கடை திறப்பு விளம்பரங்கள் என்றாலே, சட்டென்று நடிகைகள்தான் ஞாபகத்துக்கு வருவார்கள். கோடிகளில் செலவு செய்து நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரம் செய்பவர்களுக்கு மத்தியில், திருநங்கை ஒருவரை விளம்பர மாடலாக்கி சமூக மாற்றத்துக்கான விதையையும் சேர்த்தே விதைத்துள்ளது கேரளத்து ஜவுளிக்கடை ஒன்று!
திருவனந்தபுரத்தில் கைதமுக்கு பகுதியில் இருக்கிறது கரால்கடை. கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் ஐந்து தலைமுறை கண்ட இந்த நிறுவனம், ஓராண்டுக்கு முன்பு திருச்சூரில் கிளை பரப்பியது. இரண்டாம் ஆண்டு துவக்க விழாவுக்காக, திருச்சூரில் அந்நிறுவனம் வைத்திருந்த விளம்பரப் பதாகையைப் பார்த்தவர்களுக்கு அவ்வளவு ஆச்சரியம்! காரணம், அந்தப் பதாகைகளில் மாடலாகி மிளிர்பவர் திருநங்கை கௌரி!
திருநங்கை ஒருவரை விளம்பர மாடலுக்கு நிறுத்திய விஷயம் கேரளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வித்தியாசமான முயற்சியாக இருக்கிறதே என்று ‘கரால்கடை’ நிறுவனத்தின் உரிமையாளர் அனீஷ் ராஜேந்திரனைத் தொடர்பு கொண்டோம். “இதுக்குக் காரணம் நானல்ல, என் மனைவி தீபாதான்” என்று அவரை நோக்கிக் கை நீட்டினார் அனீஷ்.
“திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள், தங்கள் குடும்பத்துக்குக் கைத்தறித் துணிகளை நெய்து கொடுப்பதற்காகத் தஞ்சையில் இருந்து, நெசவாளர்களைத் திருவனந்தபுரத்துக்கு அழைத்துவந்து குடியமர்த்தினார்கள். அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் என் கணவர் குடும்பத்தினர். திருவனந்தபுரத்தில் எங்கள் கடை இருக்கும் வீதிக்கு `கைதமுக்கு கரால்கடை சாலை’ என்று பெயர் இருப்பதே அதன் பழமைக்குச் சான்று. ஏற்கெனவே, அமலாபால் உள்ளிட்ட பிரபல நடிகைகளை வைத்து எங்கள் கடைக்கு விளம்பரம் செய்திருக்கிறோம் என்றாலும், திருச்சூர் கிளைக்கு ஏதாவது வித்தியாசமாக சிந்திக்கலாமே என்று தோன்றியது.