கழுதைகளும்... குதிரைகளும்!

By காமதேனு

எல்லாச் சூழல்களுக்கும் ஒரே மாதிரியான வழிமுறையைப் பின்பற்றுவது என்பது, பொதி சுமக்கும் கழுதைகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம் என்றார் அமெரிக்க எழுத்தாளரும், தத்துவ மேதையுமான எமர்சன். இதையே மேற்கோள் காட்டி, `குறிப்பிட்ட ஒரு சூழலில் முன்வைக்கப்பட்ட பார்வையை, எல்லாச் சூழல்களிலும் பின்பற்ற நினைப்பது, சிந்திக்கத் தெரிந்த ஒரு மனிதனுக்கு அழகு ஆகாது’ என்றார் சட்ட மேதை அம்பேத்கர்.

மாற்றத்திற்காகச் சொல்லப்பட்ட இந்தக் கழுதை உதாரணத்தை, தங்கள் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வதில் படு சமர்த்தர்கள் நம் அரசியல்வாதிகள். ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நியாயம்; அதுவே எதிர்க்கட்சியாக மாறிய பின் வேறொரு நியாயம் என்று சட்டத்தையும், நியாயத்தையும் தங்களுக்குச் சாதகமாகத் திரித்துப் பேசுவதில் மகா கெட்டிக்காரர்கள்!

கர்நாடகா தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ஆளுநர் எடுத்திருக்கும் முடிவு ஜனநாயகத்தைப் பதம் பார்த்திருக்கிறது. எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு உத்தியைக் கையாளும் பாஜக, ஆளுநர்கள் கடைபிடிக்கும் நியதிகளுக்கு நேர் எதிராகச் சூழலை மாற்றியதன் மூலம், கர்நாடகத்தில் எடியூரப்பாவை முதல்வராக்கியிருக்கிறது. இன்று பாஜகவை இந்த விஷயத்தில் விமர்சிக்கும் காங்கிரஸும் அன்று இதே வேலையைத்தான் செய்தது. எல்லோருமாகச் சேர்ந்து மக்களைத்தான் அவமதிக்கிறார்கள். ஜனநாயகம்தான் தாக்கப்படுகிறது.

குதிரை பேரம், கட்சித் தாவல், ஆள் கடத்தல், சிறைவைப்பு இவை எல்லாம் இந்திய மக்களுக்கு இயல்பாகி வருகிறது. கோடிகளில் புரள்வதற்காகத்தான் தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் பாடுபடுகிறார்களே தவிர, தங்களுக்குச் சேவை செய்வதற்கு அல்ல என்ற எண்ணம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி’ என்று பார்த்து, அதை வைத்துத் தலையைச் சொறிந்துகொள்வதுதான் தேர்தல் ஜனநாயகம் என்று ஆகிவிட்டால், அது நல்லதல்ல, நல்லதல்ல... நாட்டுக்கு நல்லதே அல்ல!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE