சொட்டாங்கல் – சிலம்பாயி

By காமதேனு

தமிழச்சி தங்கபாண்டியன்

“பால் வீச்சம் அடிக்கா செமதி”னு எப்பப் பாத்தாலும் நொய்நொய்ங்கிற சிலம்பாயி, என்னை விட வயசுல மூத்தவ. ஒண்ணாப்பையே ரெண்டு வருசம் படிச்சா. நா மூணாப்புல இருக்கிறப்பவும் அவ ஒண்ணாப்புதா. நாலு ஆடுகளும், ஒண்ட ஒரு குடுசையும்தா அவளுக்கும், அவ அம்மாவுக்கும். தொடச்சு வுட்டாப்ல ‘நிகுநிகு’னு தூத்தல் தேங்குன களிமண்ணு நெறத்துல அம்சமா இருப்பா. அவளோட ஆட்டுப்பால் கவுச்சி வாடைக்காக அவ பக்கத்துல யாரும் ஒக்காரதில்ல. ஆனாக்க எனக்கு அந்த வாடை அம்புட்டுப் புடிக்கும். செத்த வசதியான ஆட்களுக்குத்தான் கரிசக்காட்டுல மாட்டுப் பால் கொடுப்பினை. பால் காப்பிங்கிறது தீவாளிக்குத் தீவாளி சுடற தோசை மாரி எப்பவாச்சும் விருந்தாடிக வந்தாத்தான்.

சிலம்பாயி பள்ளியோடத்துல என்னிய ஒத்த வேல செய்ய விட மாட்டா. பாட்டீச்சர் பாத்தா அவளத் திட்டுவாப்ல. பாட்டீச்சருக்கு பேசறப்பவும் மூக்கு வழியதா சத்தம் வரும். அதால அவங்களுக்கு ‘ஜல்பு ரேடியோ’னு பட்டப்பேரு வச்சுட்டான் மொதலாளித் தெரு நாகுல்சாமி. சிலம்பாயிக்கு இந்த ‘ஜ’ல்லாம் வராதுங்கிறதால அவ எப்பவுமே ‘பல்பு ரேடியோ’ன்னுதா சொல்லுவா. “ஒனக்கு ஒத்தாச செஞ்சா ஏன் இந்த ‘பல்பு ரேடியோ’ வையுது?

நீதா பாட்டெல்லாம் நல்லா பாடிடறல்ல”னு முணங்குவா. பாட்டீச்சருக்கு என்னியச் சாக்கா வச்சு அவள வையணும். ஏன்னா சிலம்பாயி ‘ஜன கண மன’ கூடச் சரியாப் பாட மாட்டா. அவளோட சேந்துகிட்டுராசுவும் ‘சன கண மன’னு ஒத்த வரியோட நிறுத்திருவான். அவளும் ராசுவும் மட்டும் பாட்டு கிளாஸ்ல ‘குன்னிமுத்து’ எண்ணிப் பாத்து, அடி வாங்குவாய்ங்க.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE