காலத்தின் பாடலை சாலைகளே முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன. உள்ளங்கையில் ரேகைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதுபோல, உலகெங்கும் சாலைகள் ஒன்றையொன்று வெட்டியும் தழுவியும் ஓடுகின்றன. புறக்கணிக்கப்படுகின்ற பழைய பாதைகள் கடந்தகாலத்தை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் என்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள்.
நான் முடிவற்ற சாலையில் பயணம் செய்ய விரும்புகிறவன்.
முடிவற்ற சாலை எங்கேயிருக்கிறது? புறத்தில் அல்ல. நம் அகத்தினுள் தானிருக்கிறது.
‘அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, ஜப்பான் என எத்தனையோ தேசங்களை, பல்லாயிரம் மைல்களைக் கடந்து போயிருக்கிறீர்களே... உங்கள் அகத்தினுள் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள்? அங்கே என்ன கண்டீர்கள்? வெளியே வியப்பூட்டும் விஷயங்கள் ஆயிரம் இருப்பது போல அகத்திலும் இருப்பதை உணர்ந்தீர்களா?’ ஒருமுறை வாரணாசியில் ஒரு யோகி என்னிடம் இப்படிக் கேட்டார். அப்போதுதான், பயணம் என்பது வெளியில் அலைவது மட்டுமில்லை என்பதை உணர்ந்தேன்.
பயணம் என்பது இருவிதமானது. ஒன்று, ஊர் விட்டு ஊர் போகிற பயணம். இன்னொன்று இருந்த இடத்தில் இருந்தபடியே முடிவற்ற அண்டவெளியில் மனதால், நினைவால் சஞ்சாரம் செய்வது. தன்னைப் பிரபஞ்ச ஜீவியாக உணர்வது.
உலகெங்கும் ஒரே காற்று, ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே வானம்! பூமிதான் பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்பிரிக்க மனிதனுக்கும் நமக்கும் இடையில் உடல் ரீதியாக ஒரு வேறுபாடும் கிடையாது. நிற வேறுபாட்டைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பசியும் காமமும் மனிதனை இயக்குகின்றன. அறிவே மனிதனின் பெருந்துணை. பிரபஞ்சத்தின் வயதோடு ஒப்பிடுகையில், பூமியின் வயது குறைவு. பூமியின் வயதோடு ஒப்பிடுகையில், மனிதர்களின் வயது மிக மிகக் குறைவே.
மனிதர்களைத் தவிர எந்த விலங்கும் தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. இறப்பை நினைவு வைத்து வருந்துவதுமில்லை. மனிதர்களுக்குப் பிறப்பும் முக்கியம் இறப்பும் முக்கியம்.
காரணம், மனிதனுக்கு வாழ்வு என்பது கிடைத்ததற்கரிய பேறு. அதிலும் கூன்குருடு செவிடு நீங்கி பிறந்தால் பேரதிர்ஷடம்! அப்படிப் பிறந்த மனிதன் தன் பெருமையை அறிந்து கொண்டானா? இல்லையே!
குகையில் வாழத் தொடங்கிய நாள் முதல் மனிதர்கள் பயணம் செய்து கொண்டேயிருந்திருக்கிறார்கள். முதல் மனிதன் எதைத் தேடிப் பயணித்திருப்பான்? நிச்சயம் அவன் ஒரு சுற்றுலா பயணியாக இருந்திருக்க முடியாது. நாடுபிடிக்கப் போகிறவனாகவும் இருந்திருக்க மாட்டான். வணிகனாகவோ, அதிகாரத்தைத் தேடி அலைபவனாகவோ இருந்திருக்க மாட்டான்.
பூமி எவ்வளவு பெரியதென அறியாத ஒருவனின் திகைத்த தேடலாகவே அது இருந்திருக்கும். குகையில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் வேட்டையாட பயணம் செய்தார்கள். விலங்குகள் உள்ள கானகம் தேடியோ, சதுப்பு நிலங்களை நோக்கியோ ஆயுதங்களுடன் நடந்தார்கள். அன்று மனிதர்களுக்கு நடப்பது என்பது ஆனந்தமானது. மனிதர்களின் கால்கள் அந்தக் காலத்தில் மிகவும் வலிமையாக இருந்தன. பகலிரவாக நடந்தபோதும் மனிதர்கள் சோர்ந்து போகவில்லை. நம் காலம் இயந்திரங்களின் காலம். இது மனிதர்களின் கால்களை முடக்கிவிட்டது. வீட்டிலிருந்து தெருமுனை வரை நடப்பதற்கே அலுத்துக் கொள்கிறார்கள்.
மருத்துவர் ஆலோசனையின் பேரால் நடப்பவர்களே இன்று அதிகம்.
ஆனால், பண்டைய காலத்தில் திசையறியாது, நட்சத்திரங்களைத் துணையாகக் கொண்டு நடந்தவர்கள் அதிகம். அதிலும் கடலில் செல்பவர்களின் கதி? நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால், மனிதர்கள் எதைக் கண்டும் அஞ்சவில்லை. பூமியின் ஒருபுறமிருந்து மறுபுறம் நோக்கி நடந்தார்கள். மனிதனின் காலடி படாத இடங்களே இல்லை என்னும் அளவு மனித குல வரலாற்றில் அவன் நடந்து திரிந்திருக்கிறான். நடைதான் மாற்றங்களை உருவாக்கியது. புதியன கொண்டு வந்தது. கண்டுபிடிப்பு களுக்கு அடிகோலியது.
மனிதர்கள் உருவாக்கிய பெரும் கட்டுமானங்கள், கலைக்கூடங்களைத் தேடிக் காண்பதை விடவும், குகைகளைக் காண்பதை அதிகம் நான் விரும்புவேன். குகைகள் கற்களால் ஆனவை. கதவுகள் அற்றவை. ஜன்னல் கிடையாது. தாயின் கருவறை போல எப்போதும் இருட்டானவை, பாதுகாப்பானவை. ஒரு குகைக்குள் எத்தனை பேர் வசித்தார்கள்? கணவன், மனைவி, பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு குகை வழங்கப்பட்டதா என்ன? இல்லை! நாலைந்து குகைகளுக்குள் அங்கே வசித்த அத்தனை பேரும் ஒன்றாகவே இருந்தார்கள். அந்தக் குகைக்குள்தான் குடும்பம் நடத்தினார்கள். பிறப்பும் இறப்பும் அங்கேயே நடந்தேறின.
தமிழகத்திலுள்ள கற்காலக் குகைகளில் முக்கியமானது - குடியம் குகை. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து 15 கிமீ தொலைவிலுள்ள குடியம் எனும் கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்! அவர்கள் வசித்த குகைத்தலம், இன்றும் காணப்படுகிறது. குடியம் குகையில் வசித்தவர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த ஆயுதங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுத் தற்போது காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இவர்களின் கற்கோடாரி மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் குகையில் வசித்த நாட்களில் மழைக்காலம் முழுவதும் வெளியே செல்லமாட்டார்கள். கோடை மிக மோசமான குடிநீர், உணவு பஞ்சத்தைக் கொண்டுவரும் என்பதால், கோடையில் அலைந்து திரிந்து உணவு தேடி வருவார்கள். போன் செய்தால் வீடு தேடி உணவு வரும் இக்காலத்தில் இருந்து கொண்டு, அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது எனத் தெரியாத கற்கால மனிதனின் துயரைப் புரிந்துகொள்வது அத்தனை எளிதானதில்லை.
இயந்திரங்களின் வருகைக்கு முன்புவரை மனிதர்களின் கைத்திறன் அழகான கலைப்பொருட்களைச் செய்தன. கல்லாயுதம் துவங்கி ஆடைகள் வரை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள். மியூசியத்தில் அவற்றைக் காணும்போது, இப்படி ஒரு நேர்த்தியை எப்படி உருவாக்கினார்கள் என வியப்பாக உள்ளது. குறிப்பாக, கல்லை எப்படி இவ்வளவு வழுவழுப்பாக மாற்றினார்கள் எனப் பிரமிப்பாகவே உள்ளது.
இத்தனை கலைநுட்பம் கொண்ட கற்கால மனிதர்களை நாம் ஏன் படிக்காதவர்கள் என ஏளனம் செய்கிறோம்?
படித்த, அறிவாளி மனிதர்களால் இது போன்ற கலைநுட்பத்தை ஏன் செய்ய முடிவதில்லை? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுர சிற்பங்களைப் போல ஒன்றே ஒன்றை ஏன் இப்போது எவராலும் உருவாக்க முடியவில்லை?
பயணம் ஏற்படுத்தும் முதல் அனுபவம் - நம்மை அறிந்துகொள்ளத் துவங்குவதுடன் நம்மோடு உள்ள உலகை ஆராயத் துவங்குவதும் ஆகும்.
குடியம் குகைக்குச் செல்வது ஒரு சாகசப் பயணமே. காலையில் நடக்கத் துவங்கினால், மாலைக்குள் போய்விடலாம். செம்மண் படிந்த ஒற்றையடி பாதை. வழியில் விதவிதமான புதர்ச் செடிகள், புற்கள் அடர்ந்த பாதை. வழியில் பெரிய மரங்கள் கிடையாது. நடக்க நடக்கக் காற்று தலையைக் கோதுகிறது. எங்கிருந்தோ இனிமையாகப் பறவை ஒன்று பாடுகிறது. அதன் பாடல், காலத்தைத் தாண்டி ஒலிப்பதாக இருந்தது. பாறைப் படிவுகளால் இயற்கையாவே உருவான குகைகள் இரண்டு. அதில் ஒன்று பெரியது. மற்றது சிறியது. லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை என்றார்கள்.
குகையினுள் நின்றபோது தொல்விலங்கு ஒன்றை நேரில் கண்டது போலவே உணர்ந்தேன். நூறு வருஷ பழமையான வீடு ஒன்றினைக் கண்டாலே நாம் பிரமித்துவிடுகிறோம். இந்தக் குகையின் வயது சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள்! எந்தத் தனி நபருக்கும் இந்தக் குகை சொந்தமாக இருந்திருக்காது. வீடு என்பது பொதுவாக இருந்த சமூகமில்லையா...
வெயிலில் நடந்து போய்ச் சேர்ந்தோம். உள்ளே குளிர்ச்சியாகவே இருந்தது. இருநூறு பேருக்கும் மேலாக வசித்திருக்கலாம்.
நூறு வருடத்துக்கு முன்பேகூட குளிர்சாதன வசதிகள் கிடையாது. இதுவோ எத்தனை ஆண்டுகள் முந்தையது! இயற்கை அளிக்கும் குளிர்ச்சியே பயன்பட்டது. இன்று இயற்கையான குளிர்ச்சியை யாரும் விரும்புவதில்லை. மரத்தடி நிழலில் நிற்பதை அவமானமாக நினைக்கிறார்கள். செயற்கை குளிரூட்டிகளால் உடல்நலம் கெடுவதுடன், உடலின் இயல்பும் மாறிவிடுகிறது.
குகை மனிதர்கள் காலத்தில் எளிதில் கிடைக்காத பொருள்- நெருப்பு. அதைத் தேடி அலைவதும். ஒரு இனக்குழுவிடமிருந்து இன்னொரு இனக்குழு நெருப்பைப் பெற சண்டையிட்டதும் வரலாறு. இதைப்பற்றி ‘Quest for Fire’ என்ற திரைப்படத்தில் அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.
குகை ஒவியங்கள் உள்ள சில குகைகளைக் கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் எந்த ஓவியன் இதை வரைந்திருப்பான் என நினைத்து வியந்திருக்கிறேன். ஆனால், எடுவர்தோ கலியானோ என்ற எழுத்தாளர் எழுதிய ‘மிர்ர்’ என்ற புத்தகத்தை வாசித்தபோது, இந்தக் குகை ஒவியங்களை வரைந்தது ஏன் ஒரு பெண்ணாக இருந்திருக்கக் கூடாது என்ற வரியைக் கண்டு திகைத்துப் போனேன். ஆமாம், அது ஏன் ஒரு பெண்ணாக இருந்திருக்கக் கூடாது?
இத்தனை ஆண்டுகளாக ஏன் ஆண் மட்டுமே வரைந்திருப்பான் என்ற சிந்தனையில் ஊறிப்போயிருந்தோம்? சட்டெனக் கலியானோ என்னை விழிப்படையச் செய்துவிட்டார். நம் அகப் பயணத்தில் முக்கியமானது இது போன்ற புத்தக வாசிப்பே. உங்களுக்கு விருப்பமிருந்தால் ‘Mirrors: Stories of Almost Everyone’ நூலை வாசித்துப் பாருங்கள். இதுபோன்ற அறிவுத்தூண்டல் நிறையவே கிடைக்கும்!
படங்கள்: எம்.முத்துகணேஷ்