வெயில் மனிதர்கள்!

By காமதேனு

காலை 10 மணிக்கு ஏசி நிறைந்த அலுவலகத்தில் நுழைந்து, மாலை ஆறு மணிக்கு வெளியே வரும்  ‘ஆஃபிஸ் கோயர்’களுக்கு உண்மையான வெயிலின் தாக்கம் தெரியாது. தப்பித்தவறி இடையில் வெளியே வந்துவிட்டால், ‘ப்ப்ப்பா....என்னா வெயிலு... மண்டையப் பொளக்குதுடா சாமி. ஏப்ரல் மாசமே  இப்படின்னா... மே மாசத்த நினைச்சா?’ என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், இந்தக் கொளுத்தும் வெயிலுக்கு வாழ்க்கைப்பட்டவர்களும் இங்கே இருக்கிறார்கள். அந்த வெயில் மனிதர்களைத் தேடிய பயணம் இது.

வடபழனி பேருந்துநிலையம் அருகே வெயிலைப் பொருட்படுத்தாமல் சாலைகளைப் பெருக்கி குப்பைகளை வாரிக்கொண்டிருந்தனர் ராஜேந்திரனும் மங்கம்மாவும். ராஜேந்திரனிடம் பேசினேன். “கொருக்குப்பேட்டைல இருக்கேன். அங்கருந்து சைக்கிள்லதான் வர்றேன். வெயிலும் மழையும் எங்களுக்கு ஒண்ணுதான். தாகம் எடுத்தா பக்கத்து ஓட்டல்ல தண்ணி வாங்கிக் குடிச்சுப்போம். சென்னை மக்கள் மூக்கைப் பொத்திக்கிட்டுப் போகாம இருக்க நாங்க வேலை செஞ்சிதான ஆகணும். இந்த வேலை செஞ்சிதான் என் பெரிய பையனை இன்ஜினீயரிங் படிக்க வெச்சிருக்கேன்” என்று பெருமையாகச் சொல்கிறார்.

கொளுத்தும் வெயிலில் அண்ணா சாலை அனலைக் கக்கிக்கொண்டிருந்தது. ஆனந்த் தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் இருக்கும் பேக்கரி ஒன்றின் வாசலில் ப்ளாட்ஃபாரத்தில் உட்கார்ந்திருக்கிறார் நீலவேணி பாட்டி. தரையில் செய்தித்தாள்களும், வார இதழ்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ என்ற பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

“தம்பி இந்த மாதிரி பாட்டைக் கேட்டுக்கிட்டே கண்ணை மூடுனா... ஒரு நதி பாய்ந்தோடுது. நதியோரம் இருக்கும் தென்னை மரங்கள்லருந்து பொடியன்க  நதியில் குதிக்கிறாங்க. என்ன ஒரு ஆனந்தம்...! இப்படி அந்தக் காலத்து நினைவுகள்லதான் இந்த கொளுத்தும் வெயிலையும் நாளையும் கடத்துறேன். 37 வருஷம் ஓடிடுச்சு” என்கிறார் நீலவேணி. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE