வர்றாரு வர்றாரு.. கள்ளழகர் வர்றாரு!

By காமதேனு

மீனாட்சியம்மன் கோயிலில் திருவிழா நடந்து கொண்டிருக்கும்போதே, அழகர்கோயிலிலும் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடும். சித்திரை வளர்பிறை ஏகாதசியன்று (இந்த ஆண்டு ஏப்ரல் 12) தொடங்கிய இந்த விழா அழகர் மதுரை வந்து சேரும்வரை தனித் திருவிழாதான். அதன் பிறகு, அதுவும் மதுரை சித்திரைத் திருவிழாவோடு ஐக்கியமாகிவிடும்.

ஒரே நாளில், ஒரே ஊரில் இரண்டு விழாக்கள் நடந்துவிட்டால் மட்டும் அவை ஒரே திருவிழா ஆகிவிடாதல்லவா? எனவே, இருவிழாக்களையும் ஒன்றாக்கும் வகையில் அழகான ஆன்மிகக்கதையை உருவாக்கினார்கள். பெருமாளின் (அழகர்) தங்கை தான் மீனாட்சி.

தங்கையின் திருக்கல்யாணத்தின் போது, தாரை வார்த்துக் கொடுக்க வேண்டியவர் அழகர்தான். அதன்படி, சித்திரை மாதம் நடைபெறும் தங்கையின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சீர் வரிசைகளுடன் அழகர்மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படுகிறார் அழகர். ஆனால், வழிநெடுகிலும் பக்தர்களின் உபசரிப்பு காரணமாக அவர் மதுரை வந்து சேர தாமதமாகிறது.

தனது அண்ணன் குறித்த நேரத்தில் வராததால், மிகுந்த கவலைக்கு உள்ளாகிறாள் மீனாட்சி. அண்ணன் வந்து தாரை வார்த்துக் கொடுத்தால்தான் திருமணம் என்று விடாப்பிடியாக நிற்கிறார் மீனாட்சி. இதனால் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படுகிறது. நிச்சயித்த திருமணம் நின்றுவிடக் கூடாதே என்று சிவனே, அழகராகவும் உருவெடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார். அவர்தான் திருவிளையாடல்களை நிகழ்த்துவதில் கெட்டிக்காரர் ஆயிற்றே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE