அடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்!

By காமதேனு

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 60 சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண்கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்கள், ‘பழைய கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிப் பார்த்தேன்' என்று ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இது பெரிய சவால். தமிழில் நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் எதுவுமே இல்லை. சரியான புத்தகமும் இல்லை.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியில் கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் மிகப்பெரிய பிரச்சினை, ‘எதை வெச்சு படிக்கறதுனே தெரியல' என்பதுதான். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு அரசு தயாரித்துக் கொடுத்த ஒரு புத்தகம் தவிர பெரிய அளவில் எதுவும் சந்தையில் இல்லை. ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு அப்படியில்லை. ஏகப்பட்ட புத்தகங்கள் கிடைக்கின்றன. எல்லோரும் சொல்வது போல 12-ம் வகுப்பு பாடங்கள் மட்டுமே நீட் தேர்வுக்குப் போதுமானவை என்று சொல்ல முடியாது. சி.பி.எஸ்.இ-யின் பிற வகுப்புகளிலிருந்தும்கூட கேள்விகள் வருகின்றன. அது மட்டுமில்லாமல் நீட் மாதிரியான தேர்வுக்கு தனித்த கவனத்துடன் படிக்க வேண்டியிருக்கிறது.

'ப்ளஸ் டூ-வில் பிள்ளைகளுக்குப் படிக்கிறதை விட்டா என்ன வேலை?' என்று மேம்போக்காகச் சொல்கிறார்கள். அமர்ந்து படித்தால் மட்டும் மதிப்பெண் வாங்குகிற சூட்சுமம் நீட் தேர்வில் இல்லை. இயற்பியல், வேதியியல் பாடங்களில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கை வெகு அதிகம். எல்லாவற்றையும் திருகி, நுணுக்கிக் கேட்டு வைக்கிறார்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை இழக்க நேரிடும் என்கிற புரிதல்கூட கிராமப்புற மாணவர்களிடம் இல்லை என்பதுதான் நிஜம்.

நம்முடைய கல்வித் திட்டம் அப்படியானதாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு தினசரி வகுப்பு, வார இறுதியில் வகுப்பு என்று வறுத்து எடுக்கிறார்கள். சூட்சுமங்களைச் சொல்லித்தருகிறார்கள். பழைய கேள்விகளைக் கொடுத்து அவற்றை தீர்க்கச் சொல் கிறார்கள். இதெல்லாம் கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE