விஜயகுமாரியுடன் ஜோடியாக நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்?

By காமதேனு

கண்ணகியைத் தாய் தெய்வமாக வழிபட்டுவரும் பண்பாட்டு மரபு நம்முடையது. ஆனால், சென்னை மெரினா கடற்கரையில் சீற்றத்துடன் நிற்கும் கண்ணகி சிலை நிறுவப்பட்டதன் பின்னணியில் ஒரு திரைப்படத்தின் வெற்றி மறைந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் ‘கோவலன்’ என்ற பெயரில் தெருக்கூத்தாகவும் நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டு வந்தது. அதை முதன்முதலில் ‘கண்ணகி’ என்ற தலைப்பில் திரைப்படமாகத் தயாரித்தது ஜுபிடர் பிக்சர்ஸ். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கண்ணாம்பா அதில் கண்ணகியாகத் தோன்றினார். இளங்கோவனின் வசனத்தை அனல் தெறிக்கும் குரலில் பேசி, கண்ணகி என்றால் அது கண்ணாம்பா என்று சொல்லவைத்தார். ‘கண்ணகி’ (1942) வெளியாகி 22 வருடங்களுக்குப்பிறகு கலைஞரின் திரைக் கதை, வசனம், தயாரிப்பில் 1964-ல் வெளியானது ‘பூம்புகார்!’

அதில் கண்ணகியாகத் தோன்றிய விஜய குமாரியின் தமிழ் உச்சரிப்பையும் உடல்மொழியும் கண்டு தமிழ் ரசிகர்கள் மிரண்டுபோனார்கள். “கண்ணகி கதாபாத்திரத்தில் நீ நடித்ததைக் கண்டபோது, எனக்கு மட்டுல்ல; பலருக்கும் கண்ணகி உன்னைப்போல்தான் இருந்திருப் பாரோ என்று எண்ணத் தோன்றும். உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று விஜயகு மாரியைப் மனமாரப் பாராட்டினார் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். இப்படிப் பாராட்டிய எம்.ஜி.ஆர். தனக்கு ஜோடியாக நடிக்க விஜயகுமாரியை அமர்த்தியபோது, “விஜயகுமாரி என் தம்பியின் மனைவி. அதனால் நான் ஜோடியாக நடிக்கக் கூடாது.” என்று மறுத்தார். 'சவாலே சமாளி' படத்தில் விஜயகுமாரியைத் தனக்கு தங்கையாக நடிக்க அனுமதித்தார்!

வெற்றிகரமான திராவிட சினிமாக்களில் ஒன்றாக ‘பூம்புகார்’ வெளியாகி முத்திரை பதித்தது. கண்ணகிக்குச் சிலை அமைக்க முடிவுசெய்தார் அறிஞர் அண்ணா.  ‘பூம்புகார்’ படத்தில் வலது கையில் ஒற்றைக் கால் சிலம்பைத் தூக்கிப்பிடித்து, இடது கையின் சுட்டுவிரலை மன்னனை நோக்கி நீட்டி, “நீயே கள்வன்...” என தர்பார் மண்டபத்தைக் கிடுகிடுக்க வைப்பார் விஜயகுமாரி. அந்தக் காட்சியின் தோற்றமே கண்ணகி சிலையின் தோற்றத்துக்கும் தேர்வுசெய்யப்பட்டது. அதை இப்போது நினைவு கூர்கிறார் விஜயகுமாரி. “நாங்கள் தேனாம்பேட்டையில் வசித்தபோது  சூரியன் உதிக்கும் நேரத்துக்கு நடைப்பயிற்சி செய்ய நானும் கணவரும் கடற்கரைக்குச் சென்றுவிடுவோம். கண்ணகி சிலையைக் கடந்து நடக்கும் ஒவ்வொரு முறையும் அந்தக் காட்சி படமாக்கப்பட்ட தினம் என் மனதில் அலையாக வந்து மோதும். கண்ணகி தெய்வத்தைக் கையெடுத்து வணங்கிவிட்டு நடக்கத் தொடங்குவேன்” என்கிறார் விஜயகுமாரி. இந்தப் படத்துக்குப் பிறகுதான் ‘நடிப்புக்கொரு விஜயகுமாரி’ என்று இவரைக் கொண்டாடினார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE