உறுதிப்படுத்தப்பட்ட உண்மை எது, வீண் வதந்தி எது என்று பகுத்தறிய முடியாதபரபரப்புக் கலாச்சாரத்துக்குத் தமிழகம் பலியாகத் தொடங்கியிருக்கிறது. ‘வாட்ஸ்-அப்’வாயிலாக, ‘குழந்தைகளைக் கடத்தும் வடநாட்டுக் கும்பல் நம் மாநிலத்துக்குள் முகாமிட்டிருக்கிறது’ என்று பரப்பப்பட்ட வதந்தி, அடுத்தடுத்த கூட்டுக் கொலைகளுக்கு வித்திட்டு, சூழலின் விபரீதத்தை உணர்த்தியிருக்கிறது. இதன் உச்சமாக, மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை, குழந்தைக் கடத்தல்காரர்களாகப் பார்த்து, ஊர் மக்களே ஒன்று சேர்ந்து தாக்கியதில், ஒரு மூதாட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.
நினைத்ததை நினைத்தவர்களுக்கு நொடிப் பொழுதில் தெரிவித்துவிடும் இன்றைய இணைய ஊடக வசதி, வரமாக இருப்பதற்கு பதில் சாபமாக ஆட்டிப் படைக்கிறது! பொறுப்பின்றி பகிரப்படும் வதந்திகளும் பரபரப்பு மசாலா தோய்க்கப்பட்ட செய்திகளும் மக்களின் சகிப்புத்தன்மையை மெல்லக் கொல்லும் விஷமாக மாறி வருகின்றன.
பொறுப்புடன் செயல்பட வேண்டிய பெரிய ஊடகங்களும்கூட, வன்முறையை மனதில் வளர்க்கும் தகவல்களுக்கும் காட்சிகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதை என்னவென்று சொல்வது? நாளெல்லாம் அச்சத்தையும், எதிர்மறைச் சிந்தனைகளையுமே பரப்பிக்கொண்டிருந்தால், மக்களிடம் அது எப்படியான செய்தி நுகர்வுக் கலாச்சாரத்தை உருவாக்கும் என்ற பிரக்ஞை வேண்டாமா? சுய பொறுப்புணர்வு இல்லாமல் எப்படி இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியும்?
சேவை உள்ளத்தோடு அர்ப்பணிப்பு உணர்வோடு சமூகத்துக்காக ஒவ்வொரு நாளும் உழைத்துக்கொண்டிருக்கும் எவ்வளவோ அற்புதமான மனிதர்கள் நம் மத்தியிலேயே இருக்கிறார்கள். அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் சமூகத்தை மேம்படுத்த எவ்வளவோ காரியங்கள் நடக்கின்றன. நல்ல செய்திகளுக்கா இங்கே பஞ்சம்? வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மட்டுமே வளர்ப்பதற்குத்தான் ஊடகங்கள் பயன்படும் என்றால், இப்படி ஒரு ‘வளர்ச்சி’ யாருக்குத் தேவை?