கடை விரிக்கும் கல்லூரிகள்… களைகட்டும் கல்விக் கொள்ளை…!

By காமதேனு

சமீபத்தில் ஒரு விளம்பரப் பலகையைப் பார்க்க நேர்ந்தது. அதில், ‘முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஒரு ஆண்ட்ராய்டு அலைபேசி இலவசம்' என்று அறிவித்திருந்தார்கள். பள்ளிக்கே இப்படி என்றால், கல்லூரிகளுக்குக் கேட்கவும் வேண்டுமா? சென்னைப் புறநகர் பகுதிகளில் பொறியியல் கல்லூரியின் முகவர்கள் வீட்டுகே வந்து ‘கேன்வாஸ்’ செய்கிறார்கள். ‘மதிப்பெண் எல்லாம் பிரச்சினையே இல்லை; எங்கள் கல்லூரியில் சேர்ந்தால், முதலாம் ஆண்டு பேருந்துக் கட்டணம் இலவசம்’ என்று அறிவிக்கிறது ஒரு கல்லூரி. இன்னொரு கல்லூரியோ, ‘அரசு வேலைக்கே அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தருவோம்’ என்று அடித்துவிடுகிறது. இன்றைய தேதியில் ஜோராக நடக்கும் வியாபாரம் இதுதான். விலை போவது மதிப்பெண்கள் மட்டுமல்ல... மாணவனின் வாழ்க்கையும்தான்! என்னதான் நடக்கிறது இங்கே... கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

‘கட் ஆஃப்’ குளறுபடிகள்

பொறியியல் படிப்புக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் கட் ஆஃப் மதிப்பெண், பொதுப் பிரிவினருக்கு 100-க்கு 70; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 45%, பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 50% தேவை. பட்டியல் பிரிவு, பழங்குடியினர் பிரிவினருக்குத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால், அனைத்துப் பிரிவினருக்கும் வெறும் தேர்ச்சி பெற்றால் போதும் என்று தகுதியிழப்பு செய்ய வேண்டியவர்களையும் சேர்க்கிறார்கள். சில கல்லூரிகள் இன்னும் மோசம்... 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களையே வைத்து சேர்க்கையை முடித்துவிடுகிறார்கள்.

‘பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் எப்படி வந்தாலும் பரவாயில்லை. முதலில் அட்மிஷனை முடிச்சிடுங்க... அப்புறம் இடம் கிடைக்காது...’ என்று சொல்லி அட்வான்ஸ் பணத்தைக் கறந்துவிடுகிறார்கள். மதிப்பெண் குறையக் குறையக் கட்டணம் எகிறும் என்பதுதான் கணக்கு. அதேபோல், அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டும்தான் ஒதுக்கீடு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. சுயநிதிக் கல்லூரிகளில் ஒதுக்கீடு முறையை ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE