“சினிமாக்காரர்களால்தான் தமிழக அரசியல் சீரழிந்துவிட்டது. இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழக மக்கள் கமல், ரஜினியை எல்லாம் கடைவிரிக்க விட மாட்டார்கள்..!” இப்படிச் சொல்வது நம்மூர் அரசியல்வாதி அல்ல... ரஷ்ய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சேகர் சாமியப்பன்!
ஜூன் 8,9,10 தேதிகளில் காஞ்சிபுரத்தில் உலக தமிழ்ச் சங்கங்களின் மாநாடு நடக்கிறது. இதற்காகத் தமிழகம் வந்திருக்கும் சேகர் சாமியப்பனைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் காமதேனுவுக்கு அளித்த காரசாரமான பேட்டியிலிருந்து...
ரஷ்ய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிக் கொஞ்சம் பேசலாமா..?
மாஸ்கோவின் புஷ்கின் பல்கலைக்கழகத்தில் முன்பு மாணவர் மன்றமாக இருந்ததை நாங்கள்தான் 1993-ல், ‘மாஸ்கோ தமிழ்ச் சங்கம்’ என்று மாற்றினோம். மாஸ்கோவில் சுமார் 70 தமிழ்க் குடும்பங்கள் இருக்கிறோம். இதில்லாமல், உலகம் முழுவதும் இருந்து அங்கு வந்து படிக்கும் தமிழ் மாணவர்கள் 4,000 பேர் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து மாஸ்கோவில் தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் வளர்க்கும் வழிகளை முன்னெடுத்தோம். இப்போது, இன்னும் ஆறு மாநகரங்களிலும் தமிழ்ச் சங்கங்களைத் தொடங்கி, ரஷ்யாவின் சுமார் 40 ஆயிரம் தமிழர்களையும் ஒருங் கிணைத்திருக்கிறோம். மாஸ்கோ தமிழ்ச் சங்கத்தையும் ஒன்றிணைந்த ‘ரஷ்ய தமிழ்ச் சங்கம்’ ஆக்கியிருக்கிறோம்.