முடிவற்ற சாலை 3: குதிரையின் மௌனம்

By எஸ்.ராமகிருஷ்ணன்

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியன் பவனி வருகிறார் என்பது நம்பிக்கை. ஜெய, விஜய, அஜய, ஜிதப்ராணா, ஜிதாக்ரமன், மனோஜ்யா, ஜிதக்ரோதா ஆகியவை சூரியனின் ஏழு குதிரைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. நம் உலகின் முடிவற்ற பயணி சூரியனே.

நாள் எல்லாம் ஒடிக்கொண்டேயிருந்தாலும், குதிரைகள் தனது வலியைப் பற்றிப் புலம்புவதில்லை. இனி ஒடமுடியாது என மறுப்பதுமில்லை. குதிரைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியப் பாடமிது. உங்கள் வலியை எதிர்கொள்ளுங்கள். அதைப் பற்றிப் புலம்பிக்கொண்டேயிருக்காதீர்கள். யாருக்காகவோ குதிரை ஒடுகிறது. அது குறித்துக் குதிரைக்குப் புலம்பல்கள் இல்லை. தன் சக்தியைப் பிறருக்காகத் தருவதில் குதிரை சந்தோஷம் அடைகிறது.

புதிய சாலைகளின் வருகை பயணத்தை எளிதாக்கி விட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை உருவாக்கப்பட்ட பிறகு, பயணம் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. முந்தைய காலங்களில் தேசிய நெடுஞ்சாலையைத் தவிர மற்ற சாலைகளில் பயணிப்பது மிகக் கஷ்டமானது. மழைக்காலத்தில் பயணிக்கவே முடியாது. கோடையிலோ மண்சாலைகளில் ஆள் உயர புழுதி எழும்பும். குடிக்கத் தண்ணீர் கிடைக்காது.

கரி இன்ஜினில் இயங்கும் ரயிலில் போனால் சட்டை, முகம் எனக் கரி அப்பி நிறம் கறுப்பாகி விடும். பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் கரியில் இயங்கும் இன்ஜின் இருந்தது என்றும், அந்த நாட்களில் பேருந்தில் ஏறியதும் சட்டை வேட்டி கறை படியாமல் இருக்கக் கழற்றிக் கையில் வைத்துக் கொள்வார்கள் என்றும் என் தாத்தா கூறியது நினைவிலிருக்கிறது.

இன்று இந்தியா முழுவதும் தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்குவழிச் சாலைகளின் வருகைக்கு முக்கியக் காரணம் - வணிகப் பொருட்களை விற்பனைக்கு எளிதாகக் கொண்டு போகவேண்டும் என்பதே. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதும் ரயில்வே தண்டவாளங்கள் அமைத்ததற்கும் இதுவே காரணம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கிழக்கிந்திய கம்பெனியின் அவசரத் தகவல் ஒன்றை ஊட்டியில் முகாமிட்டிருந்த கவர்னரிடம் ஒப்படைக்க ஒரு சிப்பாய் மதராஸில் இருந்து குதிரையில் பயணம் செய்கிறான். நான்கு நாட்களின் பின்பே அவன் ஊட்டியைச் சென்றடைகிறான் என்கிறது இம்பீரியல் ஜெகட். இன்று, சென்னையில் இருந்து ஊட்டிக்கு விமானம் மூலம் நான்கு மணி நேரத்திற்குள் போய்ச் சேர்ந்துவிடமுடிகிறது. காலமாற்றம் பயணத்தின் இயல்பை முற்றிலும் உருமாற்றியிருக்கிறது. நவீன வசதிகளால், ஒரு நாளைக்குள் உலகின் ஒரு கோடியில் இருந்து மறுகோடிக்குப் போய்விட முடிகிறது.

இவ்வளவு வசதிகள் வந்தபிறகும்கூட, விமானம் ஏறாத பெற்றோர்கள் எத்தனையோ பேர் நம்முடன் இருக்கிறார்கள். உங்களைத் தோளில் தூக்கிச் சுமந்த அவர்களை ஒருமுறை பறக்க வைத்துச் சந்தோஷப்படுத்த வேண்டியது உங்களின் கடமையில்லையா?

சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்தியூரில் நடைபெறும் குதிரை சந்தையைக் காண ஒரு நண்பர் அழைத்துச் சென்றிருந்தார். மிகப் பெரிய சந்தை அது.

ஆகஸ்டு மாதம் அந்தியூரிலுள்ள குருநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் தேர்த் திருவிழாவை ஒட்டி இந்தச் சந்தை நடைபெறுகிறது. கோயில் விழாக்களின் நோக்கமே ஒன்றுகூடுதல் தானே. விதவிதமான கலை களும், கிராமியக் கலைஞர்களும் ஒன்று கூடுவது திருவிழா வில்தான். திருவிழாவின் பகுதியாகப் பொருட்காட்சிகள் திகழ்கின்றன.

அன்றாட வாழ்விலிருந்து குதிரைகள் மறைந்து போய்க்கொண்டிருக்கும் இக்காலத்தில், ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான குதிரைகளைக் கண்டது சந்தோஷம் அளித்தது. அதிலும் விற்பனைக்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரைகளைக் கொண்டு வந்திருந்தது வியப்பூட்டியது. குதிரை வண்டியில் இழுபடும் மட்டக் குதிரைகளைத் தவிரக் கம்பீரமான குதிரைகளை நாம் நேரில் காண்பதேகூடக் குறைவுதான். குதிரைகள் மட்டுமின்றி, ஆடு மாடுகளும் இந்தச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.

வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தால், மனிதனின் முன்னேற்றத்திற்குக் குதிரைகளின் பங்களிப்பு மகத்தானது. சென்ற நூற்றாண்டுவரை குதிரை வைத்திருப்பதுதான் அந்தஸ்தின் அடையாளம். குதிரைகளே மனிதர்களை ஓரிடம் விட்டு வேறிடம் கொண்டு சென்றன. குதிரைகளைப் பராமரிப்பதற்கு என்று விசேஷ லாயங்கள் இருந்தன. குதிரைகளைப் பற்றி அரிய விஷயங்களை அஸ்வ சாஸ்திரம் விரிவாக எடுத்துச் சொல்கிறது. இன்றும் இஞ்சின் சக்தியை ஹார்ஸ் பவர் என்றே குறிப்பிடுகிறோம்.

குதிரையின் நடையை அஸ்வ சாஸ்திரம் ஐந்து விதமாகச் சொல்கிறது. அதாவது ஆஸ்கந்திகம், தோரி தகம், ரேசிதம், வல்கிதம், ப்லுதம் என ஐந்து விதமான முறைகளில் குதிரை நடையிருக்கிறது என்கிறது சாஸ்திரம்.

அந்தியூர் குதிரை சந்தையில் சிறப்புச் சிந்தி வகைக் குதிரை, கத்தியவார் மற்றும் மார்வார் ரகக் குதிரைகள் விற்பனைக்கு இருந்ததைக் கண்டேன். அதிலும், கறுப்பு நிற குதிரைகளின் கம்பீரம் காணச் சிலிர்ப்பூட்டுகிறது.

ஒரு காரின் விலை இத்தனை லட்சம். பைக் விலை இவ்வளவு என்று நம்மால் சுலபமாகக் கூறமுடியும். ஆனால் ஒரு குதிரையின் விலை எவ்வளவு? எதை வைத்து குதிரையின் விலையை முடிவு செய்கிறார்கள்?

குதிரைகளின் முகத்தில் அல்லது கழுத்தில் காணப்படும் சுழிகளைக் கொண்டே குதிரையின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது 9 அல்லது 10 சுழிகள் பெற்றிருந்தால், அவை ராசியான குதிரைகள். இதை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இது போன்ற குதிரைகள் பத்து முதல் இருபது லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

அரபுக் குதிரைகள் ஒரு காலத்தில் கப்பலில் கொண்டுவரப்பட்டுத் தமிழக மன்னர்களிடம் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குதிரை வணிகம் நடைபெற்ற தற்குச் சாட்சியமாக இருக்கின்றன, திருப்புடைமருதூர் கோயில் ஓவியங்கள். தமிழக வரலாற்றின் சாட்சியமாக உள்ளவை இத்தகைய கலைப்படைப்புகள் மட்டுமே. அதுவும் சிற்பங்களாகவோ, ஒவியங்களாகவோ உள்ளதே அதிகம். அதன் மதிப்பையும் பெருமையும் அறியாமல் நாம் சிதைத்து வருகிறோம் என்பதே இன்றைய நிஜம்.

திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில், வீரவநல்லூரிலிருந்து ஏழு கிமீ தொலைவில், திருப்புடைமருதூர் அமைந்துள்ளது. இக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. அந்தக் கோயிலில் காணப்படும் ஒவியங்கள் தனிச்சிறப்பு மிக்க வை. அதில் ஒன்றாக அரபுக் குதிரை வணிகக் கப்பல் பற்றிய ஓவியம் இங்கே காணப்படுகிறது. பேராசியர் பாலுச்சாமி இந்த ஓவியங்களை முழுமையாக ஆவணப் படுத்தி மிக அழகிய நூலாக வெளிக்கொண்டுவந் துள்ளார். தமிழில் இது போன்ற நூல் வந்தது கிடையாது.

குதிரைகள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் சீபிஸ்கட் (Seabiscuit) என்ற ஹாலிவுட் படம் பந்தயக் குதிரையொன்றைப் பற்றியது. இப்படம் குதிரைக்கும் குதிரையோட்டிக்குமான உறவை அற்புதமாகச் சித்தரித்துள்ளது.

குதிரைகளை அழகிய சிற்பங்களாக எத்தனையோ கோயில்களில் செய்து வைத்திருக்கிறார்கள். நான் பார்த்த குதிரைச் சிற்பங்களில் பேரழகு மிக்கவை ஆவுடையார் கோயில் சிற்பங்கள். இக்கோயிலில் காணப்படும் குதிரைச் சிற்பங்களின் கலைநேர்த்தி ஒப்பற்றது. குதிரையின் வாயினுள் நீங்கள் கையை விட்டுப் பார்த்தால் அதன் மேற்புறம் புடைத்து இருக்கும். அவ்வளவு நுட்பமாகக் கல்லில் செதுக்கியிருக்கிறார்கள்!

பாண்டிய மன்னருக்காகக் குதிரை வாங்க வந்த மாணிக்க வாசகர், ஆவுடையார் கோயிலில் தங்கி விட்டதாக ஐதீகம். ஆகவே கோவிலில் விதவிதமான குதிரைகளின் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு குதிரையும் ஒரு ரகம். இவ்வளவு அழகான சிற்பங்களைச் செய்த கலைஞர் யார்? எங்கும் அவரது பெயர் கிடையாது. தான் முக்கியமில்லை. தமது கலைப்படைப்பே முக்கியம் என்பது தமிழரின் நெறி.

ஆவுடையார் கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் சிறப்பானவை. கல்லை நுணுக்கமாக இழைத்து அதில் குமிழ் போலச் செய்திருப்பார்கள். ஒரு கல்லுக்கும் இன்னொரு கல்லுக்கும் எந்த இடத்தில் எவ்வாறு இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்குக் கொடுங்கைக் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாழ்வாரம் மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரமோ பலி பீடமோ கிடையாது. நந்தியும் கூடக் கிடையாது. அதுபோலவே சுவாமிக்கு உருவமும் இல்லை. இங்குள்ள சுவரோவியங்களில் சமணர்களைக் கழுவேற்றியது மிக நுட்பமாகக் காட்சிப்படுத்த பட்டிருக்கிறது.

அடுத்தமுறை கோயிலுக்குப் போகும்போது அங் குள்ள குதிரைச் சிற்பங்களை நின்று நிதானமாகப் பாருங்கள். முடிந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு அந்தக் குதிரைகளின் அழகை அறிமுகம் செய்து வையுங்கள். சிற்பங்களை ரசிக்கக் கற்றுக் கொடுங்கள்.

பயணம் என்பது வெறும் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்புவதற்கானது அல்ல. ஒவ்வொன்றையும் நிதானமாக நின்று ரசித்து அனுபவித்துக் கொண்டாட வேண்டும் என்பதே பயணத்தின் அடிப்படை.

(பயணிக்கலாம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE