருவத்தைப் போன்று அட்டை மாடல் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் தலைப்பகுதி ஓட்டையாக உள்ளது, அதில் நமது தலையைப் பொருத்தி புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

இரண்டு நிமிடம் பாஷோவாக மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் தலையை நுழைத்துக்கொண்டால் மட்டும் ஒருவரால் பாஷோவாகிவிட முடியாது என்றும் தோன்றியது.

முதல் தளத்தில் ஹைக்கூ வகுப்புகள் நடைபெறுகின்றன, அங்கே பயில்பவர்களில் பெரும்பகுதி இளைஞர்கள், பள்ளி மாணவர் கள். கண்ணாடிப் பெட்டகத்தினுள் பாஷோ வின் கையெழுத்துப் பிரதிகளையும் அவரது பயண வரைபடங்களையும், பயன்படுத்திய பொருட்களையும் வைத்திருக்கிறார்கள். அவரது வீட்டின் மாதிரி ஒன்றையும் செய்து வைத்திருக்கிறார்கள். பாஷோவின் கையெழுத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், சித்திர எழுத்துகளைப்போலவே இருந்தன. ஹைக்கூ என்பதே மொழியால் வரையப்பட்ட ஓவியங்கள்தானே.

பாஷோ அவரது தோட்டத்தில் வசித்த ஒரு தவளையை மிகவும் விரும்பியிருக்கிறார். சுனாமி அடித்தபோது அந்தத் தவளை காணாமல் போய்விட்டது. பாஷோ அதற்காக மிகவும் மனம் வருந்தினார். சில காலத்திற்க்கு பிறகு அந்தத் தவளை தானே பாஷோவின் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டது. அந்தச் சந்தோஷத்தை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார் பாஷோ. சுனாமியிலிருந்து மீண்ட தவளையின் உருவம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஒரு கவிஞனை இப்படித்தான் கௌரவிக்க வேண்டும். ஆள் உயரச் சிலை வைப்பது மட்டும் கௌரவமில்லை. அவரது கவிதையின் உலகம் எதுவென அறிந்து அதைக் காட்சிக்கு வைப்பதே உண்மையான கௌரவம். பாஷோவின் கவிதைகள் எளிமையானவை. கூழாங்கற்களைப் போலக் கச்சிதமானவை. தனித்த அழகுடையவை.

பாஷோ மியூசியத்தில் மட்டுமல்லாது, பல்வேறு பூங்காக்களில் பாஷோவின் கவிதைகளைக் கற்களில் அடித்து வைத்திருக்கிறார்கள். சிற்றோடை ஓடும் தண்ணீரின் அருகில் பாஷோவின் கவிதையும் இயற்கையின் வடிவமாக உருக் கொண்டுள்ளது. கவிஞனைக் கொண்டாடுவது என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

சமீபத்தில் டேவிட் ஷுல்மான் எழுதிய ‘தமிழ்: எ பயோகிராஃபி’ என்ற தமிழ் மொழியின், இலக்கியத்தின் வரலாற்றைப் பேசும் முக்கிய நூலை வாசித்தேன். 2000 வருட தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவது எளிதானதில்லை. தனது ஆழ்ந்த வாசிப்பு மற்றும் ஆய்வின் வழியே தமிழ் இலக்கிய வரலாற்றின் மீது புதுவெளிச்சம் பாய்ச்சுகிறார் ஷுல்மான்.

தமிழ் மொழி எவ்வாறு உருவானது என அதன் வேர்ச் சொல் ஆய்வில் தொடங்கி தமிழ் எழுத்துகள் உருவான விதம், அதன் பின்னுள்ள தொன்மங்கள், இசைத்தன்மை, வரலாற்றில் தமிழ் மொழியும் தமிழ் இனமும் உருவான விதம், சிந்து சமவெளித் தொடர்பு எனச் சரித்திரபூர்வமாக ஆய்வு செய்திருக்கிறார். இந்நூலின் வழியே தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் சிறப்பியல்புகள் குறித்தும் உலக அளவில் பெரும் கவனம் உருவாகிவருகிறது.

இலக்கண நூல்கள் உருவான விதம், அதன் பின்னுள்ள வரலாற்றுத் தகவல்கள், புராணச் செய்திகள். தொன்மங்கள், மாயக்கதைகள் அத்தனையும் ஒருசேரத் தருகிறார் என்பதால், ஆய்வுநூலை வாசிப்பது போலின்றி மேஜிகல் ரியலிச நாவல் ஒன்றைப் படிப்பது போல அத்தனை சுவாரஸ்யமாக வாசிக்க முடிகிறது.

டேவிட் ஷுல்மான், ஜெருசலத்தில் ஹீபுரு பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் மற்றும் சமய ஒப்பீட்டுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தவர். தமிழ்க் கோயில் தொன்மங்கள், தெய்வத் திருமணங்கள் குறித்து ஆய்வு நூல் எழுதியிருக்கிறார். தமிழ் தெலுங்கு செவ்வியல் கவிதைகளின் ஒப்பீட்டு ஆய்வையும் மேற்கொண்டுள்ளார்.

‘தமிழ் வரலாறு’ நூலில் டேவிட் ஷுல்மான், திருவள்ளுவரையும் கம்பரையும் வியந்து வியந்து போற்றுகிறார். தமிழ் இலக்கியத்தின் அழியாக் கவிதைகளைத் தந்த இந்தப் பெரும் கவிகளும் தமிழர்கள் வாழும் நாடுதோறும் கொண்டாடப்படுகிறார்கள். விழா நடத்தப்படுகிறார்கள்.

சிலைகள் வைத்தும் விழா எடுத்தும் கம்பனைக் கொண்டாடும் நாம் அவரது நினைவிடத்தை முக்கியப் பண்பாட்டு மையமாக உருவாக்க ஏன் மறந்து போனோம்?

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவிடம் நாட்டரசன் கோட்டையை ஒட்டிய கருதுபட்டி என்ற ஊரில் இருக்கிறது. சென்ற ஆண்டு அதைக் காணச் சென்றிருந்தேன். இடத்தைக் கண்டுபிடித்துப் போவது ஒரு சவால். அதுவும் வழியில் விசாரிக்கும் பலருக்கும் கம்பர் யார் என்றே தெரியாமல் இருப்பது சாபக்கேடு. முறையாகப் பராமரிக்கப்படாத சாலைகள். நந்தவனம் போன்ற ஒரு இடத்தில் உள்ளது கம்பர் திருக்கோயில். 1939-ல் கம்பர் சமாதியைக் கண்டறிந்து அதைப் பராமரிக்கக் காரணமாக இருந்தவர் காரைக்குடி கம்பன் அடிப்பொடி கணேசன்.

நாட்டரசன் கோட்டை பகுதியில் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பற்று வளரட்டும் என்பதற்காக இந்தச் சமாதியிலிருந்து மண்ணெடுத்துச் சேனை வைப்பது வழக்கம் என்கிறார்கள்.

இதுதான் கம்பன் சமாதியா என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. ஆனால், கம்பன், நாட்டரசன் கோட்டையில் இறந்துபோனார் என்றே கம்பர் வரலாறு கூறுகிறது.

நுழைவாயிலில் ஒரு வளைவு காணப்படுகிறது. உள்ளே நடந்து சென்றால் சிறிய கோயில் போன்ற அமைப்பில் உள்ளது நினைவிடம். இதற்குக் காவலராக ஒருவர் பணியாற்றுகிறார். ஒரு வாரத்துக்கு ஒன்றிரண்டு பார்வையாளர்களே வந்து போகிறார்கள். சுமார் ஆயிரம் ஆண்டு களாக அந்த நினைவிடம் தனியார் வசம் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை இங்கே விழா நடக்கும் என்றார்கள்.

சோழநாட்டில் பிறந்த கம்பன், ‘மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ’ எனச் சோழ மன்னனைப் பழித்துப்பாடிவிட்டு, சோழநாடு நீங்கி தனது இறுதிக் காலத்தை நாட்டரசன் கோட்டையில் கழித்தான் என்கிறது அவரது சரிதம்.

கம்பர் திருக்கோயிலுக்கு வந்து போகிற பார்வையாளர்களுக்கு விளக்கம் சொல்வ தற்கோ, எளிய சந்தேகங்களைத் தீர்ப்பதற்கோ யாருமில்லை. முழுமையான தகவல்கள் அடங்கிய தகவல்பலகை கூடக் கிடையாது. கவிச்சக்கரவர்த்திக் கம்பனுக்கே இதுதான் நிலைமை என்றால் நவீன கவிஞர்கள் என்ன ஆவார்கள்?

தமிழகத்தில் எவ்வளவு கவிஞர்கள் இருப் பார்கள். எண்ணிக் கணக்கிடவே முடியாது. இதுவரை எவ்வளவு கவிதை நூல் வெளியிட் டிருப்பார்கள். நிச்சயம் லட்சத்துக்கும் மேல் இருக்கும். தமிழ் மொழியின் சிறப்பே கவித்துவ மான மொழி என்பதுதானே. கவிதையின் மேல் இவ்வளவு ஈடுபாடு உள்ளவர்கள் இருந்தும் கம்பன் போன்ற மகாகவியின் நினைவிடம் ஏன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது?

இங்கே கம்பராமாயணத்தைச் சித்திரங்களு டன் கூடியதாக உருவாக்கி பெரிய மணிமண்டபம் அமைக்கலாமே. ஆண்டுதோறும் தமிழகம் முழுவதுமுள்ள கவிஞர்கள் இங்கே ஒன்றுகூடி பெரும் கவிதை விழா ஒன்றை நடத்தலாமே.

நவீன மலையாளத்தின் பிதாவாகக் கருதப் படும் துஞ்சத்து எழுத்தச்சன் நினைவு இல்லமான துஞ்சன்பரம்பில் இன்றும் கல்வி தொடங்கும் நாளில் சிறுவர்களுக்கு எழுத்தறிவித்தல் விமரிசையாக நடைபெறுகிறது. இதில் மலையாள எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறுபிள்ளைகளின் கைபிடித்து எழுத்துச் சொல்லித்தருகிறார்கள்.தமிழ்நாட்டில் எழுத்தறிவித்தலுக்கு உகந்த இடம் கம்பர் நினைவகம்தானே. நாட்டரன் கோட்டையைத் துஞ்சன்பரம்பு போல மாற்றி யமைத்தால், நாமும் எழுத்தறிவித்தல் பணியைத் தொடங்கலாமே.

(பயணிக்கலாம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE