குரங்கணி சித்தன் கதை - 11: பொய்க் கதவு

By வடவீர பொன்னையா

நடுச்சாமம்…  வானத்தில பிருகு முனி நட்சத்திரம் தலைக்கு மேல செங்குத்துக் கோணத்துல  நிக்குது. சந்திரனுக்கு ஒரு கோடுதான் இருந்துச்சு. திரயோதசி முடிஞ்சு சதுர்தசி ஆரம்பம்… நாளைக்குத்தான் அமாவாசைனு அடையாளங் காட்டுது.

சித்தன், குடிசைக்குள்ள கட்டி வெச்சிருந்த பையைத் துலாவி எடுத்து, ‘சரசர’னு பிரிச்சான். உள்ளே பொம்மிக்கு உயிர்க் கருவை உண்டாக்குற மூலிகை இலைகள் இருந்துச்சு. (இந்த இடத்தில அந்த மூலிகைகளோட பெயர்கள நாஞ் சொல்ல மாட்டேன். கதை கேட்டுக்கிட்டு இருக்கிற நீங்க தப்பிதமாப் பண்ணிப்போடுவீங்க. அப்புறம், நான்தான் ஜவாப்தாரி ஆகணும்!)

அதாவது, அமாவாசை அன்னிக்கு ராத்திரியில சில மூலிகை இலைகளப் பறிச்சு, அதையெல்லாம் வெளிச்சமும் உஷ்ணமும் படாம, ராத்திரியில உலர்த்தி, ராத்திரியிலேயே சேகரம் பண்ணி, அள்ளிக் கட்டிப் பையில வெச்சிருந்தான் சித்தன்.

இப்படி, இருபத்தெட்டுநாள் காயவெச்சு, நாளை வர்ற அமாவாசை அன்னிக்கு இலைகளப் பொடி பண்ணி, சுத்தமான ஆத்துத் தண்ணியில கரைக்குறதுக்குத் தயார் செஞ்சு வச்சிருந்தான் சித்தன். இனி ஒரு நாள்தான் பாக்கி இருக்கு…

அதுவுமில்லாமல், வர்ற அமாவாசை அன்னிக்குத்தான், பன்னெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ அதிசயமா பூக்கும் குறிஞ்சிப் பூவும் மொட்டு விடுற நேரம். குரங்கணி மலை, மேக மலை, கொடைக்கானல் மலை பூராவும் குறிஞ்சிப் பூ கொத்துக் கொத்தா பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும்! மலைக்குப் பூச்சட்டை போட்ட மாதிரி இருக்கும்! வளர்பிறையில பொம்மியோட வயித்துல கருவும் உயிர் பிடிச்சு வளரப் போகுதுனு சித்தனுக்குக் கூடுதல் சந்தோஷம்!

பைக்குள்ள சருகா இருந்த மூலிகை இலைகள, சித்தன் ரெண்டு கையால அள்ளும்போதுதான் சித்தனோட கழுத்து ஓரமா ‘சர்ர்ர்’னு உரசிக்கிட்டு ரெண்டு விட்டில் பூச்சி பறந்து வெளிய போகுது. ‘ஐயோ, ஏதோ வெளிச்சம் வரப்போகுதே’னு ருசுப்படுத்தின சித்தன், ‘சரட்’னு எந்திரிச்சு சன்னல் வழியாப் பார்த்தான். வெளியில, பெரும்பிறவி பாண்டியன் தங்கியிருந்த குடிசைப் பக்கம், கம்பளி போர்த்தின ஒரு உருவம், ஒரு கைல இலுப்பை எண்ணெய் விளக்கும், இன்னொரு கையில ஈட்டியும்…

“யாரது…? வேணாம், வேணாம்… நகராதே..!”னு சித்தன் கத்தினான்.

அலர்ற சத்தம் கேட்டு ‘படார்’னு எந்திரிச்ச பாண்டியன், தப்பிச்சு ஓடுறதுக்குத் தயாரா மூங்கில் கதவைத் தொறந்தான்;. கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள அந்த உருவம் பாண்டியன் மேல ஈட்டியை வீச… சித்தன் பாஞ்சு போயி அந்த உருவத்தோட தலை முடியைப் பிடிச்சு, அதோட இடுப்புல முழங்கால் வச்சு பின் பக்கம் கவுத்து, நெஞ்சு மேல ஏறி உக்கார்ந்தான். குறி தவறின ஈட்டி பாண்டியனின் கழுத்தை உரசிக்கிட்டுப் பின்னால போய் மூங்கில் சுவத்துல குத்தி நின்னுச்சு. எகிறி விழுந்த லாந்தர் விளக்கு வெளிச்சத்தில கம்பளி போர்த்தின முகம் தெரிஞ்சது.

அட… பொம்மியோட புருஷன் தம்மா! சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வந்து கூடிட்டாங்க.

“தம்மா… இது பெரும் பாவமாச்சே. ஆயிரம் இருக்கட்டும், இவங்க நம்மகிட்ட  அடைக்கலம் தேடி வந்த விருந்தாளிகள். இப்போ நமக்கு எதிரி இல்லை!”

“சித்தா… இவங்கள மன்னிச்சு ஏத்துக்கிட்டது நம்ம தப்பு. நம்ம சனங்கள சுண்ணாம்பு காளவாசல்லயும் செக்கடியிலயும் என்ன பாடுபடுத்தினாங்க தெரியுமா? இவங்ககிட்ட விடுதலையாகி வந்த சனங்க பட்ட கஷ்டத்தைக் கதை கதையா சொல்லும்போது நெஞ்சு வெடிக்குது சித்தா, நெஞ்சு வெடிக்குது!”

“தலையில கிரீடத்தோட அதிகாரத்துல இருக்கும்போது, ஆயுதமும் கெடச்சுட்டா மனுஷன் எந்த எல்லைக்கும் போவான். அவனோட இயல்பு மாறிப்போகும். சமநிலைய உணர அனுபவம் வேணும். அதுவரை மனுஷனுக்கு உசுரோட மதிப்பு தெரியாது தம்மா. அதை உணர வைக்கத்தான் பாடுபடுறேன்!”

“இவன உசுரோட விடக் கூடாது சித்தா!”னு கோவம் காட்டினான் தம்மா.

“பாண்டியரே, பதற்றப்படாதீங்க. நீங்களும் அஜாக்கிரதையா இருந்திட்டீங்க. எங்க சனங்கள நீங்க அடிமையா வெச்சிருந்த கோபம் இன்னும் மனசுல இருந்து ஆறலனு தெரிஞ்சுதான், நீங்க எந்தச் சூழ்நிலையிலயும் தப்பிச்சுப் போக சூத்திரம் சொன்னேன். அதுக்காகத்தான் உங்க குடிசையில ‘பொய்க் கதவு’ ஒண்ணையும் வடிவமச்சு வச்சேன்!  நீங்க பயப்படாம தூங்குங்க பாண்டியரே!”

பதற்றமா இருந்த பாண்டியன், “நல்ல வேளை குறி தவறிப்போச்சு. எனக்கு சகுனம் சரியில்லை. என்னைத் தேடிக்கிட்டு இருக்கிற நாயக்கர்கள் என் தலையைக் குறி வச்சுக் கொல்லுவாங்களோனு பயமா இருக்கு!”னு சொன்னான்.

“தம்மா… வா, உன் குடிசைக்குப் போவோம்…”னு இழுத்துக்கிட்டுப் போனான் சித்தன்.

“நான் ஏன் சமாதானத்தை விரும்புறேன் தெரியுமா..? நாம எல்லோரும் ஏன் கன்னியைக் கும்பிடுறோம் தெரியுமா? நாம ஏன் இவ்வளவு வயசானாலும் இளமையோட இருக்கோம் தெரியுமா?

கன்னி வரம்பெற்ற கதை  சொல்றேன்… நாம வடக்கே வாழ்ந்த காலத்துல, சிந்து நதிக்கரையில நம்மைப் பின்தொடர்ந்து வந்த இன்னோரு இனம், நம்மளோட இருப்பிடத்தையும், பழ மரங்களையும், ஆடு மாடுகளையும் அபகரிச்சுக்கிட்டே வந்தாங்க. அப்போ, நம்ம கூட்டத்துக்குத் தலைவரா இருந்தவரு லமூர் ராசா. அவரோட ராணிக்குப் பேரு லமூரி. இவங்களுக்குப் பிறந்த குழந்தைதான் கன்னி. ஒரே பொண்ணு.

கிடைக்கிறத சாப்பிடுற லமூர் ராசா, யாரோடயும் சண்டைக்குப் போக மாட்டார். புதுசா எதையும் கண்டுபிடிக்க மாட்டார். நாகரிகம் பழக மாட்டார். ஆனா, ராணி லமூரி ரொம்ப அழகா இருப்பாங்க. புதுசா கிடைக்கிற பழங்கள் மேல ஆர்வம் காட்டுவாங்க. ருசியில கவனம் செலுத்துவாங்க. பல மிருகங்களோட தோள்ல பறவைகளோட இறக்கைகளக் கோத்து ஆடம்பரமா உடை உடுத்துவாங்க .

இப்படி இருந்த சமயத்துலதான், நம்ம கூட்டத்துக்குப் பின்னால வந்த இனத்தோட தலைவன் நாவி ராசா நம்மளை எல்லாம் மடக்கி, நம்ம இடத்தையும் ஆக்கிரமிச்சு, நம்ம ராணி லமூரியைத் தூக்கிட்டுப் போயிட்டாரு. நாட்டையும் இழந்துட்டோம்.

ரெண்டு மூணு வருசம் ஆயிடுச்சு. நம்ம இனம் ஓண்ணு சேர்ந்துச்சு, நாவி ராசாவைத் தோற்கடிச்சு லமூரியை மீட்கணும்னு படை திரட்டிப் போனோம். ரொம்ப நாள் சண்டை நடந்துச்சு. நிறைய பேர் செத்துப் போனாங்க. கடைசியா துங்கபத்ரா நதிக்கரை சேத்துல நாவி ராசா மாட்டிக்கிட்டாரு. நம்மகிட்ட தோத்துப் போயிட்டாரு!

அப்போ, நம்ம ராணி லமூரிய சந்திச்சு கூப்பிடப் போகும்போது, `நான் வர மாட்டேன். நாவி ராசா என்னைப் பால்ல குளிப்பாட்டுறாரு… விதவிதமான பழங்கள் தர்றாரு… அரண்மனை கட்டித்தந்து சந்தோஷமா வச்சிக்கிறாரு… என் பழைய புருஷனுக்கு நாகரிகம் தெரியல…’ னு சொல்லி வர மறுத்துட்டாங்க.

அப்போ, நம்மகிட்ட சிக்கின நாவி ராசாகிட்ட `லமூரியைச் சமாதானப்படுத்தி எங்ககூட அனுப்புங்க’னு கேட்டோம். அப்போ ஒரு விதி போட்டாரு.

`உங்க நாட்டை திருப்பித் தந்துட்டேன். உங்க ராணி மூலமா எனக்குப் பிறந்த ஆண் குழந்தை பட்டத்துக்கு வர முடியாது. ஏன்னா உங்க ‘கன்னி’ இருக்கிறதால, கன்னியும் அவங்களோட வாரிசும்தானே பட்டத்துக்கு வருவாங்க. என் பையன் அனாதையா இருப்பானே. அதனால, உங்க கன்னி கடைசி வரை கல்யாணம் பண்ணிக்காம, ஆண் துணை தேடாமல் இருந்தால், உங்க லமூரியை அனுப்புறேன்’னு சொன்னாரு. `அதுக்குப் பிரதி உபகாரமா உங்க இனம் முதுமையே வராத முதுவார்களாக இருக்க யாகம் செய்றேன்… யாரையும் பழிவாங்கக் கூடாது. சமாதானமாப் போகணும்’ ”னு சொன்னாரு.

ஆண் துணை தேடாம இருந்த கன்னியைத்தான், இப்பவும் கும்பிடுறோம். நமக்கும் முதுமை எட்டிப் பார்க்கிறதில்லை. நம்ம கிராமங்கள், ‘முதுவாக்குடி’னு பேர் வந்துச்சு!

இந்தக் குடிகளைச் சோதிக்கத்தான் போடப்ப நாயக்கர் முந்தலுக்குப் படையோட வந்து கூடாரம் போட்டுட்டாரு! ‘போடிநாயக்கனூர்’னு ஏன் பெயரு வந்துச்சு தெரியுமா?

- சொல்றேன்...

-வடவீர பொன்னையா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE