‘மெய் கிள்ளி மிக்குடையாரை இகழ்தல்
கல் கிள்ளி கையுயர்ந்தார் இல்லை!'
கல்லு மாதிரி திடமான அறிவு இருக்கிறவங்கள துன்புறுத்துறது ரொம்ப எளிதான காரியம். ஆனா, அதுக்குண்டான எதிர்வினைப் பலன் உடனே உறுதியாக் கிடைக்கும். பாறையக் கிள்ளி எறியணுமுன்னு முயற்சி செய்றவனுக்கு அக்கணமே விரல் நோகும்னு தெரியும்தானே!
பெரும்பிறவி பாண்டியனைச் சுத்தி நிக்கிறவங்க மூஞ்சியில இருக்கிற தழும்பைப் பார்த்தாலே தெரியுது... பல தடவ முயற்சி பண்ணி மலையேறி சித்தனைப் பிடிக்க முடியாம கண்ணு போயி, காலு போயி திரும்பி வந்திருக்காங்க. இப்போ, தானா வந்து மாட்டிக்கிட்ட ராணித்தேனீயை மடக்குறது எளிதுதானே!
பாண்டியனோட பக்கத்துல செவப்புக்கல் கடுக்கண் போட்டு, செவப்புக் கண்ணோட நின்னுகிட்டு இருந்தவனுக்குக் கை பரபரங்குது. அவம் பேரு நந்திச்சாமி. பாண்டியனோட படைத்தளபதி! சின்னமனூரைச் சுத்தி இருக்கிற கோயில்களும், கோயில்ல இருக்கிற பொம்பளைங்க அம்புட்டும் இவனோட கட்டுப்பாட்டிலதான் இருக்கு.
அதே சமயம், இந்த நந்தி, பாண்டியனோட கண்ணசைவுக்குக் கட்டுப்படுவான். பொம்மி திகைச்சுப்போய் நின்னுக்கிட்டுருந்தாள். சித்தன் என்னடான்னா, பாண்டியனை மலைக்குமேல கூப்பிட்டு வான்னு சொல்றான். பாண்டியனோ, அந்தச் சித்தனை இழுத்து வந்து என் முன்னாடி நிறுத்துங்கிறான். பொம்மிக்கு இக்கட்டான சமயந்தான் இது!
பெரும்பிறவி பாண்டியன் அவளோட கவனத்தைக் கலைச்சுப் பேச ஆரம்பிச்சான்.
“நாஞ் சொல்றத பதமாக் கேட்டுக்கோ பொம்மி. எதுக்காகத் தயங்குற? கிழங்கு தோண்ட கம்பி, மம்பட்டி, கடப்பாரை தர்றேன். குளிருக்கு கம்பிளி தர்றேன். தேத்தண்ணிக்கு (தேயிலை பானம்) கருப்பட்டி, மண்டவெல்லம், பனைவெல்லாம் எல்லாம் தர்றேன். பொதி கழுதைகளை அனுப்புறேன். அதுதான் சமாதானம். முந்தலுக்கு மேல மலைக்கு வரக் கூடாதுன்னு சொல்றது சமாதானம் இல்லையே. நாங்க மலைக்காட்டுக்கு வர்றோம்... நீங்க தரைக்காட்டுக்கு வாங்க...
அதுதான் உங்க தூதுவன் சொன்ன சமாதானம். ‘நமக்குள்ள சண்டை வேண்டாம் சந்தையை ஆரம்பிக்கலாம்'னு தூது வந்தவனை நாங்க தேக்கி வைக்கலையே. மரியாதை செஞ்சு அனுப்பினோம். எங்க ஆயுதங்களையெல்லாம் பாத்துட்டுதானே போனான். ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க... நாங்க தண்ணியிலயும் தரையிலயும் ஜீவனம் நடத்தும் முதலை மாதிரி. ஆனா நீங்க, மலையில ஜீவனம் நடத்தும் எலி. தண்ணிக்குள்ள வர முடியாது. நாஞ்சொல்றதைக் கேட்டுக்கிட்டா உங்களுக்குத் தொல்லை தொரட்டு வராது!”
“பாண்டிராசா... இந்த தேன் கலயங்கள் அம்புட்டும் உங்களுக்குத்தான். நீங்க கேட்டபடிக்கு குரங்கணி சித்தனைக் கூப்பிட்டு வர்றேன். ஆனா, எங்க ஆலமரக் கன்னி தெய்வம் ருசுவாச் சொல்றேன்... உயிர்ப்பலி கூடாது. சத்தியம் செய் ராசா”னு சொன்ன பொம்மி, தம்மாகிட்ட இருந்த தண்ணி நிறைஞ்ச மூங்கிக் குடுவையை வாங்கி பாண்டியன்கிட்ட நீட்டினாள்.
எந்தத் தயக்கமும் இல்லாமல், “சத்தியமா சொல்றேன், சித்தனோட உசுரு என்னால போகாது!”னு சிரிச்சுக்கிட்டே, உள்ளங்கையில தண்ணியை ஊத்தி, தலையில தெளிச்சுகிட்டான் பாண்டியன்.
பொம்மி ஒரு குழப்பத்தோட சந்தைக் கூட்டத்தைப் பார்த்து நடக்க ஆரம்பிச்சாள். கூட வந்த ஆதிவாசிகள் அவளை மறைச்சு வழிநடத்துனாங்க. ஒரு மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டிருந்த ஆதிவாசி, மெதுவா வெளிய வந்து பொம்மி பக்கமா நின்னு, “பொம்மியம்மா... உனக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்ன்னு, நம்ம சித்தன் சொல்லி, உனக்குத் தெரியாம அறுபது பேர் உன் பின்னாலயே மறைஞ்சு வந்தோம். இனியும் தாமசம் பண்ண வேண்டாம். சடுதியா மலையேறணும்!” அவன் சொல்லிக்கிட்டு இருந்ததைக் காதில் கேட்ட பொம்மி, மெதுவா திரும்பிப் பார்த்தாள்.
பெரும்பிறவி பாண்டியன்கிட்ட நந்திச்சாமி மட்டும் பேசிக்கிட்டு இருந்தான். கூட்டமா நின்னுகிட்டு இருந்த சேவுகமார்கள காணோம்..!
மலங்காட்டு நரிக்குடி கிராமம்... நட்டநடு மத்தியானம். காட்டு விலங்குகள் அம்புட்டும் இரை தேடி முடிச்சு, தண்ணி குடிச்சுட்டு, மரத்து நிழல்ல ஒதுங்கியிருச்சு. ஏதோ ஒரு குடிசையிலயிருந்து புல்லாங்குழல் சத்தம் விட்டுவிட்டுக் கேட்டுக்கிட்டே இருக்கு. வயசான பெருசுக மூங்கிக்குச்சியால முதுகைச் சொறியிற சுகத்துல கண்ணமூடி அசர்ற சமயம். புருஷன் சந்தையில குழந்தைக்கு சங்கு வாங்கிட்டு சாயுங்காலம்தான் மலையேறி வருவான்கிற சந்தோஷத்துல குழந்தைக்குப் பால் கொடுத்துட்டு, ஒரு தாலாட்டுப்பாட்டைப் பாடிக்கிட்டே அந்தக் குழந்தையைத் தூங்க வைக்கத் தொட்டில் துணியை ரெண்டாப் பிரிச்சா...
அந்த இடைவெளியில, புதர்லயிருந்து திடீர்னு பாஞ்சு வந்த ஆட்கள் ஈட்டியை சுழட்டிக்கிட்டே குதிச்சாங்க. ‘ஐயோ'ன்னு அலறுன அந்தப் பொண்ணு, கண்ணு சிமிட்ற நேரத்தில குழந்தையைத் தூக்கி முதுகில கட்டியிருந்த துணிக்குள்ள போட்டுக்கிட்டு, ‘காப்பாடு..! காப்பாடு..!' அலறிக்கிட்டே விழுந்தடிச்சு ஓட ஆரம்பிச்சாள்.
மரத்திலயிருந்த பறவைகள் படபடன்னு அடிச்சுக் கிளம்ப, ஆபத்தை எதிர்பாராத பக்கத்துக் குடிசைவாசிகள் தெறிச்சு ஓடி, பாறை மேல ஏறி கீழே ஆத்துத் தண்ணியில குதிக்க ஆரம்பிச்சாங்க. ஆதிவாசிகள் சில பேரு வில்லை எடுத்துக் காலை அகட்டி வைச்சு, அம்பை ஏத்தி முதல் குறியா ஒத்தைக் கண்ண மூடி தயாராகும் சமயம், சர்சர்சர்னு வந்த ஈட்டி ஒருத்தன் கழுத்தில பாஞ்சது. வில்லோடு தலைகீழாப் பள்ளத்துல சாஞ்சான். ஓடிப்போய் அவன் நெஞ்சு மேல காலை வைச்சு, கையை முறுக்கினது யார் தெரியுமா... நந்திச்சாமி!
“ஏய்... உங்க சித்தன் எந்தக் குடிசையில இருக்கான்? சொல்லு... சொல்லு...?”னு கேட்டுக்கிட்டே கோழியோட றெக்கையைத் திருகின மாதிரி ஆதிவாசியின் கையைத் திருகித் தொங்கவிட்டான். அவனோட வாயிலயிருந்து குபுகுபுன்னு ரத்தம் வழிஞ்சு அவன் மூக்குக்குள்ள இறங்க ஆரம்பிச்சது. மத்தவங்க தெறிச்சு ஓட எங்கிருந்தோ பறந்து வந்த அம்பு நந்திச்சாமியின் இடுப்பை உரசிக்கிட்டுப் போய் மரத்துல ஆழமா இறங்கி ‘வந்து பார்'னு சவால் விட்டுச்சு. சுதாரிச்சுக்கிட்ட நந்திச்சாமி, நாலு விரலை தூக்கிகாட்டி “கவனம் கவனம்”னு சத்தம் போட்டான்.
ஆதிவாசிகள் தண்ணிக்குள்ள தபதபன்னு இறங்கி ஓடுற சத்தம் கேட்குது. அவங்க மேல, மரத்து இழைகள் வழியா வந்து விழுந்த சூரியப் பொத்தல் சரிக்குச் சமானமா ஓடுது. முயல வேட்டையாடிக்கிட்டு படுத்திருந்த நரிக்கூட்டத்துக்குத் திடீர்னு காது வெடைக்க, தூரத்தில மனுசப் பயலுக ஓடி வர்றதைப் பார்த்துட்டு பாறை இடுக்கில புகுந்திருச்சு. மூணு திசையிலயும் ஆதிவாசிகளைத் துரத்திக்கிட்டு ஓடின பாண்டியனோட ஆட்கள் ஒரு பெரிய ஆலமரம் வந்ததும், அடுத்து எந்த திசையில போறதுன்னு தெரியாம திண்டாடினாங்க. அவங்களோட குறி குரங்கனி சித்தன்.
முதுவாக்குடி மேட்டுல நிராயுதபாணியா நின்னுக்கிட்டு இருந்த குரங்கணி சித்தன், பொம்மியோட வரவுக்காகக் காத்திருந்தான். பக்கத்துல பொம்மியோட ரெண்டாவது புருஷன் கலிங்கா, கையில வில்லு அம்போட காத்திருந்தான். பொம்மி வந்துட்டா. அவசர அவசரமா மலையேறி வந்த பொம்மி தலை கலஞ்சு ஓடி வந்தாள்.
“வா பொம்மி... பதற்றப்படாதே, ஆசுவாசம் பண்ணு. அங்க பாரு... காவதம் தூரத்துல மரங்கள் சலசலப்புல பறவைங்க எழும்பி பயத்தோட சலாவட்டம் போடுது. அங்கதான் பாண்டியனோட ஆட்கள் மேலே ஏறி வந்துக்கிட்டு இருக்கானுங்க. நம்ம ஆட்கள் இருநூறு பேரு தாக்குறதுக்குத் தயாரா இருக்கோம். உன் புருஷன் அவங்கள சிதறடிச்சு விரட்டுவான்!”
“பாண்டியன் உன்னைக் கொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணித்தந்தானே சித்தா...”
“நீ ஒரு தப்பு பண்ணிட்டே பொம்மி... பாண்டியன நைச்சியமாப் பேசிக் கூப்பிட்டு வரச்சொன்னேன். அதை விட்டுட்டு முந்தலக்கு மேல வரக் கூடாதுன்னு கட்டளை போட்டா அவங்களுக்குக் கோவம்தான் வரும். நான் கஷ்டப்பட்டு போட்ட திட்டம் உன் ஒரு வார்த்தையால வீணாப்போயிடுச்சு!”
“இல்ல சித்தா... பாண்டியனை இங்கே கூப்பிட்டு வந்தா நீ அவனைக் கொல்லுவே. மீண்டும் உயிர்ச்சேதம் வேணாம்னுதான் அவனை மலைமேல வர வேண்டாம்னு கேட்டுக்கிட்டேன்!”
“அவனை இல்ல... அவனோட எண்ணத்தைக் கொல்லணும்னு நினைச்சுத்தான் கடைசியா சமாதானங்கிற ஆயுதத்தை எடுத்தேன். நீ சொன்ன ஒரு சொல்லால அது உறைஞ்சுப்போச்சு. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்!”
திடீர்னு இரண்டு கையைத் தூக்கின குரங்கணி சித்தன் அஞ்சு விரலை விரிச்சு, பறவை போகும் வேகத்துல முன்னோக்கி வீசினான். ஆதிவாசிகளோட அம்பு பறக்க, எதிர் திசையில இருந்து ‘ஐயோ... ஆத்தா!'னு சத்தம் வந்துச்சு. பள்ளத்துல குதிச்சு ஓடிப் பாறை மேல ஏறி நின்ன குரங்கணி சித்தனைப் பார்த்ததும், ஈட்டி எட்டும் தூரத்துல நந்திச்சாமி திகைச்சுப்போய் நின்னுட்டான்...
“நீ சமாதானத் தூதுவனா பாண்டியனோட தோட்டத்துக்கு வந்தவன்தானே..?”
- சொல்றேன்...
-வடவீர பொன்னையா