பசும் பாலுக்கு படையெடுக்கும் மக்கள்... ஏன் இந்தத் திடீர் மவுசு?

By காமதேனு

‘நாட்டு மாடு கோமியம் கிடைக்கும். ஆடு, நாட்டு மாட்டின் உரம் கிடைக்கும். புதுமனை மற்றும் கோ-பூஜைக்கு நாட்டு மாடு வழங்கப்படும். சுத்தமான நாட்டுப் பசும்பால் கிடைக்கும்’ - இப்படியெல்லாம் கோவை புதூர் பகுதியில் விளம்பரப் பலகைகள் முளைத்திருக்கின்றன. இப்படி விளம்பரப்படுத்தும் அளவுக்கு நாட்டு மாடுகள் மீது அப்படி என்ன திடீர் கரிசனம்? பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிலவகை பால்களில் கலப்படம் செய்யப்படுவதாகக் பரவலாகப் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, கோவையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் இப்போது நாட்டு மாட்டுப் பால் என்று சொல்லப்படும் பசும் பால் தேடல் அதிகரித்திருக்கிறது. டிமாண்ட் அதிகரித்திருப்பதால், ஆர்கானிக் வகைகளைப் போல பசும்பாலும் இப்போது சந்தைச் சரக்காகி இருக்கிறது.

 “நாலு வருஷம் முன்னாலதான் நாட்டு மாடு வளர்த்தற ஆசையில எங்க வூட்டுக்காரர் ஒரு நாட்டு மாடும், மூணு கன்னுக்குட்டியும் வாங்கிட்டு வந்தார். அதுதான் இப்ப 20 உருப்படியாவும், 4 கறவையாகவும் பெருகியிருக்கு.பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, நெல்லந்தவுடு, பச்சை சோளத்தட்டுன்னு நிறைய செலவு இருக்கு. ஒரு மாடு ஒரு லிட்டர்லேர்ந்து மூணு லிட்டர் வரைக்கும் கறக்கும். கறந்த சூட்டோட துளி தண்ணி கலக்காம லிட்டர் 100 ரூபாய்க்குத் தர்றோம். நாட்டு மாட்டுப்பாலே வேணும்னு நிறைய பேர் வந்து கேட்கிறாங்க. முக்கியமா நாட்டுப் பசும்பாலைக் குடிச்சுப் பழகின குழந்தைங்க திரும்ப பாக்கெட் பாலையோ, கலப்பின மாட்டுப்பாலையோ கொடுத்தா குடிக்க மாட்டேங்குது’’ என்கிறார் கோவைபுதூர், ஐஸ்வர்யா நகர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ஸ்ரீதேவி.

 பால் மட்டுமல்ல... ஒரு பாட்டில் கோமியத்தை 50 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்களாம். சாணத்தை உரம், வரட்டி, ஊதுபத்தி தயாரிக்க வாங்கிச் செல்கிறார்கள். தேவியின் கணவர் கே.பி.பாபு, ``மாடுக கருத்தரிக்க நாங்க ஊசி போடறதில்லை. காளையைத்தான் சேத்தறோம். அதுக்குன்னே காங்கயம் காளை, குஜராத் கிர் காளைகளை வளர்த்தறோம். இதன் மூலமா பிறக்கிற கன்றுகளுக்குத்தான் ஒரிஜினாலிட்டி இருக்கும். அதுக்குத்தான் நம் மண்ணுக்கான குணங்களோட இயற்கையான சாணம், கோமியம், பால் எல்லாம் கிடைக்கும்னு இதைச் செய்யறோம். ஆனாலும் நாட்டு மாடுகளை வளத்தறது ரொம்பக் கஷ்டம். அதுலயும் காளை மாட்டை வளர்த்தறது ஒரு புள்ளைய வளர்த்தறதுக்குச் சமம்!’’ என்று சொன்னார்.

புட்டுவிக்கி அருகே இரண்டு வருடங்களுக்கு முன்பே பசும்பால் வியாபாரத்தைத் தொடங்கியவர் வி.விஸ்வநாதன். அவரிடம் பேசியதில், ``ரெண்டு வருஷம் முன்னால தினசரி மூணு லிட்டர்தான் போச்சு. இப்ப தினம் 30 லிட்டர் போகுது. இந்தப் பாலை வாங்கி தயிர், மோர், வெண்ணெய், நெய் தயாரித்துச் சாப்பிட்டுப் பழகினவங்க வேற பாலை வாங்கறதேயில்லை. இதுல கொழுப்பு கிடையாது; ஹீமோகுளோபின் அதிகரிக்கும். அறுபது, எழுபது வயசுக்கு மேலானவங்க இந்தப் பாலை சாப்பிட்டா, ரத்தத்துல இரும்புச் சத்து அதிகரிச்சு கை,கால் மூட்டுவலி எல்லாமே மட்டுப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE