”அடிகளாரைக் கொல்லலாம்.. ஆனால் வெல்ல முடியாது..!” - போராட்டக் களத்துக்கு வரும் பாலபிரஜாபதி அடிகளார்!

By காமதேனு

லிங்காயத் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று அண்மையில் கர்நாடக அரசு, அவர்களுக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கியது. அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் வள்ளலாரைப் பின்பற்றும் சுத்த சன்மார்க்கத்தினரும் தனி மதக்கோரிக்கை விடுத்தனர். இதோ இப்போது, தென்கோடி முனையில் அய்யா வழியினரும் தங்களை தனி மதமாக அறிவிக்கக் கோருகிறார்கள்!

கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ம் நாள் திருச்செந்தூர் கடலில் இருந்து மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாக, வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து வெளியே வந்தார் என்பது ஜதீகம். அந்நாளே அய்யா அவதரித்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. முக்காலத்தையும் சொன்ன அய்யா வைகுண்டரின் தலைமைபதி சுவாமித்தோப்பில், ஆன்மிகச்சுடர் வீசிக் கொண்டிருக்கிறது. மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் கலி என்னும் மாய அரக்கனை அழித்து அவர்களைத் தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச் செல்ல நாராயணன் எடுத்த அவதாரமே, வைகுண்ட அவதாரம் என்பது அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்தபோது, சாதியப் பாகுபாடுகள் அதிகளவில் இருந்தன. பிற்படுத்தப்பட்ட பெண்கள் மேலாடை அணியக்கூட அனுமதி இல்லை. அந்த அளவுக்குத் தீண்டாமை உச்சத்தில் இருந்த நேரத்தில், சுவாமித் தோப்பில் முந்திரிகிணறு என்னும் சமத்துவக்கிணற்றை அமைத்தவர் அய்யா வைகுண்டர். தோளில் துண்டு போடவே அனுமதிக்காத நேரத்தில், “என்னைப் பார்க்க வருபவர்கள் துண்டை தலையில் கட்டி வாருங்கள்” என சாதியப் பாகுபாட்டுக்கு எதிராகச் சாட்டை சுழற்றியவர். இன்றும் சுவாமித்தோப்பு பகுதிக்குள் செல்லும் ஆண்கள் தலையில் முண்டாசுக்கட்டியே செல்கின்றனர்.

பக்தர்கள் அய்யாவைக் கடவுளாக தரிசித்து, நாராயணனின் அவதாரமாகவே வணங்குகிறார்கள். அய்யா வழிபாட்டுக் கென, தனித்த வழிபாட்டு முறைகளும் உள்ளன. அய்யா வழியின் புனிதநூலான அகிலத்திரட்டு, அய்யாவைத் திருமாலின் கலியுக அவதாரமாகக் காட்டுகிறது. அய்யாவே, அடியெடுத்துக் கொடுக்க, அவரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான அரிகோபாலன் எழுதியதே அகிலத்திரட்டு. இப்படி ஆன்மிக ரீதியாக சுவாமித்தோப்பு பற்றி ஆயிரம் சொல்லலாம்… அரசியல் அரங்கிலும் அய்யா வழிக்கு நீண்ட தொடர்பு உண்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE