இம்சை அமைச்சர் மணிகண்டன்?

By காமதேனு

“பொதுவா அரசுத் துறையில், ராம்நாடை பனிஷ்மென்ட் ஏரியா என்பார்கள். மணிகண்டன் அமைச்சரான பிறகு, எங்களை எல்லாம் ஒட்டு மொத்தமா நரகத்திலேயே தள்ளிவிட்டதைப் போலிருக்கிறது” என்று புலம்புகிறார்கள் ராமநாதபுரத்து அரசு அலுவலர்கள்.

“கட்சிக்காரர்கள் புகார் சொல்லிவிட்டால், கண்ணை மூடிக்கொண்டு அதிகாரிகளுக்கு போன் போடும் அமைச்சர், ‘உங்க வௌக்கம் வெங்காயம் எல்லாம் வேணாம். அமைச்சர் சொல்றேன் செய்ய முடியுமா, முடியாதா?’ என்று அதட்டுகிறார். ‘அரசு விதிப்படி...’ என்று இழுத்துவிட்டால் தொலைந்தோம். பொது மேடையில் ஒருமையில் திட்டுவது, இடமாற்றம், காத்திருப்போர் பட்டியல் என்று பந்தாடிவிடுவார்” என்று சோகம் பாடுகிறார்கள் அரசு அதிகாரிகள்.

அதற்கு உதாரணமாக அவர்கள் சொன்ன சில சம்பவங்கள் இங்கே. இந்த மே மாதத்திலும்கூட, ராமநாதபுரம் நகரைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் ராமநாதபுரம் கோட்டாட்சியராக இருந்த பேபி. வைகையில் வந்த தண்ணீரை எல்லாம், நீர்நிலைகளில் கொண்டுவந்து சேர்த்தவர் அவர். அதை எல்லாம் செய்தது தான்தான் என்று மேடையில் முழங்கினார் அமைச்சர். இதை இப்படியேவிட்டால், ‘கடலை வெட்டி ராமேஸ்வரத்தைத் தனித் தீவாக்கியதே நான்தான்’ என்றும் பேசுவார் என்று சில தன்னார்வ அமைப்புகள், நீர்நிலையைத் தூர்வாரிய கோட்டாட்சியரைப் பாராட்டி போஸ்டர் ஒட்டினார்கள். அதில், கடுப்பான அமைச்சர், கோட்டாட்சியரைக் காத்திருப்போர் பட்டியலுக்குத் தள்ளினார்.

அங்கன்வாடி பணியாளர், அரசு ஊர்தி ஓட்டுநர் உள்ளிட்ட 3,000 பணியிடங்களுக்கு, ஒரு பெரிய பட்டியலைத் தயாரித்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார் அமைச்சர். நீதிமன்றக் கண்டனம் வரும் என்பதால், அதைச் செய்யத் தயங்கினார் ஆட்சியர் நடராஜன். அந்தக் கோபத்தைப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழாவில் தீர்த்துக்கொண்டார் அமைச்சர். “அங்கன் வாடிப் பணியாளர், ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பாமல் கலெக்டர் இழுத்தடிக்கிறார். வேலை வாய்ப்பற்ற மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பையும் கெடுப்பதற்கு ஒரு அதிகாரி” என்று அந்த விழாவில் ஆட்சியரைக் காய்ச்சி எடுத்தார் அமைச்சர். அதன் பிறகும் அரசு விழாக்களில், “அதிகாரிகளுக்கு அறிவே இல்லை. நேத்துக்கூட கலெக்டரைத் திட்டுனேன்” என்று தொடர்ந்து பேசியபடியே இருக்கிறார் மணிகண்டன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE