ஆடைகட்டி வந்த நிலவு

By காமதேனு

சரோஜா என்ற பெயரை எப்படி சினிமாவிலிருந்து பிரித்தெடுக்க முடியாதோ, அப்படித்தான் லலிதாவும். ஐம்பது மற்றும் அறுபதுகளில் பல லலிதாக்கள் திரையுலகில் வலம் வந்தார்கள். பெயர்க் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக இந்த லலிதாவின் பெயருக்கு முன்னால் அவர் குடியேறி வாழ்ந்த தாம்பரத்தைச் சேர்த்துவிட்டார்கள். தாம்பரம் என்.லலிதா, நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் அண்ணி என்றால் பலர் ஆச்சரியப்படலாம்!

எம்.ஆர்.ராதாவின் நாடக உலக நண்பர்களில் முக்கியமானவர் நடிகர் கே.எம்.நம்பிராஜன். இவர்தான் குமரிமுத்துவின் அண்ணன். நம்பிராஜனைத்தான் தாம்பரம் லலிதா மணந்துகொண்டார். நூற்றுக்கணக்கான மேடைகள் ஏறிய இந்தநடன நட்சத்திரம், குடும்பத்தின் வறுமையைத் தாங்குவதற்காக நடனம், நாடகம்,திரைப்படம் எனக் கலைத்துறையில் தன்னை கரைத்துக்கொண்ட துயரக் கவிதை!

‘கண்கள் ரெண்டும் வண்டு நிறம்கன்னம் ரோஜாச் செண்டு நிறம்கலையே வடிவாய் வருவாள்அவளங்கம் தங்க நிறம்’ - என்ற தோழியின் வர்ணனை பாடலுக்குச் சற்றும் குறைவில்லாத தோற்றப் பொலிவுடன் கன்னிகா என்ற நாகக் கன்னிகையாக ‘அமுதவல்லி’ (1959) படத்தில் தோன்றுவார் தாம்பரம் லலிதா. தமிழ் சினிமாவின் மைல்கல் படைப் பான ‘சந்திரலேகா’ படத்தின் கலை இயக்குநர் ஏ.கே.சேகர் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து இயக்கிய படம் இது. இதே படத்தில் லலிதாவைப் பார்த்து…

‘ஆடை கட்டி வந்த நிலவோ - கண்ணில்மேடை கட்டி வாழும் குயிலோ’ - என்று டி.ஆர்.மகா லிங்கம் பாடுவார். இன்றும் பசுமையான அந்த டூயட் பாடலில் ஒயிலாய் தவழ்ந்தாடும் லலிதாவின் முகம்அத்தனை சீக்கிரம் மறக்கக்கூடியது அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE