அப்பா ஆடு மேய்க்கிறார்...மகன்  ஐஏஎஸ் ஆகிறார்..! - வாழ்த்துகள் யுவராஜ்!

By காமதேனு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள சின்னக்கல்லுந்தல், சரியான பேருந்து வசதிகூட இல்லாத கிராமம். இங்கு மொத்தமே 64 வீடுகள்தான்! அதில், 200 சதுர அடியில் ஒரு குடிசை வீடு. அதை ஒட்டியே சின்னதாய் ஒரு ஆட்டுக் கொட்டகை. காற்று பலமாக அடித்தால், குடிசையின் கூரை பறந்துவிடும். அந்த அளவுக்கு மக்கி இற்றுப் போய் கிடக்கும் கூரையில் ஓட்டைகளுக்கும் பஞ்சமில்லை. அந்தக் கூரையை மாற்ற சில ஆயிரங்களாவது தேவைப்படும். அதற்குக்கூட வழியில்லாததால், அரசியல் கட்சி ஃப்ளெக்ஸ் பேனர் ஒன்றை வைத்து ஓட்டைகளை மறைத்திருக்கிறார்கள்.

அந்தக் குடிசைக்குள் குனிந்தே நுழைய முடியும். அதனுள்ளே நிறைய புத்தகங்கள், கொஞ்சம் பாத்திரங்கள், துருப்பிடித்த சிறிய இரும்பு அலமாரி - இவை தவிர வேறெதுவும் அங்கு இல்லை. இந்த ஓட்டைக் குடிசையிலிருந்துதான் ஐஏஎஸ் என்ற லட்சியக் கனவை ஜெயித்திருக்கிறார் யுவராஜ்!

யுவராஜின் அப்பா ஆடு மேய்ப்பவர். அம்மா கூலிக்குக் காட்டு வேலைக்குச் செல்பவர். யுவராஜ் எட்டாம் வகுப்பு வரும் வரைக்கும் இந்தக் குடிசைக்கு மின்சார வசதிகூட இல்லை. அடுத்த வீட்டுக்குச் சென்றுதான் படித்திருக்கிறார். இ ப்போதும்கூட இந்த வீட்டில், குடிசை வீடுகளுக்கு வழங்கும் மீட்டர் இல்லாத ‘ஒன் லைட்’ சர்வீஸ்தான். தினமும் நெடுந்தூரம் சைக்கிள் மிதித்தே படிக்க வேண்டிய கட்டாயம், யுவராஜின் வளர்ச்சியைப் பற்றி பெருமை பேசுபவர்களுக்கு இவர் வீட்டுக் குடிசை நிச்சயம் தரும் சவுக்கடி!

யுவராஜ் தனது பள்ளிப்படிப்பை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மட்டுமே படித்தார். பேருந்து வசதியில்லாததால், பள்ளிக்குச் செல்ல சிரமப்பட வேண்டியிருந்தது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்து 10 -ம் வகுப்பில் 418 மதிப்பெண் பெற்றார். 12-ம் வகுப்பிலும் நல்ல சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார். வீட்டுக்குள் வறுமை குடியிருந்தாலும், மகனது படிப்பை மட்டும் எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக் கூடாது என்பதில் யுவராஜின் பெற்றோர் உறுதியுடன் இருந்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE