தாவோ: பாதை புதிது - 9

By ஆசை

தொழிற்புரட்சி வந்து, புதிய புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பெருந்திரள் மக்களுக்குக் குவியல் குவியல்களாகப் பொருட்கள் உற்பத்தி செய்ய ஆரம்பித்தபோது, எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. ஒரு மாதத்தில் ஒரு மனிதர் செய்ய வேண்டிய வேலையை ஒரு மணி நேரத்தில் ஒரு இயந்திரம் செய்து முடித்தது. அன்று விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் சிரமப்பட்டுப் போட்டுப்பார்த்த கணக்குகளை இன்று ஒரு நிமிடத்திலேயே போட்டுவிடக்கூடிய கணினிகள் வந்துவிட்டன. மனித சிரமம், நேரம், பணம் எல்லாம் எவ்வளவு மிச்சம்! எனினும், மனிதனுக்கு இந்த நவீன வாழ்க்கையும் அதன் இயந்திரங்களும் எந்த அளவுக்கு விடுதலை அளித்திருக்கின்றன என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் முன்பைவிட மகிழ்ச்சியாக இருக்கிறோமா? முன்பை விட நமக்கு அதிக நேரம் மிச்சமாக இருக்கிறதா?

ஜென் கதை ஒன்றுண்டு. அதிவேகமாக விரைந்துகொண்டிருந்த குதிரை மேலே ஒருவன் சவாரி செய்துகொண்டிருந்தான். சாலையோரத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒருத்தன் குதிரை மனிதனிடம் ‘எங்கே போகிறாய்?’ என்று கேட்கிறான். அதற்கு அந்தக் குதிரை மனிதன், “குதிரையையே கேளுங்கள்” என்று கூறி முடிப்பதற்குள் குதிரை அங்கிருந்து கடந்துவிடுகிறது. நாம் இன்று மிக வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். வேகம் என்பது நமது கையில் இல்லாமல், வேகத்தின் கையில் நாம் இருக்கிறோம். இந்த வேகத்தைத் தணிப்பதற்குத்தான் காலம்தோறும் லாவோ ட்சு, புத்தர், இயேசு, காந்தி போன்றவர்கள் தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறவில்லை என்று நாம் கூறலாம். உண்மையில் நாம் மிகவும் மோசமாகத் தோல்வியடையாமல் தடுத்துக்கொண்டிருப்பவர்கள் அவர்களைப் போன்றவர்கள்தான்.

பழமையான சீன, ஜப்பானிய ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஓவியப் பரப்பில் சிறிய இடத்தை மட்டுமே மனிதர்களின் உருவங்களோ, விலங்குகள், பறவைகள், குடில்கள் போன்றவையோ ஆக்கிரமித்திருக்கும். ஓவியத்தின் பெரும்பான்மையான இடம் வெற்றிடமாகவே, வெற்றிடமான நிலப்பரப்பு, வான்பரப்பாகவோதான் இருக்கும். தாவோ மனிதர்கள் இந்த வாழ்க்கையின் மிகச் சிறிய பரப்பில், ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். இயற்கைக்குள் நம்முடைய இடம் மிகவும் சிறியது என்பதை இயல்பாக உணர்ந்திருப்பவர்கள். மிக மிக எளிமையானவர்கள். நாம் விடும் மூச்சு எவ்வளவு இயல்பாகவும் நம் முயற்சியின்றியும் தானாக நிகழ்வதுபோல், தாவோ மனிதர்கள் இயற்கை விடும் மூச்சுபோல் வாழ்பவர்கள்.

எனக்கு ராமச்சந்திரன் என்ற நண்பர் உண்டு. கருணாநிதியை விட ஒரு வாரம் இளையவன் என்று சொல்லிக்கொள்வார். அச்சு உருக்களை உற்பத்திசெய்யும் ஃபவுண்ட்ரி எனப்படும் சிறு உற்பத்திக்கூடத்தை வைத்திருந்தவர், அந்தத் தொழில் முழுவதும் முடங்கிப்போனதும் தன் மனைவியுடன் முகப்பேரில் உள்ள ஒரு அடுக்ககத்தின் மூன்றாவது மாடியில் தன்னை முடக்கிக்கொண்டார். அவரது இரண்டு பிள்ளைகளும் தனித்தனியாகச் சென்றுவிட்டார்கள். இந்த உலகோடு ராமச்சந்திரனுக்கு இருக்கும் ஒரே தொடர்பு புத்தகங்கள்தான். அதுவும் சீனக் கவிதைகள்தான் அவரது உயிர். ‘டவுன் டு எர்த்’ (மிகவும் யதார்த்தமாகவும் எளிமையாகவும் இருப்பவை) என்பார். இந்தப் பிரபஞ்சத்தில் எந்த மூலையில் சீனக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானாலும் அவருக்குத் தெரிந்துவிடும். நண்பர்களை வைத்து வாங்கிவிடுவார்.

புத்தகங்களும் ஒரு நேரத்தில் சொத்துபோல் ஆகிவிடுமல்லவா! ஒரு கட்டத்தில், தனக்கென்று சீனக் கவிதைகளையும் அவற்றின் தொனியில் உள்ள உலகக் கவிதைகளையும் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற புத்தகங்களை விற்க ஆரம்பித்தார். சில சமயம் சிறிய புத்தகத்தை ஆயிரம் ரூபாய்க்கு எனக்குத் தருவார். சில சமயம் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள அருமையான புத்தகத்தைப் பணம் வாங்கிக்கொள்ளாமல் தருவார். என்றாவது ஒருநாள் அவருக்குத் தெரியாமல் அவருடைய பிரத்யேக சேமிப்பைக் கொள்ளையடித்துவிட வேண்டும் என்ற பேராசை வெகு நாட்களாக எனக்கு உண்டு.

ஒரு முறை எதைப்பற்றியோ பேசிக் கொண்டிருந்தபோது மன்மோகன் சிங்கின் பெயரை எதற்காகவோ உதிர்த்தேன். “அவர் யார்?” என்று ராமச்சந்திரன் என்னிடம் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கிட்டத்தட்ட ஏழாவது ஆண்டாக அவர் பிரதமராக இருந்துகொண்டிருந்தார். மன்மோகன் சிங் யார் என்றே தெரியாத அளவுக்குத் தன் வாழ்க்கையின் மிகச் சிறிய ஒரு மூலையில் ராமச்சந்திரன் வாழ்ந்துகொண்டிருந்தார். மன்மோகன் சிங் யார் என்று ஒருவர் தெரிந்திருக்க வேண்டுமா என்ற கேள்வி என்னை விடாமல் துரத்தியது. இந்த உலகோடு சேர்ந்து ஓட வேண்டுமென்றால், மன்மோகன் சிங்கை அறிந்திருக்கத்தான் வேண்டும். ஆனால், மன்மோகன் சிங்கை, மோடியை, ரஜினிகாந்தை, எம்ஜிஆரை, நேருவை, காந்தியை, நெப்போலியனை அறிந்திருக்காத மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களையெல்லாம் அறிந்திருப்பவர்களால், இந்த உலகுக்கு ஏற்படும் அழிவுகளை விட, அறிந்திருக்காமல் இருப்பவர்களால் ஏற்படும் அழிவு மிகக் குறைவுதானே என்று எனக்குத் தோன்றியது. நாம் அறிந்திருக்கும் யாவும் நம்மை விடாமல் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றன. நமது அறிவு, ஓவியத்தின் முழுப் பரப்பையும் நாமே ஆக்கிரமித்துக்கொள்ள வழிவகை செய்கிறது. மேற்கத்திய ஓவியங்களை சீன, ஜப்பானிய ஓவியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த வேற்றுமை நமக்குப் புரிபடும்.

இந்த ஒரு நாளைக் கடத்துவதற்கு நமக்கு எவ்வளவு அறிவு, எவ்வளவு செய்திகள், எவ்வளவு தகவல்கள் தேவைப்படுகின்றன? நமக்கு எவ்வளவு அடையாளங்கள், எவ்வளவு அடையாள அட்டைகள், எவ்வளவு கடவுச்சொற்கள் தேவைப்படுகின்றன? திடீரென்று ஒருநாள் கண்விழித்துப் பார்க்கும்போது நம் அடையாள அட்டைகள் காணாமல் போனால், நம் கடவுச்சொற்கள் காணாமல் போனால் நாம் என்ன ஆவோம்? இறுதியில் நம் அடையாள அட்டைகளும் கடவுச்சொற்களும்தான் நாமா?

இந்த உலகம் பிரம்மாண்டங்களால் ஆனதுபோல் தெரியும்! அந்தப் பிரம்மாண்டங்கள் அனைத்துக்கும் நுண்மையே அடிப்படை. சிறியனவற்றால் ஆனது இவ்வுலகம். அதனால்தான் ‘சிறியதே அழகு’ என்றார் பொருளாதார மேதை ஹூமாக்கர். தாவோ மனிதன் மிகச் சிறியவன், எளிமையானவன். அவனுக்கு மன்மோகன் சிங்கையும் மோடியையும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், தன் வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு அவனைப் போல யாரும் சுவையான கேப்பங்கூழைத் தயாரித்துத் தர முடியாது. இந்த உலகம் அவனைப் போல எளிய மனிதர்களால் இயங்குகிறது.

எந்தத் தகவல் தொடர்பு சாதனமும் வைத்திராத ராமச்சந்திரனுடன் இடையில் தொடர்பு விடுபட்டுப்போய்விட்டது. அவருடைய குடியிருப்பை இடித்துப் புது அடுக்ககம் கட்டிக்கொண்டிருந்தார்கள். அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, ராமச்சந்திரன் வேலூரிலுள்ள தன் மகன் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். மறுபடியும் ஒருமுறை அவர் வந்துவிட்டாரா என்று விசாரித்துப் பார்த்தேன். வரவில்லை. அதற்குப் பிறகு அவரைப் பற்றி விசாரித்துப் பார்க்க எனக்கு அச்சம்.

என் மனதில் ஒரு அழகான சீன ஓவியம் உண்டு. அது 95% வெற்றுப் பரப்பைக் கொண்டது. அதன் ஒரு மூலையில் சற்று உற்றுப் பார்த்தால் சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி ஒரு நபர் தெரிவார். அவர் ராமச்சந்திரன்தான். இன்னும் உற்றுப்பார்த்தால், கையில் ஒரு புத்தகம் வைத்திருப்பது தெரியும். புத்தகத்தின் தலைப்பெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. சீனக் கவிதைப் புத்தகமாக இருக்கலாம். ஏன், ‘தாவோ தே ஜிங்’காகக் கூட இருக்கலாம். அந்த ஓவியம் அப்படியே இருக்கட்டும்.

அதிகாரம் 15

பழங்காலப் பரிபூரண தாவோ மனிதன்

நுட்பமானவன், கூர்மையானவன்;

புரிந்துகொள்ள முடியாத அளவு

ஆழமானவன்.

அவனைப் புரிந்துகொள்ள முடியாது என்பதால்

அவனை நான் சித்தரிக்கப் பார்க்கிறேன்:

அவன் எச்சரிக்கையாக இருக்கிறான்,

குளிர்காலத்தில் ஓடையைக் கடக்கிற ஆள் மாதிரி;

அவன் தயக்கத்துடன் இருக்கிறான்,

அண்டை அயலாருக்குப் பயப்படுகிற ஆள் மாதிரி;

அவன் அடக்கமாக இருக்கிறான்,

வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி மாதிரி;

அவன் நெகிழ்வாக இருக்கிறான்,

உருகப்போகிற பனிக்கட்டி மாதிரி;

அவன் தன்னியல்பிலேயே இருக்கிறான்,

தச்சன் கைபடாத மரம் மாதிரி;

அவன் வெறுமையுடன் இருக்கிறான்,

உள்ளீடற்ற பள்ளத்தாக்கு மாதிரி;

அவன் தெளிவற்று மங்கி இருக்கிறான்,

கலங்கிய நீர் மாதிரி.

மெதுவாய் வெளிச்சமாகும்வரை

யார் இருட்டை விளக்க முடியும்?

மெதுவாய்த் தெளியும்வரை

யார் கலங்கலைத் தெளியவைக்க முடியும்?

மெதுவாய் அசையும்வரை

யார் தேக்கத்தை முடுக்கிவிட முடியும்?

இந்த அடிப்படைகளைப் பின்பற்றும் மனிதன்

முழுமைக்கு ஆசைப்படுவது இல்லை.

முழுமையற்றிருப்பதால், அவன் சிதைந்துபோகும்போது

தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

- சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்

சீன ஞானி லாவோ ட்சு எழுதிய

‘தாவோ தே ஜிங்’ நூலிலிருந்து; தமிழில்: சி.மணி

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE