நடை, உடை, தோற்றம் என அனைத்திலும் கிட்டத்தட்ட டிராபிஃக் ராமசாமியாகவே மாறியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். ‘‘ஆமா தம்பி... வயசு 76 ஆகிடுச்சே. 69 படங்கள் இயக்கிட்டேன். நடிப்புல டிராஃபிக் ராமசாமி 3 வது படம். இதுநாள் வரைக்கும் சினிமாவுல சாதிச்சது போதும்னு தோணினதே இல்லை. இந்தப் பெரியவர் டிராஃபிக் ராமசாமி ஸ்டோரியில நடிச்சு முடிச்ச கடைசி நாள் ஷூட்டிங்கோட போதும்டா இந்த சினிமா, இதுக்கு மேல பெருசா என்னத்த சாதிக்கப் போறோம்னு தோணிடுச்சு’’ என்று இயல்பாகப் பேசி பேட்டிக்குத் தயாரானார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்கு எத்தகைய மிரட்டல்கள் வந்தாலும் பயப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறீர்கள். இது ஆளுங்கட்சிக்கு விடுக்கும் சவாலா..?
கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘நாளை நமதே’ படத்தில் நான் உதவியாளர். அப்ப எனக்கு 24 வயசிருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எம்ஜிஆர் வந்துட்டா, குண்டூசி விழுற சத்தம்கூட இருக்காது. அன்னைக்கு வாகினி ஸ்டுடியோவுல பாட்டு ஷூட்டிங். திரும்ப ஒரு டேக் வேணும்னாகூட, அவரோட காதுகிட்ட போய் மெதுவாத்தான் சொல்லணும். அந்த மாதிரி சூழல்ல ஒரு டேக் கொஞ்சம் சுமாரா இருந்ததால என்னையும் அறியாமலேயே, ‘அண்ணே... ஒன்ஸ்மோர்’ன்னு எம்ஜிஆரைப் பார்த்துக் கத்திட்டேன். அதைக் கேட்டு ஒட்டுமொத்த யூனிட்டும் என்னைய திரும்பிப் பார்த்துச்சு. அடுத்த நாள் காலையில, கார் வரும்னு ரெடியாகி வீட்ல உட்கார்ந்திருக்கேன். ம்ஹூம்… 10 மணி ஆகியும் கார் வரல. ஒரு ஆட்டோ பிடிச்சு வாகினி ஸ்டுடியோவுக்குப் போனா, ‘சேகரு... நம்ம அடுத்தபடத்துல வேலை செய்துக்கலாம்பா’ன்னு சொன்ன இயக்குநர், மேனேஜரை அழைத்து, ‘சேகருக்கு செட்டில் பண்ணி அனுப்பிடுங்க’ன்னு சொல்லிட்டுப் போய்ட்டார்.
அப்படிப்பட்ட நான் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தப்ப, கருணாநிதி எழுதிய ‘நீதிக்கு தண்டனை’யைப் படமாக எடுத்தேன். அது கருணாநிதி கைது செய்யப்பட்டு விடுதலையான சமயம். படம் ரிலீஸாகி 15 நாள் கழிச்சு எம்.ஜி.ஆர்.ராமாவரம் தோட்டத்துக்கு வரச் சொன்னார். பொதுவா பெண்கள் சென்டிமென்ட் என்றால், கொஞ்சம் ஸ்மூத்தா ஹேண்டில் செய்வார்னு கேள்விப்பட்டிருந்ததால மனைவியையும் அழைச்சுக்கிட்டுப் போனேன். எனக்குப் பின்னாடி வந்தவங்க எல்லாரும் எம்ஜிஆரைப் பார்த்துட்டுப் போறாங்க. கடைசி வரைக்கும் எங்கள கூப்பிடல.