பாடுக பாட்டே! - 8

By நாஞ்சில் நாடன்

முன்வரிசையில் அமர்வது எப்போதும் உவப்பான காரியம் அல்ல. தன்னைத் துருத்திக்கொள்ளாத, முன்னிறுத்திக்கொள்ளாத தன்மையைப் பிற்காலத்தில் அதிலிருந்து நான் ஒருவேளை பெற்றிருக்கக் கூடும். முன்வரிசையில் இருப்போர் எல்லாம் முதல் தரத்து ஆட்கள் இல்லை என்பது அனுபவப் பாடம்.விவரம் தெரியாத சிறு பிராயத்தில், எங்கள் சிற்றூரில் கல்யாண வீட்டில் சாப்பிட மூன்றாம் பந்தியில் அமரப் போய், “அப்பிடி என்ன பதற்றம்?” என்று கைதூக்கி வெளியே விடப்பட்டதும்கூடக் காரணமாக இருக்கலாம், இந்த முன்வரிசைக் கூச்சத்துக்கு. அட்டணங்கால் போட்டு நான் அமர்ந்திருப்பதை எவரும் கண்டிருக்க இயலாது. அதுவும் தாழ்வுணர்ச்சி சார்ந்ததாக இருக்கலாம். ஆளானப்பட்ட இராமலிங்க வள்ளலாரே "கைகளை வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்" என்கிறார். நாம் எம் பாடு?

இலக்கியக் கூட்டங்களில் வேறு வழியற்றுப் போய்த்தான் முன்வரிசையில் உட்காருவது, தகுதி இல்லை என்பதனால் அல்ல, எவரும் வந்து, “விஐபி வந்திருக்கார், கொஞ்சம் பொறுத்துப்போறேளா?” என்று கேட்டுவிடக் கூடாது அல்லவா? ஆனால், மரியாதையை நாம் துறப்பது வேறு. நம்மைப் புறக்கணித்துப் பின்வரிசைக்கு அனுப்புவது என்பது வேறு!

1972-ல் பம்பாய்க்குப் போனேன் பிழைப்புத் தேடி. என் தனிமை, வாசிப்பை நோக்கித் தள்ளியது. வாசிப்பு, பேசத் தூண்டியது. அந்தக் காலத்தில் குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜ., அ.ச.ஞா., பா.நமச்சிவாயம் தலைமைகளில் ஓர் அணியின் கடைசிப் பேச்சாளனாகப் பட்டிமண்டபம் பேசியிருக்கிறேன். நம்புவது நம்பாதது உங்கள் தேர்வு. பணம் ஈட்டும் நெடுஞ்சாலை துறந்து தரித்திரவாச முடுக்குகளைத் தேர்ந்தெடுத்தேன். எனினும் நிறைவு உண்டு, செத்த பின்பும் என் நூல்கள் சில வாழும் என்று.

அவ்விதம் பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் ஒரு பட்டிமன்றம். 1975-ஆக இருக்கலாம். ஒரு அணியின் மூன்றாவது பேச்சாளன் நான். வாகீச கலாநிதி, கலைமகள் ஆசிரியர், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் தலை மாணாக்கர் கி.வா.ஜகந்நாதன் நடுவர்.

அரங்கத்தின் மேடை மேல் மேடைபோட்டுத் திண்டு போட்டிருந்தனர். திண்டில் அமர நடுவருக்கும் அணித்தலைவர் களுக்கும் இன்னும் மூன்று பேருக்குமே இடம் இருந்தது. என் அணியின் கடைசி ஆளான எனக்கு வேறுவழியின்றி தனி நாற்காலி போட்டார்கள். மற்றெல்லாரும் காங்கிரஸ் மாநாட்டு மேடைபோல் திண்டில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க, நான் மட்டும் டவாலிபோல. அசௌகரியமான நெளிச்சல் எனக்கு. நடுவர் முதலில் பேசினார். அணித்தலைவர்கள் ஆங்காரமாக ஆடினார்கள். ஆராசனை வந்தது. அணிப்பேச்சாளர்கள் பேசினார்கள். ஆறாவது கடைசிப் பேச்சாளன் நான். கி.வா.ஜ. என் இருப்பை மறந்து தீர்ப்பு சொல்லத் தொடங்கினார்.

பம்பாய்த் தமிழ்ச் சங்கத்துச் செயலாளர் ஓடிவந்து நடுவரின் காதில் ஓத, எனக்கு வாய்ப்பு வந்தாலும், உடம்பெல்லாம் மசுக்குட்டி ஊர்வது போலிருந்தது. சிறிய விடுதல்தான். கி.வா.ஜ.-வுக்கு என்மேல் முன்பகையோ வாய்க்கால் வரப்புத் தர்க்கமோ கிடையாது என்றாலும், எனக்கது இன்றும் நினைவில் தங்கி நிற்கிறது.

மதுரையில் ஒரு தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு விழா. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் தமிழ் என்பது பொதுத்தலைப்பு. குமரித் தமிழ், நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், சென்னைத் தமிழ், ஈழத் தமிழ், தொண்டை மண்டலத் தமிழ் என சிறப்புத் தலைப்புகள். மேடையில் அந்தத் தொலைக்காட்சியின் நிறுவனர் இருந்தார். அவரது மகனார் இருந்தார். சினிமா இயக்குநர் ஒருவர், பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர், பத்திரிகையாளர் ஒருவர் என முன்வரிசையில், பின்வரிசையில் மற்றும் பலருடன் நான் இருந்தேன். எனது இருப்புகூடப் பெரிதல்ல. என் பக்கத்தில் ஈழத்தின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. இருந்தார்.

2017 டிசம்பர் மாதம் திருச்சியில் ஒரு பரிசளிப்பு விழா. மேடையில் முன் வரிசையில், பரிசளிக்கும் அமைப்பின் நிறுவனர் இருந்தார். அவர் முன்னாள் மத்திய அமைச்சர். சினிமாப் புகழ் கவிஞர் இருந்தார். முன்னாள் துணைவேந்தர் இருந்தார். முற்போக்குப் பேச்சாளர் இருந்தார். பின்வரிசையில் மற்றும் பலருடன் சாகித்ய அகாதமி விருது, கலைமாமணி விருது, கண்ணதாசன் விருது, கனடா நாட்டு இயல் விருதும் பெற்ற, 45 நூல்கள் எழுதிய, படைப்புகளில் 25 பேர் முனைவர் பட்டம் பெற்ற, தமிழின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவனாகிய நானும் இருந்தேன்.

நீங்கள் கேட்கலாம், இறங்கி வெளியே நடந்திருக்கலாமே என. இரண்டு காரியங்கள் என்னைத் தடுத்தன. எங்கு அமர்ந்திருந்தாலும் நான் பேசப் போவதை நான்தானே பேச இயலும் எனும் துணிவு. இரண்டாவது, யாவற்றையும் மீறிய அச்சம். இதைச் சொல்ல வெட்கமாக இல்லையா என்று கேட்பீர்கள்! எனக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவையாக இருக்கின்றன, எழுத.

நம் நிலை இதுவென்றால், ஔவையாரின் நிலைமை அதைவிட மோசமாக இருந்திருக்கிறது. எங்கெல்லாமோ சுற்றி அலைந்து, கூழைப் பலா தழைக்கப் பாடி, உப்புக்கும் மூவாழாக்குத் தினைக்கும் பாடி, வழி நடந்து சோர்ந்து, சோழன் அவைக்களத்தில் நுழைகிறாள். சோழன் அவளை ஔவை என்று அறிந்தான் இல்லை. “அமருங்கள்” என்கிறான். ஆனால், ஒரு நாற்காலிகூடக் காலியாக இல்லை. எழுந்து இடம் கொடுப்பதற்குப் பிறருக்

குப் பைத்தியமா என்ன? ஔவை நின்றுகொண்டே இருந்தாள்.

மறுபடி தலை நிமிர்ந்து பார்த்த சோழன், “உட்காரச் சொன்னேனே” என்கிறான். ஔவையார் பாடினாள்-

‘கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்

யான்வந்த தூரம் எளிதன்று - கூனல்

கருந்தேனுக்கு அங்காந்த காவிரிசூழ் நாடா

இருந்தேனுக்கு எங்கே இடம்?’

காவிரி சூழ்ந்து ஓடுகின்ற நாட்டின் மன்னனாகிய சோழனே! உனது நாட்டில், காவிரிக் கரையின் நெடிதுயர்ந்த மரங்களில் கருந்தேன் கூடுகள் பருத்துத் தொங்குகின்றன. ஆற்றங்கரையின் நத்தை ஒன்று அந்தத் தேன்கூடுகளிலிருந்து ஒரு சொட்டுக் கருந்தேன் விழாதா என்று அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அத்தகு வளநாடன் நீ. நானோ கடினமான வழிகளில் நடந்து நொந்தவள். யான் வந்த தூரமானது கடப்பதற்கு எளிதான தூரமும் அன்று. அத்தகைய எனக்கு, உட்கார இடம் உன் அவையில் எங்கே இருக்கிறது?

நாட்டில் வளத்துக்குக் குறைவில்லை. ‘கூனல் கருந்தேனுக்கு அங்காந்த காவிரி சூழ் வளநாடு'. ஆனால், ‘யான் வந்த தூரம் எளிதன்று' என்பது குறிப்புணர்த்தும் வரி. பெரும்பாலும் அனைத்துத் தமிழ் நவீன இலக்கியவாதிகளுக்கும் இதுதான் நிலைமை. அரசியல்வாதிக்கும், அரசியலுக்கு வர சிறகு விரித்துக் காத்திருக்கும் சினிமாக்காரர்களுக்கும் பூரண கும்பம். மொழியைக் காலந்தோறும் கடத்திக்கொண்டிருப்பவர்கள் கண்ணெட்டா தூரத்தில் நின்று கிடக்கிறார்கள்.

மனம் நொந்த ஔவையின் இன்னுமோர் பாடல், போலியான, ஆடம்பரமான, செல்வத்தை இலக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகிற, அரைவேக்காட்டுக் கவிதைக்காரர்களுக்கு எதிரானது.

‘விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்

விரல்நிறை மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்

பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை

நஞ்சேனும் வேம்பேனும் நன்று'

அதிகார மையங்களின் அடுப்பம் வேண்டும். வெளிநாட்டுகார் வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இரண்டோ மூன்றோவைத்துக்கொள்ள, மேடையில் போடும் பொன்னாடைகளையும் அன்பளிக்கும் புத்தகங்களையும் ஓடிவந்து வாங்கிக்கொள்ள வசதியான அடியாட்கள் வேண்டும். அவர் கவிதைஉலகில் இதுவரை எவராலும் எழுதப்படாத சிந்தனை மின்னல் கீற்றுகள் என்பார்கள். ஔவை போன்றவர்களுக்குக் கீரைக்கடைசல் கிடைத்தால் அமுதம் என்று அலைவார்கள்.

(இன்னும் பாடுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE