பாடுக பாட்டே! - 7

By நாஞ்சில் நாடன்

‘ஏழிளம் தமிழ்' என்பதொரு தொகை நூல். இளைய பருவத்தினர் கற்றிருக்க வேண்டிய ஏழு நீதி நூல்கள் அவை. ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நான்கும், அதிவீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை எனப்படும் நறுந்தொகையும், சிவப்பிரகாசரின் நன்னெறி, உலகநாதரின் உலகநீதியும் என ஏழு.

எங்கள் சிற்றூரில் இருந்த அரசு தொடக்கப்பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு முன்புநான் பயின்றபோது, பத்து மணிக்குப் பள்ளி எனில், ஒன்பதரைக்கே பள்ளி வராந்தாவில் அமர்ந்து, கோரஸாக நாங்கள் எண்சுவடி சொல்வோம். இன்றும் வாய்ப்பாடு மனப்பாடம். தொடர்ந்து அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது

கரவேல், ஈவது விலக்கேல் என ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை...

அப்படித்தான் நமக்கு ஔவையார் அறிமுகம். ஔவையார் என்றால் உங்களுக்கு டி.கே.சண்முகமோ கே.பி.சுந்தராம்பாளோ நினைவுக்கு வரலாம். 'என்ன என்ன என்ன என்ன வேலைப் பிடித்ததும் என்ன' என்ற பாட்டும் நினைவுக்கு வரலாம்.

ஔவையார் என்ற புலவர் ஒருவர் அல்ல. சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும் எனப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் நூல்கள் பதினெட்டில், எட்டுத்தொகை நூல்களில் 59 பாடல்கள் எழுதிய ஔவையார் யாவர்க்கும் மூத்தவர். விநாயகர் அகவல் பாடியது வேறோர் ஔவை.

ஞானக்குறள் பாடிய சித்தர் இன்னொரு ஔவை. நீதிநூல்கள் செய்த ஔவை வேறு. தனிப்பாடல்கள் பாடியது பிற்காலத்து ஔவை என ஐவர் இருந்தனர் என்று 1897-ம் ஆண்டு ‘ஔவையார் சரித்திரம்’ என்ற நூல் எழுதிய ஐயம்பதி தா.வேதாசல முதலியார் குறிப்பிடுகிறார். அவருக்கும் ஐயம் இருந்தது. தனிப்பாடல்கள் பாடியது பல ஔவையார்களாக இருக்கக் கூடும் என்று.

ஔவையார் எனும் பெயருடைய புலவர்கள் யாவரும் மணம் செய்துகொள்ளாதவர்களாகவே அறியப்படுகிறார்கள். ஔவையார் பற்றிய சங்க கால, கம்பர் கால, பிற்காலக் கதைகள் அநேகம். அக்கதைகள் யாவுமே மிக சுவாரசியம் கொண்டவை. அக்கதைகளுக்குள் நுழையும் ஆர்வம் எமக்கில்லை. வாய்ப்பு வரும்போது அவரது பாடல்கள் சிலவற்றை நாம் பார்க்கலாம்.

இங்கு, இப்போது நாம் காணப்போவது, 'நல்வழி' எனும் நூலில் உள்ள, விநாயகர் காப்பு நீங்கலான நாற்பது வெண்பாக்களில் ஒன்று. நல்வழியில்தான் ஔவை, 'ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்' என்றாள். இங்கு ஆறே பழுதாகிக் கிடக்கிறது. பிறகு ஊர் எப்படிக் கிடக்கும்?

‘பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்

இச்சை பல சொல்லி இடித்து உண்கை'

என்பதுவும் இந்த ஔவையாரே. பிச்சை எடுத்து உண்பதை விடக் கேவலமானது ஒன்று உண்டு. அது ஒருவரைப் புகழ்ந்து பணம் பெற்று அல்லது அனுகூலங்கள் பெற்று, உண்டு வாழ்வது. அதைத்தான் இன்று பலரும் செய்கிறார்கள். விருது ஒன்று விரும்பி, பழத் தட்டங்களோடு வீடு வீடாக ஏறி இறங்குகிறார்கள். பேசப் புகுந்தால் அது கீழ்த்தரத்து இலக்கிய அரசியலாகிவிடும்.

இந்த ஔவையார்தான்,

‘அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்

செம்மை இலா வேசையர் தம் நட்பு'

என்கிறார். செம்மை சற்றும் இல்லாத பரத்தையருடன் உறவு கொள்வது, அம்மிக்கல்லைத் தெப்பம் என்று கருதி, பொங்கிப் பிரவகிக்கும் ஆற்றைக்கடக்க முயல்வது என்கிறார். ஆவி போன பின், பாடுபட்டுத்தேடிய பணத்தை யாரே அனுபவிப்பார் பாவிகளே என்றதும் இவர்தான். பசி வந்திடப் பறந்து போகும் பத்தினைப் பட்டியல் இட்டதும் நல்வழிதான்.

உண்பது நாழிஅரிசிச் சோறு, உடுப்பது நான்கு முழ வேட்டி என்றதும் அவர்தான். 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்றே' என்றவரும் அவரே! 'நெட்டு இருப்புப் பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்தின் வேருக்கு நெக்கு விடும்' என்றவரும் அவரே! நெடிய இரும்புப் பாரைக்கோலால் தாக்கினாலும் நெகிழ்ந்து கொடுக்காத பாறையைப் பசிய மரத்தின் வேர் பிளந்துவிடும் என்பது பொருள்.

'தேவர் குறளும் திரு நான்மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர்'

என்பதுவும் நல்வழியின் ஔவையேதான். திருவள்ளுவர் பாடிய திருக்குறள் உரைப்பதுவும் நான்மறைகள் பாடுவதும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் எனும் தேவார மூவர் பாடிய தமிழும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையாரும் திருவாசகமும், திருமூலர் சொல்லும் திருமந்திரமும் கருத்துக்கள் யாவுமே ஒன்றுதான் என்று உணர்வாயாக! இது நல்வழி பாடிய ஔவையார்.

'சாதி இரண்டு ஒழிய வேறில்லை' என்றதுவும் இந்த ஔவையே! அவையென்ன இரண்டு சாதிகள் என்றால் அடுத்தவர்களுக்குக் கொடுத்து உதவுபவர் மேலானவர். உதவாதவர் கீழானவர். இன்றோ பல்லாயிரக்கணக்கில் கோடிப் பணம் வைத்திருப்பவன் எவன் ஆனாலும் அவன் தொழுது ஏத்த வேண்டிய உயர்ந்த மனிதன். ரேஷன் கடையில் பாமாயிலுக்கு வரிசையில் நிற்பவன் எளிய மனிதன் என்றாகிவிட்டது.

'வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா'

என்றதுவும் இந்த ஔவைதான். நம்ம ஆள் சாதாரணமாகச் சொல்லிப் போவான், 'ஒட்டுறது தான்டா ஒட்டும்' என்று.

பொய் சாட்சி சொல்பவர் எய்தும் அவலம் பற்றித் தெளிவாகப் பாடுகிறார் அவர்.

'வேதாளம் சேருமே! வெள்ளெருக்குப் பூக்குமே!

பாதாள மூலி படருமே - மூதேவி

சென்று இருந்து வாழ்வாளே! சேடன் குடி புகுமே!

மன்றுஓரம் சொன்னார் மனை'

மன்றத்தில் ஓரம் சொன்னார் மனையில் வேதாளம் சேரும். வெள்ளெருக்குப் பூக்கும். பாதாள மூலி படரும். மூதேவி சென்று இருந்து வாழ்வாள். சேடன் குடியேறும் என்பது அவள் தீர்மானம், முன்னறிவித்தல்.

மன்று என்றால் மன்றம், நீதிமன்றம். ஓரம் சொல்லுதல் என்றால் ஒரு பக்கமாக, ஒருச் சாய்வாக, ஒருதரப்பாக இன்று சாட்சி சொல்லுதல். கண்டதை மொழியாமல் காமம் செப்புதல். அதாவது பொய்சாட்சி சொல்லுதல். பண்டு பொய்சாட்சி சொல்வதற்கும் சாட்சிக் கையெழுத்துப் போடுவதற்கும் என்றே நீதிமன்ற வளாகங்களில் காவல் நிலையங்களில் கூலிக்கு ஆட்கள் மரத்தடி நிழலில் உட்கார்ந்திருப்பார்கள். வேதாளம் என்றால் பெரும் பேய்.

எருக்குக் குளத்தில் ஊதா நிறத்து எருக்கு எங்கும் முளைத்து இலகுவாகப் பூத்துக் காய்த்துப் பஞ்சாக வெடிக்கும். வெள்ளெருக்கு அபூர்வமான இனம். நீண்ட நாட்களாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மட்டுமே வளரும் என்றும் பூப்பதற்கு அதிகக் காலம் எடுக்கும் என்றும் சொல்வார்கள். பிள்ளையார்பட்டி கற்பகக்கன்றுக்கு பிடித்தமான மலர். 'வெள்ளெருக்கம் சடை முடியான்' என்பான் கம்பன், பிறவா நெறிப் பெற்றியனை! பாதாள மூலி என்றால் பொத்தாம் பொதுவாக, ஒருவகைத் தாவரம் என்கிறார்கள் அறிஞர்கள். எனக்கென்னவோ அது கொடுக்கள்ளியோ, சதுரக்கள்ளியோ, சப்பாத்திக் கள்ளியோ, திருகுக் கள்ளியோ என்று தோன்றுகிறது. பாதாள மூலம் என்றால் கறையான் என்கிறது பேரகராதி. கறையானும் புற்று வைத்துப் படரலாம். சேடன் என்றால் ஆதிசேசன். அதாவது பெரும்பாம்பு.

மாட மாளிகை கட்டி, ஆள் அம்பு சேனை, பெருஞ்செல்வம் என்று வாழ்ந்திருந்தாலும், பொய் சாட்சி சொன்னவன் இல்லம், ஆள் நடமாட்டம் இன்றிப் பாழடைந்து, இருட்டு நேரங்களில் டாஸ்மாக் சரக்கடிக்கும் இடமாகவும் பாலியல் தொழில் நடக்கும் மறைவாகவும் மாறிப்போகும் என்று சொல்லலாம்.

பொய் சாட்சி சொன்னவனுக்கே இந்தக் கதி என்றால்,பேருந்தோடு மாணவியரைத் தீயிட்டுக் கொளுத்தியவர், அலுவலகத்தைக் கொளுத்தி அதன் ஊழியரைக் கொன்றவர், கூலிக்குக் கொலை செய்ய நின்றவர், சொத்தை அபகரிக்கக் கொன்றவர், அரசியல் ஆதாயம் கருதிக் கொன்றவர், ஆணவக்கொலை செய்தவர், சாதி மதக் கலவரத்தில் கொன்றவர், சிறுமியரை வன்புணர்ந்து கொன்றவர், வைப்பாட்டிப் போட்டியில் கொன்றவர், காட்டிக்கொடுத்தவர், வஞ்சனை புரிந்தவர், பொதுச் சொத்தை அபகரித்தவர், கட்டி 19 ஆண்டுகளில் இடிந்து விழும் பேருந்து நிலையம் கட்டிய ஒப்பந்தக்காரர், அவரிடம் கையூட்டு வாங்கிய தலைவர்கள்,அதிகாரிகள், காவல் நிலையத்தில் அடித்துக் கொன்றவர், கொன்று தூக்கிப்போட்டு தற்கொலை என்றவர், மருத்துவமனைகளில் அலட்சியத்தால் கொன்றவர்... என்னைப் பெற்ற அம்மா, எழுதப் பக்கங்கள் போதா!

(இன்னும் பாடுவோம்...) 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE