தாவோ: பாதை புதிது - 10

By ஆசை

அகிரா குரோசவாவின் அழகான படம் ‘ட்ரீம்ஸ்’. குரோசவாவின் பத்துக் கனவுகளை அடிப்படையாகக் கொண்டு தொகுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் ‘ட்ரீம்ஸ்’ படத்தின் இறுதி அத்தியாயத்தின் பெயர் ‘நீராலைகள் நிறைந்த கிராமம்’.

நீர்வளம் மிக்க அந்த ஊருக்குப் புதிதாய் வருகிறான் ஒரு இளைஞன். ஆற்றின் நீரோட்டத்தால் சுழன்றபடி ஓரத்தில் வரிசையாக நீராலைகள். ஒருசில குழந்தைகள் கரையோரப் பூக்களைப் பறித்து அருகே இருந்த ஒரு சிறு பாறையின் மேல் வைத்துவிட்டுப் போகின்றன. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே அந்த இளைஞன் அருகில் உள்ள ஒரு குடிசையை நோக்கிச் செல்கிறான். குடிசைக்கு வெளியே ஆற்றை ஒட்டியபடி நீராலையின் சக்கரத்தை ஒரு தொண்டு கிழவர் பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் வணக்கம் தெரிவித்துவிட்டு அந்த ஊரின் பெயர் என்ன என்று இளைஞன் கேட்கிறான்.

“இந்த ஊருக்குப் பேர்

ஏதும் இல்லை. நாங்கள் இதை கிராமம் என்று சொல்வோம். வேறுசிலர் நீராலைக் கிராமம் என்று சொல்வார்கள்” என்கிறார் அந்தத் தாத்தா.

“இங்கு மின்சாரம் கிடையாதா?

“அதற்குத் தேவை இல்லை. இப்போதெல்லாம் மக்கள் ரொம்பவும் வசதிக்குப் பழகிவிட்டார்கள். வசதிதான் நல்லது என்று நினைக்கிறார்கள். எது உண்மையிலேயே நல்லதோ அதைத் தூக்கி எறிகிறார்கள்” என்கிறார் தாத்தா.

“சரி, வெளிச்சத்துக்கு என்ன செய்வீர்கள்?”

“இருக்கவே இருக்கிறது மெழுகுவர்த்திகளும் ஆளிவிதை எண்ணெயும்.”

“ஆனால், இரவில் ரொம்பவும் இருட்டாக இருக்குமே?”

“ஆமாம். இருட்டாக இருக்கத்தானே இரவு! இரவுகளும் பகலைப் போல வெளிச்சமாக இருந்தால், எனக்குப் பிடிக்காது. அப்புறம் விண்மீன்களை நம்மால் பார்க்க முடியாமல் போய்விடும்.”

“எரிபொருளுக்கு என்ன செய்வீர்கள்?”

“விறகு பயன்படுத்துவோம். அதே வேளையில் மரங்களை வெட்டுவது சரியல்ல என்று நினைக்கிறோம். ஆனால், நிறைய மரங்கள் தானாகவே விழும். அவற்றை வெட்டி விறகாகப் பயன்படுத்துவோம்” என்கிறார்.

மேலும் சொல்கிறார், “மனிதன் ஆதிகாலத்தில் எப்படி வாழ்ந்தானோ, அப்படியே வாழ நாங்கள் முயல்கிறோம். அதுதான் இயற்கையான வாழ்க்கை. இன்றைக்கு உள்ள மனிதர்கள் தாங்களும் இயற்கையின் அங்கம்தான் என்பதை மறந்துவிட்டார்கள். எந்த இயற்கை நம் வாழ்க்கைக்கு அடிப்படையோ, அதே இயற்கையை அழிக்கிறார்கள். இருக்கிறதைவிட சிறப்பாக ஒரு விஷயத்தைத் தங்களால் படைக்க முடியும் என்று மனிதர்கள் எப்போதும் நினைக்கிறார்கள். முக்கியமாக, விஞ்ஞானிகள் அப்படி நினைக்கிறார்கள். அவர்களெல்லாம் அறிவாளிகளாக இருக்கலாம். ஆனால், இயற்கையின் ஆன்மாவை அவர்களில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை.

அவர்கள் கண்டுபிடிப்பதெல்லாம் மக்களை மேலும் மேலும் துன்பத்தில்தான் ஆழ்த்துகின்றன. தங்கள் கண்டுபிடிப்புகளை நினைத்துப் பெருமையும் கொள்கிறார்கள்… இயற்கையை இழந்துகொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. தாங்கள் அழியப்போகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. மனிதர்களுக்கு வேண்டியதெல்லாம் என்ன? நல்ல காற்றும் நல்ல தண்ணீரும் இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் மரங்களும் புற்களும்தானே?” என்கிறார் தாத்தா.

ஆற்றங்கரையில் உள்ள கல்லின்மீது குழந்தைகள் பூக்கள் வைத்தது பற்றி அந்த இளைஞன் கேட்கிறான்.

“ஒரு காலத்தில் யாரோ உடம்பு முடியாத வழிப்போக்கர் ஒருத்தர் அந்தப் பாலத்துக்கு அருகில் உயிர்விட்டிருக்கிறார். அவர் மேல் இரக்கப்பட்ட கிராமத்து மக்கள் கரையிலேயே அவரைப் புதைத்துவிட்டு, மேலே பெரிய கல்லையும் வைத்தார்கள்.அதற்குப் பிறகு அந்தப் பாலத்தைக் கடப்பவர்கள், அந்தக் கல்லின்மேல் பூக்களை வைத்து அந்த வழிப்போக்கருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்தக் கதையைப் பற்றித் தெரியாமலேயே பழக்கதோஷத்தில் மக்கள் அந்தக் கல்லின்மேல் பூ வைத்துவிட்டுப் போவதும் உண்டு.”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஊர்வலம் ஒன்று வருவதைப் போல இசை முழக்கம் கேட்கிறது. அது என்ன கொண்டாட்டம் என்று அந்த இளைஞன் கேட்க, 99 வயதுப் பெண்மணி ஒருவர் இறந்துபோய்விட்டார் என்றும் தானும் அந்தக் கொண்டாட்டச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டுமென்று கூறிவிட்டுப் புறப்படும்போது சொல்கிறார் அந்தத் தாத்தா, “அவள்தான் என்னுடைய முதல் காதலி. வேறு ஒருத்தனுக்காக என்னை நிராகரித்துச் சென்றுவிட்டாள்.”

அவர் கிளம்பும்போது இளைஞன் அவரைக் கேட்கிறான், “உங்கள் வயது என்ன?”

அவர் சொல்கிறார், “103. வாழ்வதை நிறுத்திக்கொள்ள சரியான வயது.”

‘தாவோ தே ஜிங்’கின் 25-வது அதிகாரத்தின் இறுதி வரிகளை இந்தத் தாத்தாவின் வாழ்க்கையும் நீராலைக் கிராமமும் நினைவூட்டுகின்றன:

“மனிதன் வையகத்தைப் பின்பற்றுகிறான்;

வையகம் வானகத்தைப் பின்பற்றுகிறது;

வானகம் தாவோவைப் பின்பற்றுகிறது;

தன் உள்ளார்ந்த இயற்கை நியதிகளை

தாவோ பின்பற்றுகிறது.”

ஜென் பவுத்தம் வழியாக ஜப்பானில் தாவோயிஸத்தின் தாக்கம் பெரிதும் உண்டு. அகிரா குரோசவாவுக்குள் இருந்த தாவோ மனிதர்தான் அந்தப் படத்தில் தாத்தா பாத்திரமாக மாறியிருக்கிறார். இயற்கையோடு இயைந்து வாழ்தல், இயற்கையைச் சுரண்டாமல் அதன் போக்கில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுதல் போன்றவை தாவோயிஸ வாழ்க்கை முறைகள். இந்தப் படத்தில் வரும் நீராலைகள் தாவோயிஸத்துக்கு மிகவும் நெருக்கமானவை. நீரோட்டத்தைத் தடுக்காமல் அதன் வேகத்தைப் பயன் படுத்திக்கொண்டு நீராலை சுழல்கிறது.

அப்படிச் சுழல்வதன் மூலம் மாவு அரைக்கவும் இன்ன பிற காரியங்களுக்கும் அது பயன்படுகிறது. இதுதான் தாவோ யிஸத்தின் செயல்படாமை தத்துவம். செயல்படாமை என்றால் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருப்பது என்று பொருள் அல்ல. ஒரு செயலை அதன் போக்கில் தானே நிகழ அனுமதித்தல். இயற்கையின் மெல்லியல்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத இயல்பான குறுக்குவழியைக் கண்டுபிடித்தல். மிதமாகச் செயல்படுதல். சிறு அளவுப் பயன்பாட்டுக்காகச் செயல்படுதல். அறிவியல் வளர்ச்சியே வேண்டாம் என்று தாவோயிஸம் கூறவில்லை, நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் வளர்ச்சி வேண்டாம் என்றுதான் அது சொல்கிறது.

‘ட்ரீம்ஸ்’ படத்தின் தாத்தா நமக்கு ஜப்பானிய வேளாண் ஞானி மசானோபு ஃபுக்கோகாவை நினைவுபடுத்துகிறார். “மனிதர்களின் ஆசையையெல்லாம் பூர்த்திசெய்ய பூமியால் முடியும். ஆனால், மனிதர்களின் பேராசையைப் பூர்த்தி செய்ய பூமியால் முடியாது” என்று சொன்ன காந்தியையும் நினைவுபடுத்துகிறார். காந்தி தாவோயிஸத்தைப் பற்றி அறிந்திருக்காவிட்டாலும், அவருடைய பல வழிமுறைகள் தாவோயிஸத்துக்கு மிகவும் நெருக்கமானவை. லாவோ ட்சு, மசானோபு ஃபுக்கோகா, காந்தி போன்றோர் வானகத்தைப் பின்பற்றும் வையகத்தைப் பின்பற்றியவர்கள்!

‘போய்க்கொண்டே இருப்பது’ என்று ஒரு வரி ‘தாவோ தே ஜிங்’கின் இந்த அதிகாரத்தில் வருகிறது. இதற்கு, ‘உயிர்த்துடிப்புடன் இருப்பது’ என்று பொருள்.‘இந்த ரயில் வந்துகொண்டிருக்கிறதா? இல்லை போய்க்கொண்டிருக்கிறதா’ என்று எங்கோ எப்போதோ ஒரு கவிதை படித்திருக்கிறேன். வந்துகொண்டிருக்கும் ரயில்தான் போய்க்கொண்டிருக்கும்; போய்க்கொண்டிருக்கும் ரயில்தான் திரும்பி வரும். ‘எல்லாமே மூலாதாரத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன’ என்று தாவோயிஸம் கூறுகிறது. மூலாதாரம் என்பது எல்லாவற்றுக்கும் அடிப்படையான இன்மை, அதாவது தாவோ. கண்ணதாசன் மொழியில் சொல்வதென்றால் தாவோ என்பது ‘பிறக்கும் முன்னே இருந்த உள்ளம்!’

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

அதிகாரம் 25

உள்ளார்ந்த, இயற்கையான விஷயம்

ஒன்று உண்டு;

அது வானக, வையகத்துக்கு முன்பாக இருந்தது.

சலனம் அற்றதாக,

ஆழம் காண முடியாததாக

அந்த ஒன்று தனித்து நின்று

ஒருபோதும் மாறாமல் இருக்கிறது.

அந்த ஒன்று எங்கும் வியாபித்து

ஒருபோதும் தீர்ந்துபோகாமல் இருக்கிறது.

அந்த ஒன்றைப் பிரபஞ்சத்தின் அன்னை எனலாம்.

அந்த ஒன்றின் பெயர் எனக்குத் தெரியாது;

பெயர் கொடுத்தே ஆக வேண்டும் என்றால்

அதை தாவோ என்று அழைப்பேன்;

அந்த ஒன்றுக்கு

உன்னதம் என்றும் பெயர் கொடுப்பேன்.

உன்னதம் என்றால்

போய்க்கொண்டே இருப்பது என்று அர்த்தம்.

போய்க்கொண்டே இருப்பது என்றால்

தூரமாகப் போவது என்று அர்த்தம்;

தூரமாகப் போவது என்றால்

திரும்பிப் போவது என்று அர்த்தம்.

எனவே, தாவோ உன்னதமானது;

எனவே, வானகம் உன்னதமானது;

எனவே, வையகம் உன்னதமானது;

எனவே, மனிதனும் உன்னதமானவன்.

எனவே, நான்கு உன்னத விஷயங்கள்

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன;

மனிதனும் அவற்றில் ஒன்று.

மனிதன் வையகத்தைப் பின்பற்றுகிறான்;

வையகம் வானகத்தைப் பின்பற்றுகிறது;

வானகம் தாவோவைப் பின்பற்றுகிறது;

தன் உள்ளார்ந்த இயற்கை நியதிகளை

தாவோ பின்பற்றுகிறது.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் சீன ஞானி

லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து; தமிழில்: சி.மணி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE