குரங்கணி சித்தன் கதை - 12: வஞ்சகன் ஒருவன்

By வடவீர பொன்னையா

ஒவ்வொரு விலங்குக்கும் பறவைக்கும் விஷ ஜந்துக்கும் தனித்தனிக் குணங்கள் இருக்கு! சூது, வாது, வஞ்சகம், ஏளனச் சிரிப்பு... இதெல்லாம் அதுக்குத் தெரியாது. அதுக்குத் தெரிஞ்சதெல்லாம் ஆகாரத்துக்கு வேட்டையாடும், அளவாச் சாப்பிடும், அழகு காட்டும், இணை சேரும், இனப்பெருக்கத்துல ஆர்வம் காட்டும். தனக்கு ஆபத்து வரும்போது மட்டும்தான் கத்தும், உறுமும், சீறும், எதிர்த்து முட்டும். மத்தபடிக்கி, பழிவாங்குற சமாச்சாரம் எல்லாம் இந்தக் குறைஞ்ச அறிவு ஜீவன்கள்கிட்ட இல்ல.

இந்த மனுசப் பயல் எல்லா மிருகக் குணத்தையும் பழகி வச்சிருக்கிறது மட்டுமில்ல... கூட இருந்து குழிபறிக்கிற குணம்தான் மனுசன் கடைசியாக் கத்துக்கிட்ட குணம்! சிங்கம், புலி, கரடி, யானைக்குப் பயந்த குரங்குக எல்லாம் மரத்து மேல ஏறியும், தண்ணியில குதிச்சும் தப்பிச்சுப் பழகிருச்சு! கொடூரமான விலங்குகள எதிர்த்து முட்டி மோதி உசுர விடுறதுக்குத் தயாரா இல்லாத குரங்குகதான் நாம. மரத்திலேயும் குகையிலேயும் ஒளிஞ்சிருந்து, புத்திசாலித்தனம் பழகி, அறிவை வளர்த்துக்கிட்ட பரம்பரை நாமதான். அந்த அறிவை வச்சுத்தான் அவ்வளவு பெரிய யானைகளையும், சிங்கம், புலி, கரடிகளையும் கூண்டுல அடச்சு வச்சு வேடிக்கை காட்டுற அளவுக்கு வளர்ந்துட்டோம்!

அறிவு வளர்ந்த மனுசங்கள்ல மூணு பிரிவு - விலங்கு, மனுசன், சித்தன்!

எல்லாம் தனக்குதான்னு வாழுறவன் பேராசை உள்ளம் படைச்ச விலங்கு; பாதி தனக்கும் பாதி பிறருக்கும் வாழுறவன் அன்புள்ளம் படைச்ச மனுசன்; பிறருக்காகவே தொண்டூழியம் செய்து வாழுறவன் அருள் உள்ளம் படைச்ச சித்தன்!

குரங்கணி மலையடிவாரத்துல அடர்த்தியான காட்டுக்குள்ள படை பரிவாரங்களோட போடப்ப நாயக்கர் வந்து சேர்ந்தாரு. முந்தலுக்கு முன்னாடியே, கொட்டக்குடி ஆறு தரையிறங்கி ஆயாசமா ஓய்வு எடுக்கிற இடம்... பெரிய பெரிய மரங்கள் தலை அசைச்சு ஆகாசத்துக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருந்திச்சு. இதெல்லாம் யார் கொடுத்த காணிக்கை?

கொடுக்காப்புளி, தணக்கு, கோங்கு, தேக்கு, தோதகத்தி, சரக்கொன்றை, சடச்சி, சிறுநாகப்பூ, வேங்கை, வேம்பு, சுந்தரவேம்பு, மருத மரங்கள் எல்லாம் இப்படி வளர்ந்து கிடக்கிறது பார்த்து, அதிசயப்பட்டு ரோம புளங்கிதம் ஆகிட்டாரு போடப்ப நாயக்கர். என்னதான் பாண்டிய நாட்டை வளச்சுப் பிடிச்சுட்டாலும், பெரும்பிறவி பாண்டியன் சூழ்ச்சி, சூது, வாது, வஞ்சகம் பண்ணுவான்னு பயந்துகிட்டுத்தான் இருந்தாரு அதுக்கு என்ன உபாயம்னு ஒரே யோசனையில இருந்தாரு.

அப்பதான், நீளமான தலைப்பாகை உருட்டிக்கட்டி, தோள்ல கம்பளி போட்டு வீரமுத்து நாயக்கர் வந்தாரு.

‘பூசாரி சேவுகன் கும்பிடுறேன் ராசா... பெரும்பிறவி பாண்டியன், குடும்பத்தோட மூணு இடத்துல ஒளிஞ்சிருக்க தோது இருக்கு ராசா. அரிகேசரிநல்லூர்ல அவங்க கட்டின கோயிலுக்குள்ள சுரங்கம் இருக்குனு பேசிக்கிறாங்க. அதுல ஒளிஞ்சிருக்கலாம்னு நம்ம ஒற்றன் ருசுப்படுத்துறான். இன்னொரு பக்கம் குரங்கணி மலைக்குள்ளும், கொழுக்கு மலைக்குள்ளும் ஒளிஞ்சிருப்பான்…’னு தயங்கித் தயங்கி சொன்னாரு.

எரிச்சலான போடப்ப நாயக்கர், ‘பெரும்பிறவி பாண்டியன் எங்கதான் இருக்கான்? அவன் தலைதான் முக்கியம். எப்படியாவது அவனைத் தேடி, தலையை வெட்டிக் கொண்டுவாங்க!’னு கட்டளை போட்டாரு.

‘பாண்டியன் தந்திரக்காரன் ராசா! அப்படி சுளுவா அவனக் கட்டித் தூக்கிற முடியாது ராசா. நாமலும் தந்திரம் பண்ணித்தான் அவனை வரவைக்கணும்... வளச்சுப் பிடிக்கணும். அவங்க தாத்தா ராசசிம்ம பாண்டியன் அரிகேசரி நல்லூர்ல ஒளிஞ்சிருந்து, அங்கன இருந்த சனங்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு ஆண்டது மாதிரி... அவரோட பேரன் பெரும்பிறவி பாண்டியனும் எங்க ஒளிஞ்சிருந்தாலும் சனங்களோட சேர்த்தி ஆகிவிடுவான்.

நானும் ஒரு உபாயம் சொல்றேன் ராசா... இங்க கொட்டக்குடி ஆறும் இருக்கு, மலைப்பிரதேசமாவும் இருக்கு. நீங்க சுப்பிரமணியருக்கு ஒரு கோயில் கட்டி ராஜதானிய ஆரம்பிங்க ராசா... மகோன்னதமா நடக்கும்!’

‘அதிருக்கட்டும்... முதல்ல அரிகேசரி நல்லூருக்குப் படைய அனுப்புங்க. பாண்டியனை அங்க தேடச் சொல்லுங்க. ரெண்டாவதா குரங்கணி மலைக்கு இன்னொரு படைய அனுப்புங்க. எப்படியும் மாட்டிக்குவான்!’

இந்தக் குரங்கணி மலைக்கும், அரிகேசரி நல்லூர் கிராமத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்கு. ஒரு காலத்துல ராசசிம்ம பாண்டியன் சோழனுக்கு பயந்து காட்டுல ஒளிஞ்சுக்கிட்டு இருந்தாருனு சொன்னேன் இல்லையா, அந்த இடம்தான் சுரபி ஆறு (சுருளி ஆறு) கலக்குற இடம். செடிகள், கொடிகள், வேர்கள், இலைகள் தழுவி மூலிகை தீர்த்தமாப் பொங்கி வரும் ஆறு. பூலான் மரங்கள் வேர்விட்டு செழும்பா இருந்துச்சு. பசுமை கூடுதல். கரையோரத்துல ஆடு, மாடுகளை மேய்ச்சிக்கிட்டு ஆயர்களும் குடியிருந்தாங்க.

இந்தப் பூலாங்காட்டுல, பால்&தயிரோட ஆகாரங்கள் கிடைக்கும்னு நெனச்ச ராசசிம்மன், தன் சேவுகமார்களோட அங்கேயே வசதி பண்ணிக்கிட்டான். அந்த ஆயர்குடி கிராமத்துல இருந்த ஆயர்குலத் தலைவனை வரச்சொல்லி, ‘எனக்குத் தினமும் காலைல பால் கொண்டுவந்து சேர்க்கவேண்டியது ஒம் பொறுப்பு. அதுக்கு வேண்டிய மானியம் கொடுக்கிறேன்’னு கட்டளை போட்டாரு.

இப்படித்தான் முதல் நாள் காலைல, பூலான்மரக்காடு ஒத்தையடிப் பாதை வழியா பால் குடத்தைத் தலைல சுமந்துக்கிட்டு வந்தாரு ஆயன். ஒரு இடம் வந்ததும் வேர்ல கால் இடறி கவுந்து விழுந்தாரு. பால் பூராவும் கொட்டிப்போச்சு. ராசாவுக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு பயந்துபோயித் திரும்பிட்டாரு. மறுநாளும் பால் குடம் கொண்டுபோகும்போது அதே இடத்துல, அதே வேர்ல கால் இடறிப் பால் கொட்டிப்போச்சு. பால் கொண்டுபோகலைன்னா ராசா கோபப்பட்டு ஏதாவது தண்டனை கொடுப்பாரோ, வெறுத்து ஒதுக்குவாரோனு பயந்தான். ஆத்திரப்பட்ட ஆயர் தலைவன் கோடாரி எடுத்து அந்த வேரை வெட்ட ஆரம்பிச்சான். வெட்ட வெட்ட வேர் நீளமா போய்க்கிட்டே இருந்துச்சு. இந்த மரம் இருந்தால்தானே வேர் பரவும், அதனால மரத்தையே வேரோட வெட்டிச்சாய்ச்சிறலாம்னு நெனச்ச ஆயன் ஆணிவேரைத் தோண்டி வெட்டினாம் பாருங்க... அடியில இருந்தஒரு கல்லு மேல கோடாரி விழுந்து செக்கச்செவேர்னு ரத்தமா கசியஆரம்பிச்சதாம். பயந்து அடிச்சு விழுந்து எந்திருச்சு ஓட ஆரம்பிச்சான் ஆயன், ராசசிம்ம பாண்டியன்கிட்ட போயி, தவிச்சு நின்னான்.

ரெண்டு நாளா வராத ஆயனைப் பார்த்த ராசசிம்மன் கோபப்பட்டு, ‘ஏன் ரெண்டு நாளா பால் கொண்டுவரல? எனக்கு இதுதான் மரியாதையா? இன்னிக்கும் வெறுங்கையோட வந்திருக்க’னு கண்சிவந்து கேட்டாரு. ஒரு வழியா மயக்கம் தெளிஞ்சு பேசின ஆயன், நடந்த கதையைச் சொல்லி, ‘கல்லுல ரத்தம் பார்த்து மயங்கி விழுந்துட்டேன் ராசா’னு அழுதான்.

ராசசிம்ம பாண்டியன் பதறி எழுந்திருச்சு, அந்த இடத்தைப் பார்க்கணும்னு பணியாட்களோட போனான். வேருக்கடியில கல்லுல இருந்து செங்குருதி கசிஞ்கிட்டே இருந்துச்சு. அந்தக் கல்லை இன்னும் கொஞ்சம் தோண்டினப்போ, அப்படியே திகைச்சுப்போனாரு..! அது சிவலிங்கம்!

ராசசிம்மனுக்கு கண்ணுல தண்ணி பெருகி, ‘இந்தக் கோலத்துல சிவலிங்கத்தைக் காணவா இந்தப் பிறவி எடுத்தேன்னு அந்த லிங்கத்தைக் கட்டிப்பிடிச்சாரு. உடனே செங்குருதி மாறி ஆகாசம் ஊடுருவும்படி சோதிமலையாய் நின்னது அந்த உருவம். முகம் தெரியல. ஆடினாரு, பாடினாரு. நீ இவ்வளவு உசரமா இருந்தா உன்முகம் பார்த்து எப்படி பூசிப்பேன்? எப்படிக் கும்பிடுவேன்? அருள்கூர்ந்து இறங்கி என் அளவுக்கு வா’னு கெஞ்சினாரு. அவரு கேட்டுக்கிட்டப்படிக்கே சிவபெருமான் அளவுக்கு அளவாக குறுகி நின்னாரு.

ஆர்வம் மேலாகி பாண்டியன், சிவபெருமானை ஆரத்தழுவி அழுந்திக் கட்டிப்பிடிசாரு. பெருமானும் ஆசிர்வாதம் பண்ணி மறைஞ்சாரு.

அந்த இடம்தான் அரிகேசரிநல்லூர் அவன் கட்டின கோயில்தான்பூலாநந்தீஸ்வரர் கோயில். இப்ப அந்த இடத்துக்கு பேர் சின்னமனூர்.

இதுக்குப் பிற்பாடு, மதுரையில நாயக்கர் ஆட்சி வந்தபிறகு, திருவிதாங்கூர் மன்னர் ரவிவர்மன், மதுரை நாயக்கர் அரசி ராணிமங்கம்மாவுக்குத் தரவேண்டிய திறைப்பொருளைக் கொடுக்க மறுத்து சண்டைக்கு வந்தார். 1697-ல மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதியில மங்கம்மாவின் தளபதி நரசப்பர் தலைமையில பெரிய சண்டை நடந்துச்சு. அப்போ, அரிகேசரி நல்லூர் அதிகாரி சின்னம கொண்டல நாயக்கரும், காட்டூர் பாளையக்காரர் உத்தப்ப கொண்டம நாயக்கரும், நரசப்பருக்கு ஒத்தாசையா இருந்து சண்டை போட்டு திருவிதாங்கூர் படையைத் தோற்கடிச்சாங்க. கண்ணகிக் கோட்டம் உட்பட அவங்க கைப்பற்றின இடத்தை மீட்டதோட ரவிவர்மன்கிட்டயிருந்து திறை, பொன், பீரங்கி எல்லாத்தையும் அள்ளிக்கொண்டுவந்து ராணிமங்கம்மாகிட்ட சேர்த்தாங்க.

இந்தக் காரணமாகத்தான், அரிகேசரி நல்லூர்ங்கிற பேர ‘சின்னம கொண்டல நாயக்கனூர்’ (சின்னமனூர்) அப்படினும், காட்டூர்ங்கிறபேர ‘உத்தப்ப கொண்டம நாயக்கர் பாளையம்’ (உத்தமபாளையம்) அப்படினும் மாத்தி வச்சி அவங்களுக்குப் பெருமை சேர்த்தாங்க!

இந்தக் கதையை கேட்டுக்கிட்டு இருந்த ராசசிம்ம பாண்டியனுக்கு முன்னாடி வந்து நின்னான் நந்திச்சாமி..!

-சொல்றேன்

-வடவீர பொன்னையா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE