தொடரட்டும் போர்... மாறட்டும் களம்!

By காமதேனு

போர்க்களம் என்பதன் நிகழ்கால உதாரணம் ஆகிவிட்டது தமிழ்நாடு. திரும்பிய பக்கமெல்லாம் மத்திய, மாநில அரசுகளை மட்டுமின்றி... உச்ச நீதி மன்றத்தையும் எதிர்த்து விதவிதமான போராட்டங்கள். இதனால், அனல் பூமி ஆகி இருக்கிறது நம் மாநிலம். கறுப்புக் கொடியே தமிழ்க் கொடி போலவும், கறுப்புச் சட்டையே தமிழர் அடையாளம் போலவும் ஆகிவிடுமோ என்ற நிலை.

‘தொட்டதற்கெல்லாம் போராட்டமா? மாநிலத்தின் அன்றாட வாழ்க்கை இப்படி முடங்கிப் போனால், வளர்ச்சிக்கு ஏது வழி?’ என்ற கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், இந்த நிலைக்கு நம்மை ஆளாக்கி வைத்திருப்பவர்கள் அல்லவா இதற்குப் பதில் சொல்ல வேண்டும்?

அண்டை மாநிலம் பங்கிட்டுத் தர வேண்டிய நதி நீரில் தொடங்கி, காவிரிப் படுகையைக் குறி வைக்கும் கார்ப்பரேட் திட்டங்கள் வரை... எல்லாமே தமிழகத்தின் விவசாய வளத்தை மொத்தமாக அற்றுப் போகச் செய்யும் திட்டமிட்ட சதிகள்தானோ என்றல்லவா எண்ண வேண்டி இருக்கிறது! அடுக்கடுக்காக வஞ்சனைகள் நிகழ்த்தி, வீதியில் நின்று போராடுவதையே தமிழகத்தின் குணமாக மாற்றி, வந்தாரை வாழ வைக்கும் இந்த மாநிலத்தின் முகத்தையே வெறுப்பின் அடையாளம் போல் ஆக்கிக் காட்டுவதற்கு ஒரு மாபெரும் சதி நடக்கிறது என்று ஏன் சொல்லக் கூடாது?

போர் சரிதான்! களம்தான் மாறவேண்டும். ஒரு அய்யாக்கண்ணுவின் தொடர் டெல்லி போராட்டத்தை நாடு திரும்பிப் பார்த்தது என்றால்... இப்போது இங்கே போராடிக் கொண்டிருக்கும் அத்தனை சக்திகளும் திட்டமிட்டு டெல்லியில் திரண்டு நின்று, தங்கள் உரிமைக் குரலால் ஏன் கிடுகிடுக்க வைக்கக் கூடாது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE