தாவோ: பாதை புதிது - 12

By ஆசை

தாவோயிஸக் கதையொன்றைத் தழுவி ஒரு கதை சொல்லட்டுமா?

சீன அரசர் ஒருவர் தன்னுடைய சண்டைச்சேவலுக்குப் பயிற்சியளிக்க தன் நாட்டின் புகழ்பெற்ற பயிற்சியாளர் ஒருவரை நியமித்தார். பத்து நாட்கள் கழித்து அரசர் தனது சேவலுக்கு நல்ல விதமாகப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்வையிட வருகிறார். அந்தச் சேவலை சோதித்துப்பார்க்கத் தன்னுடன் ஒரு சேவலைக் கொண்டுவருகிறார்.

அந்தச் சேவலைப் பார்த்தவுடன் கூண்டுக்குள் அடைபட்டிருந்த அரசரின் சேவல் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறது. கூண்டைத் திறந்துவிட்டால் அரசர் கையில் உள்ள சேவலை சுக்குநூறாகக் கிழித்துப்போட்டுவிடும்போல் இருந்தது. அரசருக்கு மிகவும் மகிழ்ச்சி. “சபாஷ், பயிற்சியாளரே! என் சேவலுக்கு நல்ல முறையில் பயிற்சியளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. என்னுடன் அழைத்துச்செல்கிறேன்” என்றார் அரசர்.

பயிற்சியாளரோ நிதானமாகச் சொன்னார், “மன்னிக்கவும் மன்னா, உங்கள் சேவல் சிறிதும் தயாராகவில்லை. அதற்கு நிறைய பயிற்சி தேவைப்படுகிறது.”

அரசருக்கு ஆச்சரியம். எனினும், புகழ்பெற்ற பயிற்சியாளர், அவர் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று நினைத்துக்கொண்டு, “நல்லது” என்று சொல்லிவிட்டு அரசர் புறப்பட்டுச் செல்கிறார்.

இன்னும் பத்து நாட்கள் கழித்து அரசர் கையில் சேவலுடன் வருகிறார். அந்தச் சேவலைப் பார்த்து அரசரின் சேவல் சலசலப்படைந்து கூண்டில் இப்படியும் அப்படியும் ஓடுகிறது. போன தடவை அதனிடம் கண்ட உக்கிரம் குறைந்துவிட்டதே என்ற அரசர் கவலையுடன் நினைத்துக்கொண்டு, ``சேவலை அழைத்துச்செல்லலாமா?'' என்று கேட்கிறார். இம்முறையும் பயிற்சியாளர் “இன்னும் தயாராகவில்லை அரசே” என்கிறார்.

அரசருக்கு மெலிதான கோபம் எட்டிப்பார்க்கிறது. எனினும், பயிற்சியாளரின் திறமையைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பதால் பேசாமல் சென்றுவிடுகிறார்.

மூன்றாவது முறையாக அரசர் சேவலுடன் வருகிறார். கூண்டில் இருக்கும் அரசரின் சேவல் அமைதியாக இருக்கிறது. பயிற்சியாளர் கூண்டிலிருந்து சேவலைத் திறந்துவிடுகிறார். அரசர் கேட்பதற்கு முன்பு பயிற்சியாளரே வாயைத் திறக்கிறார், “இப்போது தயாராக இருக்கிறது, அரசே. நீங்கள் அழைத்துச்செல்லலாம். எப்படிப்பட்ட சேவல்களையும் இது வென்றுவிடும்” என்கிறார். இவ்வளவு நிதானத்துடன், சிறிதளவுகூட உக்கிரமில்லாமல் இருக்கும் தனது சேவலால் எப்படிச் சண்டையிட முடியும் என்ற எண்ணத்தில் அரசருக்கு மிகுந்த கோபம் ஏற்படுகிறது. “என்ன செய்துவைத்திருக்கிறீர்கள் என் சேவலை? அதனை உக்கிரமாக ஆக்குவதற்கு உங்களிடம் அனுப்பிவைத்தால் இப்படி சாதுவாக ஆக்கிவைத்திருக்கிறீர்களே!” என்று அரசர் ஆவேசமாகக் கேட்கிறார். சிரித்துக்கொண்டே பயிற்சியாளர் சொல்கிறார், “அரசரே உங்கள் கையில் உக்கிரத்துடன் இருக்கும் சேவலைக் கீழே விடுங்கள்.” பயிற்சியாளர் சொன்னதுபோல் அந்தச் சேவலை அரசர் கீழே விடுகிறார். பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்ற சேவல் நிதானமாக இந்தச் சேவலை ஒரு அலட்சியப் பார்வை பார்த்துவிட்டுத் தலையைத் திருப்பிக்கொண்டது. அரசர் கீழே இறக்கிவிட்ட உக்கிரமான சேவல் நிதானமான சேவலை ஒரு பார்வைதான் பார்த்தது. சிறகுகளை அடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிவிட்டது.

“என்ன நடந்தது பயிற்சியாளரே, அமைதியான சேவலைப் பார்த்து உக்கிரமான சேவல் பயந்து ஓடுகிறதே” என்று அரசர் கேட்டார்.

“வெற்றிக்கு வலிமையும் உக்கிரமும் பிரதானம் இல்லை அரசரே! நிதானம்தான் மிகவும் முக்கியம். உங்கள் சேவலை நீங்கள் என்னிடம் விடும்போது அவை நான் பார்த்த எந்தச் சேவலையும்விட உக்கிரமாக இருந்தது. அந்த உக்கிரத்துடன் ஒருசில சேவல்களையும் அவற்றால் வெல்ல முடியும். ஆனால், உக்கிரத்தால் எல்லாச் சேவல்களையும் வெற்றிகொள்ள முடியாது. ஆகவேதான், அதன் உக்கிரத்தைச் சிறிதுசிறிதாகக் குறைத்து நிதானத்தைக் கூட்டினேன். இந்தச் சேவலின் அலட்சியத்தையும் நிதானத்தையும் பார்த்ததும் அந்தச் சேவலுக்குத் தெரிந்துவிட்டது, இந்தச் சேவலை வெற்றிகொள்ள முடியாது என்று. அதனால்தான் தலைதெறிக்க ஓடிவிட்டது. உக்கிரம் ஒருசில வெற்றிகளைத்தான் தரும். ஆனால், நிதானத்தால் வெல்ல முடியாததென்று ஏதும் இல்லை. உங்கள் சேவலை அழைத்துச்செல்லுங்கள் அரசே. இனி இந்தச் சேவலுடன் சண்டை போட எந்தச் சேவலும் வராது. சண்டையிடாமலே வெற்றி பெறும் திறன் வாய்ந்த சேவல்” என்று பயிற்சியாளர் சொல்ல மறுபேச்சுப் பேசாமல் அரசர் தன்னுடைய சேவலை அழைத்துச்செல்கிறார்.

வலிமையின் மேன்மையைப் பற்றி வரலாறு நெடுக பெரும்பாலானோர் விதந்தோதியதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், லாவோ ட்சுவும் திருவள்ளுவரும் ஏசுவும் காந்தியும் எளியதன் வலிமையைப் பற்றிப் பேசினார்கள். பேசியதுடன் நிரூபிக்கவும் செய்தார்கள்.

குறிப்பாக, காந்தியை எடுத்துக்கொள்ளலாம். தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஆங்கிலேயரை எதிர்த்து மக்களை ஒருங்கிணைத்து காந்தி போராடினார். மிகவும் பலம்வாய்ந்த எதிரியான ஆங்கிலேயர்கள், மிகவும் பலவீனமான மக்கள் என்ற இரு தரப்புகள். (காந்தி ‘எதிரி’ என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார், எதிர்த் தரப்பு என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்). இப்படிப்பட்ட பலவீனமான மக்களிடம் ஆயுதத்தைக் கொடுத்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடும்படி சொல்லியிருந்தால், ‘சூரியன் அஸ்தமனம் ஆகாத சாம்ராஜ்யம்’ என்று பெயரெடுக்கும் வகையில் உலகின் பெரும் பகுதி நாடுகளை ஆக்கிரமித்திருந்த பிரிட்டிஷ்காரர்கள் ஒரேயடியாக நம்மை நசுக்கியிருப்பார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு ஒரே ஆயுதம் நம் ‘பலவீனம்’தான். இந்த இடத்தில் பலம் என்பதன் நேரெதிர் பொருளில் ‘பலவீனம்’ என்ற சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். பலவீனர்களுக்கு அகிம்சையைவிட மிகப் பெரிய போர் உத்தி என்ன இருக்கிறது? அகிம்சை என்பது இயலாமை அல்ல. இயலாமையை வீழ்த்தும் ஆயுதம் என்பதையும் நாம் உணர வேண்டும்.

காந்தி அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்க இந்தியர்களையும் பிற்பாடு இந்தியாவில் இந்தியர்களையும் ஒன்றுதிரட்டியதால் உலக மக்களின் அனுதாபத் தையும் தனது போராட்டங்களுக்குச் சம்பாதித்துக்கொண்டார். ஆங்கிலேயர்களிலே கணிசமானோர் அவரது அனுதாபிகள். ஆகையால், உலக மக்களின் முன்னே  ஆங்கிலேயர் அம்பலப்பட்டு நின்றனர். இந்தியர்களைத் துடைத்தழித்துவிட அவர்களுக்கு அதிக நேரம் ஆகிவிடாது. ஆனால், உலகத்தினரின் தார்மிக ஆதரவைப் பெற்று, உண்மையான பலம் மிக்கவர்களாக இருக்கும் இந்தியர்களை எப்படி வீழ்த்துவது?

எவ்வளவு நல்ல நோக்கத்துக்காகவும் வன்முறையை நாடக் கூடாது என்ற கருத்தை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. நியாயமான ஒரு நோக்கத்துக்காக அமைப்பையோ அரசையோ ஒருவர் எதிர்த்து ஆயுதத்தை ஏந்தும்போது அவரைத் தீய சக்தியாக, பயங்கரவாதியாக மிக எளிதாக அரசும் அமைப்பும் சித்தரித்து மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல், ஆயுதத்தை ஏந்திவிட்டால் அதன் பிறகு ஆயுதத்திடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள கடைசிவரை ஆயுதத்தை நாம் ஏந்திக்கொண்டே இருக்க வேண்டும். உலகின் பல்வேறு போராளிக்குழுக்கள் நாளடைவில் என்னவாகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இங்கேதான் உலகின் ஏனைய வழிமுறையைவிட காந்தியின் அகிம்சை வேறுபடுகிறது. அகிம்சைக்கு நிதானம்தான் அடிப்படையே தவிர உக்கிரம் இல்லை.

ஒரு கம்பியை முறுக்கிக்கொண்டே போனால் மிகவும் வலுவுடைய ஒரு உச்சநிலை அவரும். ஆனால், அதற்கு மேலும் முறுக்கினால் கம்பி அறுபட்டுவிடும். பலத்தின் உச்சநிலைக்கு அடுத்து பலவீனம் காத்துக்கொண்டிருக்கிறது. எதிர்த்தரப்பின் அந்தப் பலவீனத்துக்காகக் காத்துக்கொண்டிருப்பது என்பது தாவோயிஸம், காந்தியம் இரண்டின் பொதுப் பண்பு.

தாவோயிஸத்தைப் பொறுத்தவரை ஒன்று மிக மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றால் நேரெதிரே எதிர்ப்பது என்பது சரியான வழிமுறையல்ல. அதனைத் தன் வழியில் போக விட்டு, தன் வழியில் உச்சத்தை அடைய விட்டு, தானே தன் அழிவைத் தேடிக்கொள்ளச் செய்வதுதான் தாவோயிஸத்தின் பாணி. நம் உத்தி அவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதுதான் இதில் பிரதானமான உத்தி.

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

அதிகாரம் 36

ஒரு பொருளைச்

சுருக்க வேண்டுமென்றால்

அதை நிச்சயம் முதலில் விரித்துவைக்க வேண்டும்.

ஒரு பொருளை

வலுவிழக்கச் செய்ய வேண்டுமென்றால்

அதை நிச்சயம் முதலில் வலுப்படுத்த வேண்டும்.

ஒரு பொருளைக் கவிழ்க்க வேண்டுமென்றால்

அதை நிச்சயம் முதலில் போற்றி உயர்த்த வேண்டும்.

“ஒரு பொருளைப்

பெற வேண்டுமென்றால்

அதை நிச்சயம் முதலில் கொடுக்க வேண்டும்.”

சூட்சும ஞானம் என்று இது அழைக்கப்படுகிறது.

மென்மையும் மெலியதும்

கடினத்தையும் வலியதையும்

வெல்ல முடியும்.

மீன்கள்

கடலை விட்டு வெளியில் வரக் கூடாது;

அவ்வாறே,

ஒரு நாட்டின் கூர்மையான ஆயுதங்கள்

யாரிடமும் காட்டப்படக் கூடாது.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் சீன ஞானி

லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து; தமிழில்: சி.மணி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE