ஒலிப்பான் என்னும் மொழி!

By காமதேனு

தற்போதைய அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடியில் ஒலிப்பானைப் பயன்படுத்தாமல் யாரும் வாகனங்களை இயக்கிவிட முடியாதுதான். ஆனால், மிக எளிதானதும், அற்புதமானதுமான அந்தத் தகவல் தொடர்பு சாதனத்தை நாம் அப்படிப் பயன்படுத்துவதில்லை. தேவைக்கு அதிகமாகவே, இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாமல்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.

சில பல ஆண்டுகளுக்கு முன்பாக என் நெருங்கிய நண்பர் ஒருவர் என்னைத் தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு தினமும் செல்வார். ஓரிடத்தில் ‘கீங், கீங்’ என ஒலிப்பானை இருமுறை அழுத்துவார். இப்படித் தொடர்ந்து மூன்றுமுறை அழுத்துவார். அடுத்தகணம் உள்ளேயிருந்து அவரது காதல் தேவதை முகம் காட்டுவார். இதேபோல இன்னொரு காட்சி. குனிந்த தலை நிமிராமல் நடந்துசெல்வார் அந்தக் கல்லூரி மாணவி.

எதிரே, பின்னே என்று தன்னைச் சுற்றும் ரோமியோக்களை நிமிர்ந்துகூட பார்க்க மாட்டார். தன் வழி தனி வழி என்பதுபோல் சென்றுகொண்டிருக்கும் அந்தப் பெண், ‘பாம், பாம்’ என்ற இரண்டு முறை தொடர்ந்து ஒலிக்கும் தனியார் பேருந்தின் ஒலிப்பான் சத்தத்தைக் கேட்டுவிட்டால் போதும். முகம் மலர்ந்து தலை உயர்த்திப் பார்ப்பார். ஒலிப்பான் ஒரு காதல் தூதுவனல்லவா?

அரசுப் பேருந்துகளின் ஒலிப்பான்கள் வேறுவிதமான மொழியில் பேசும். அடுத்த நிறுத்தத்தில் நிற்க வேண்டுமா என்பதற்கும் வண்டியை கிளப்பலாமா என்பதற்கும் ஒலிப்பானை அழுத்தியே நடத்துநரிடம் அனுமதி கேட்கும் ஓட்டுநர்கள் உண்டு.  இந்த இடத்தில் ஒலிப்பான் கேள்வியின் நாயகன். எதிரேவரும் அரசுப்பேருந்தின் ஓட்டுநரை நலம் விசாரிக்கவும் ஒலிப்பானே மொழிக்கருவி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE