காஷ்மீரிகளின் வலியை உணருங்கள்..!- காஷ்மீர் எம்.எல்.ஏ. முகமது யூசுப் தாரிகாமி பேட்டி

By காமதேனு

எப்போதும் பதற்றம் நிலவும் ஜம்மு - காஷ்மீரில் இப்போது பொதுமக்கள் கொல்லப்படுவது இன்னும் அதிகமாகிவிட்டது. தீவிரவாதம், அரச பயங்கரவாதம் இரண்டும் மக்களை வதைக்கின்றன. தீவிரவாதம் ஒழிப்பின் பெயரில் வீசப்படும் ‘பெல்லட்’ குண்டுகள் பலரின் பார்வையைப் பறித்திருக்கிறது. தீவிரவாதிகளைப் பிடிக்கவரும் பாதுகாப்புப் படையினர் மீது மக்கள் கல்வீசுகிறார்கள். கடந்த வாரம் தமிழகத்திலிருந்து குடும்பத்துடன் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த இளைஞர் திருமணி இப்படிப்பட்ட கல்வீச்சு சம்பவம் ஒன்றில் சிக்கி  உயிரிழந்துள்ளார்.

போதாதுக்கு, நாட்டையே அதிரச் செய்திருக்கிறது ‘கதுவா’ சம்பவம். ‘காஷ்மீர் ஏன் இன்னும் பற்றியெரிகிறது’ என்கிற தலைப்பில் பேச, சென்னைக்கு வந்திருந்தார் காஷ்மீரின் குல்காம் தொகுதி எம்.எல்.ஏ-வும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி. 1996-ல் தொடங்கி நான்காவது முறையாக குல்காம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் தாரிகாமி. ‘காமதேனு’வுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

காஷ்மீர் பிரச்சினை தீவிரமடைந்துகொண்டே இருக்கிறதே, எப்படித்தான் தீர்த்துவைப்பது?

காஷ்மீர், ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் துயரம் சூழ்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீர் எப்போதும் இப்படி இருக்கவில்லை. 1947-ல் காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பினார்கள். வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் காஷ்மீருக்கும் சில தனித்தன்மைகள் இருந்தன. எனவே, இந்தியாவுடன் சேரும்போது தன்னாட்சி உரிமைகளைக் கோரியது. அவை ஏற்கப்பட்டன. அப்போதைய அரசை ஆண்டவர்கள் கொடுத்த வாக்குறுதிகள், அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டன. அவைதான் அந்த தனித்துவமான உறவுக்கு அடித்தளம் அமைத்தன. அப்போது அவர்களுக்கு இந்தியா மீது மிகுந்த நம்பிகை இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறிவிட்டது. இதுவே இன்றைய பிரச்சினையின் அடிநாதம். இதைப் புரிந்துகொள்ளாமல் எந்தத் தீர்வும் சாத்தியமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE