எம்.எல்.ஏ. சம்பளம் ஏழைகளுக்கே!
ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினருக்கான தனது சம்பளம் முழுவதையும் தொகுதியின் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குவதற்கே செலவிடுகிறார். அண்மையில், ராஜபாளையத்திலுள்ள ஆதரவற்ற இல்லம் ஒன்றின் குழந்தைகளை மொத்தமாக ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருப்பமான துணி மணிகளை எடுத்துக் கொடுத்து ஆனந்தப்படுத்தினார். ’பெரிய தொழிலதிபரான இவருக்கு எம்.எல்.ஏ. சம்பளமெல்லாம் ஒரு பொருட்டா?’ என விமர்சனங்கள் இருந்தாலும் ‘இவரைக்காட்டிலும் வசதியான எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், அவர்களுக் கெல்லாம் இந்த மனசு வரலியே’ என்கிறார்கள் இவரால் பலனடைந்த ஏழைகள். எம்எல்ஏக்களின் சம்பளம் 1.05 லட்சமாக உயர்ந்துவிட்டாலும், கட்சித் தலைமையின் உத்தரவுப்படி அதை ஏற்காமல் பழைய சம்பளமான 55 ஆயிரத்தையே ஊதியமாகப் பெறுகிறார் தங்கபாண்டியன்.
என்னாச்சு ம.நடராஜன் மணிமண்டபம்?
மன்னார்குடி குடும்பத்துக்குள் அதிரடியாய் கிளம்பியிருக்கும் அதிகார யுத்தத்தால் ம.நடராஜனுக்கு மணிமண்டபம் கட்டும் வேலைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம். நடராஜன் இறந்து ஒரே வரத்தில் நடந்த பட திறப்பு நிகழ்வில், இன்னும் 15 நாளில், முளிவாய்க்கால் முற்றம் எதிரே நடராஜன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சூளுரைத்தார்கள். ஆனால், அதற்குப்பிறகு அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லையாம். இது தொடர்பாக மாமனிடமும் மருமகனிடமும் யாராவது பேசினால், ’இப்ப அதுதான் முக்கியமா?’ என்பது போல் ஜம்ப் ஆகிறார்களாம். இதனால், நடராஜன் மீது பற்றுகொண்ட அவரது ரத்த சொந்தங்கள் செய்வதறியாது நிற்கின்றன.