2 கோடிப் புள்ளிகள்... 1330 குறட்பாக்கள்… தறியில் குறள் சமைக்கும் சின்னுசாமி!

By காமதேனு

கரூர் வெங்கமேட்டில் சோழன்நகரில் வசிக்கும் கே.ஏ.சின்னுசாமியின் வயது 72. கரூர் மாவட்டக் கைத்தறி நெசவாளர் பாதுகாப்பு சங்கத் தலைவராக இருக்கும் இவர் படித்தது ஒன்பதாம் வகுப்புதான். ஆனால், சாதனைக்கு வயதும் படிப்பும் காரணமும் அல்ல; தடையும் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். திருக்குறள் எனும் புனிதத்தை கைத்தறியில் நெய்ததுதான் இவரது சாதனை.

நீண்டதொரு ஓலைக்குடில். அதனுள்ளே அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நான்கு கைத்தறிகள். குவியலாய் பாவு நூல்கள். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவத்தின் வரிகளை நெய்துகொண்டிருந்த சின்னுசாமி, நம்மைப் பார்த்ததும் இறங்கி வருகிறார். விந்தி விந்தி நடந்து வந்தவர், “ஒரே மூச்சா மாசக்கணக்கில் உட்கார்ந்து 100 குறட்பாக்களுக்கு ‘கிரேப்ட்’ (வரைபடம்) எடுத்துட்டேன். அப்படியே 1,330 குறளுக்கும் செஞ்சுட்டு நெசவு நெய்ய தறிக்குழியில இறங்கறதுதான் திட்டம்.

ஆனா, அதுக்குள்ளே இடது கை வேலை செய்யல. டாக்டர் பார்த்துட்டு ஒரேயடியா இந்தக் கைக்கு வேலை கொடுக்காதீங்க. இல்லைன்னா, கை செயல் இழந்துடும்னு சொல்லியிருக்கார். அதுக்காக நம்ம நோக்கத்தை விடமுடியுமா? கிரேப்ட் செஞ்ச பத்து அதிகாரத்தை நெசவு செய்ய ஆரம்பிச்சுட்டேன். இது முடிஞ்சதும் அப்படியே 1330 குறட்பாக்களையும் நெய்யறதுன்னு முடிவு செஞ்சிருக்கேன்!” என்றபடியே, திரைச்சீலையில் நெய்த ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தைக் காட்டுகிறார்.

“இதில் ஒரு குறளுக்கு 15 ஆயிரம் புள்ளிகள். 100 குறளுக்கு 15 லட்சம் புள்ளிகள். 1,330 குறளும் சேர்த்தா, சுமார் 2 கோடிப் புள்ளிகள் வைத்து முதலில் கிரேப்ட் போடணும். அப்புறம்தான் அதைப் பார்த்து நெசவு வேலையில் இறங்கணும். இந்த ஒரு அதிகாரத்தை நெய்வதுக்கே மாசக்கணக்கில் ஆச்சு” என ஆச்சரியமூட்டுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE