கோயம்பேடு... தேமுதிக தலைமை அலுவலகத்தை ஒட்டிய ஷெட்டில் தலைவர் விஜயகாந்த் கார் மறைவாக நிற்கிறது. “கேப்டன் வந்திருக்கிறது தொண்டர்களுக்கோ நிர்வாகிகளுக்கோ தெரியாது. தெரிஞ்சிருந்தா, கூட்டம் பின்னி இருக்கும். நீங்க நிம்மதியா பேட்டி எடுக்க முடியாதில்ல...” என்றபடி முதல் மாடிக்கு அழைத்துச் செல்கிறார் வரவேற்பாளர்.
பெரிய அறை... வெளியே பாயும் வாகனங்களின் ஹாரன் சத்தம் எதுவும் கேட்காத ஏசி சூழல். அறையின் இடது கோடியில் அமர்ந்திருக்கும் விஜயகாந்த், “வாங்க, வாங்க” என்று வாய் நிறைய வரவேற்கிறார். வழக்கமான நாட்டு நடப்பு விசாரிப்புகள் முடிந்ததும், “இந்த கூலிங் கிளாஸைப் போட்டுக்கவா? ரொம்ப வெளிச்சம் பட்டா, கண்ணுலருந்து தண்ணி வந்து, துடைச்சுகிட்டே இருக்கணும்” என்று புன்னகைக்கிறார். பக்கவாட்டில் பொருத்தப்
பட்ட டிவி-யின் நியூஸ் சேனலில் ஒரு கண் வைத்தபடியே பேட்டிக்குத் தயாராகிறார்.
திரைத்துறையில் 40 ஆண்டுகளைக் கடந்திருக்கிறீர்கள். அதற்கென நடந்த விழாவில் உங்கள் மீது அன்பு கொண்டவர்களின் உணர்ச்சி மிகுந்த உரைகளைக் கேட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?