தாவோ: பாதை புதிது - 7

By ஆசை

இந்த அதிகாரத்தின் முதல் நான்கு வரிகளுக்கும் வேறொரு வடிவம் உண்டு. அதற்கேற்ப அந்த நான்கு வரிகளையும் நான் கொஞ்சம் மாற்றியமைத்துக்கொள்கிறேன் இப்படி:

“பள்ளத்தாக்கின் ஆத்மாவுக்கு

ஒருபோதும் மரணம் இல்லை.”

பள்ளத்தாக்கின் ஆத்மா

ஆத்மீக அன்னை என்று அழைக்கப்படுகிறது.

ஏனெனில் ‘பள்ளத்தாக்கின் ஆத்மா’ என்ற சொற்றொடர்தான் தாவோயிஸத்துக்கு மிகவும் நெருக்கமானது. இன்மைதான் பள்ளத்தாக்கின் ஆத்மா; அதுதான் தாவோவும்!

இன்மையை இன்மை உணர்தல்...

கங்கை இமயமலையிலிருந்து வந்து விழுந்து தரையைத் தொடும் இடம் ஹரித்துவார். அங்கிருந்து ரிஷிகேஷில் உள்ள லக்‌ஷ்மண் ஜூலாவுக்குச் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் சென்றேன். செல்லும் வழியில் தென்படும் பள்ளத்தாக்கைக் காணும்போதெல்லாம் அடிவயிற்றில் பனிக்கட்டியை வைப்பதுபோன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.

மலைகளுக்கு நடுவே ‘வி’ வடிவில் திறந்திருக்கும் அந்தப் பள்ளத்தாக்கு, தன் விரித்த கைகளில் பிரபஞ்சத்தையே தாங்கி நிற்பதுபோன்று எனக்குத் தோன்றியது. பள்ளத்தாக்கு ஏற்படுத்தும் அந்த இனம்புரியாத உணர்வுக்குக் காரணம் கண்ணுக்குத் தெரியும் அதன் தரையல்ல; தரைக்கும் மேலே, மலைகளுக்கு இடையே தென்படும் அகன்ற இடைவெளிதான் என்று நினைக்கிறேன்.

இந்தப் பிரபஞ்சமே இன்மையிலிருந்து உருவானது, இன்மையைத் தனது அம்சமாகக் கொண்டிருப்பது என்று ஏற்கெனவே ஒரு அதிகாரத்தில் பார்த்திருக்கிறோம். ஆக, இன்மை என்பது நமக்கு வெளியில் இருக்கும் ஒன்றல்ல, நமக்கு உள்ளேயும் இருக்கிறது. நாமாகவும் இருக்கிறது. பள்ளத்தாக்கின் இன்மையைக் கண்டு ஏற்படும் அந்த ‘இனம்புரியாத உணர்வானது’ இன்மையை இன்மை கண்டுகொண்டதால் ஏற்படும் உணர்வாக இருக்குமோ என்றுகூட தோன்றுகிறது. உடலின் ஒவ்வொரு அணுவுக்குள்ளும், மனதுக்குள்ளும் இருக்கும் பள்ளத்தாக்குகள் வெளியில் இருக்கும் பள்ளத்தாக்குடன் உறவைப் புதுப்பித்துக்கொள்ளும் தருணம்!

பள்ளத்தாக்கைப் பார்த்தபோது மட்டுமல்ல, மலையிலிருந்து ஓடிவந்த வேகத்தைத் தன் நினைவில் வைத்துக்கொண்டு ஹரித்துவாரில் கரைபுரண்டு ஓடும் கங்கையைப் பார்த்தபோதும் அப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டது. இறை நம்பிக்கை, மதநம்பிக்கை இல்லாத எனக்கு கங்கையைப் பார்த்து அந்த உணர்வு ஏன் ஏற்பட்டது என்று யோசித்துப்பார்த்தேன். கடலுக்கு முன்பு நின்றுகொண்டு கண்முன் தெரியும் விரிவைப் பார்க்கும்போதும் அப்படித்தான்.

இது ஒருவகை ஆன்மிக உணர்வா என்று சொல்லத் தெரியவில்லை. விலங்குகளுக்கும் ஆன்மிக உணர்வு இருக்கிறதா என்றுகூட ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சிம்பன்ஸிகளின் சில இயல்புகளைப் பற்றி விவரிக்கும்போது குரங்கின ஆராய்ச்சியாளர் ஜேன் கூடால் அவற்றுக்கும் ஆன்மிக உணர்வு இருக்குமோ என்று கேள்வி எழுப்புகிறார். சிம்பன்ஸி ஒன்றைப் பற்றி அவர் விவரிக்கிறார்.

அருவியொன்றை நெருங்கும்போது சிம்பன்ஸியின் ரோமம் மெலிதாகச் சிலிர்க்க ஆரம்பித்திருக்கிறது. அருவிக்கு மிக அருகில் நெருங்கும்போது ரோமம் முழுவதுமே குத்திட்டு நின்றிருக்கிறது. கொட்டும் தண்ணீரை அடைந்ததும் அது பித்துப் பிடித்ததுபோல் நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. சீரான தாளகதியில் அந்த சிம்பன்ஸி சாய்ந்தாடியது.

என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இங்கேயும் அங்கேயும் ஓடி, பெரிய பெரிய கற்களை எடுத்து வீச ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பரவச நடனம் முடிந்ததும் அந்த சிம்பன்ஸி ஒரு பாறையில் அமைதியாக உட்கார்ந்தபடி, மேலிருந்து கொட்டும் தண்ணீரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததாம்.

அந்த சிம்பன்ஸியால் தனது உணர்வுகளையும் கேள்விகளையும் மற்ற சிம்பன்ஸிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தால் அதுவே ஒருவகை விலங்கு மதமாக உருவெடுக்கலாம் என்று வியக்கிறார் கூடால். அந்த மதத்துக்கான சடங்குகளாக சிம்பன்ஸியின் நடனம் உள்ளிட்ட பரவசச் செய்கைகள் ஆகலாம் என்கிறார். அப்படி ஒரு மதம் அவற்றுக்குள் உருவானால், “அருவிகளையும், வானத்திலிருந்து கொட்டும் பேய் மழையையும், இடி மின்னல்களையும் இயற்கையின் கடவுளர்களாக அவை வழிபடுமோ?” என்று கூடால் கேள்வி எழுப்புகிறார்.

பள்ளத்தாக்கைப் பார்த்து நான் அடைந்த உணர்வுக்கும் அருவியைப் பார்த்துக் குரங்கு அடைந்த உணர்வுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே நினைக்கிறேன். இயற்கை அதன் அடிப்படைப் பொருளில் பார்ப்பவருடன் வந்து சேர்ந்துகொள்கிறது. பார்ப்பவரும் அதனுடன் கைகோத்துக்கொள்கிறார்.

வந்து சேர்ந்துகொள்கிறது என்றுகூட சொல்லக் கூடாது; ஏற்கெனவே அங்கு இருப்பது எப்படி வெளியிலிருந்து வந்துசேர முடியும்? அந்த உணர்வு விழித்துக்கொள்கிறது, உள்ளுக்குள்ளே இருக்கும் இன்மை கண் திறந்து பார்க்கிறது என்று சொல்லலாம்.

மற்றுமொரு சீன தாவோ ஞானி சுவாங் ட்சு இப்படிக் கூறுகிறார்: “காதுகளால் கேட்காதீர்கள், மனதால் கேளுங்கள். மனதால் கேட்காதீர்கள், ஆன்மாவால் கேளுங்கள். காதின் செயல்பாடு கேட்டலுடன் முடிந்து

விடுகிறது; மனதின் செயல்பாடு குறியீடுகளுடனும் யோசனைகளுடனும் முடிந்துவிடுகிறது. ஆனால், ஆன்மா என்பது ஒரு வெற்றுத்தன்மை, எல்லாவற்றையும் தன்னுள் வரவேற்கக் காத்திருக்கும் வெற்றுத்தன்மை. தாவோ இந்த வெற்றுத்தன்மையில் வசிக்கிறது; இந்த வெற்றுத்தன்மை என்பது மனதின் உண்ணாவிரதம்.”

எல்லாவற்றையும் வரவேற்கும் வெற்றுத்தன்மையான ஆன்மாவுக்கு உதாரணமாகத்தான் ‘தாவோ தே ஜிங்’ நூல் முழுவதும் பள்ளத்தாக்கை உதாரணமாகக் காட்டுகிறார் லாவோ ட்சு. மேலும், படைப்பு சக்தியான பெண்மையின் வளமைக் குறியீடாகவும் பள்ளத்தாக்கை உதாரணமாகக் காட்டுகிறார். அந்த வளமையின் நீட்சியாகத்தான் பெண்குறி, கருப்பை ஆகிய இரண்டையும் பள்ளத்தாக்கு குறிக்கிறது. இன்மையை, இடைவெளியைச் சுமந்துகொண்டிருக்கும் இந்தப் பெண் உறுப்புகள் எப்போதும் ‘பெறும்’ செயலையே செய்கின்றன.

இந்தப் பெறும் செயலுக்கு அடிப்படையே அவற்றின் வெற்றிடம்தான். பள்ளத்தாக்கும், இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட சமவெளியும் அப்படித்தான். சூரிய ஒளி, மலையிலிருந்து வரும் தண்ணீர், தூய்மையான காற்று என்று உயிர்ப்புக்குத் தேவையான அனைத்தும் சரிவிகிதத்தில் கிடைக்கும் இடம் பள்ளத்தாக்கு. தான் வளமாக இருப்பதற்குப் பள்ளத்தாக்கு ஏதும் செய்ய வேண்டியதில்லை. கிடைப்பதைப் பயன்படுத்திக்கொண்டால் போதும். பள்ளத்தாக்கின் இந்த வசதி அதன் வெற்றிடத்தால் கிடைக்கிறது. அதேபோல், மனமே வெற்றிடமாக ஆனால், அங்கே விளைவிக்க முடியாதது ஏதும் இல்லை என்கிறது தாவோயிஸம்.

தாவோயிஸம் அளவுக்கு உலக மதங்களிலும், சிந்தனை மரபுகளிலும் பெண்மைத் தன்மை கொண்டது அநேகமாக வேறேதும் இல்லை என்று நினைக்கிறேன். பிரபஞ்சத்தின் படைப்பு சக்தியாக இன்மையை அடையாளம் காணும் லாவோ ட்சு, அதைப் பெண்மையாகவும் காண்கிறார்.

பெண்மை (சீன மொழியில் ‘யின்’), ஆண்மை (‘யாங்’) என்ற இரண்டு சக்திகளின் உறவாடலால் உலகில் எல்லாம் உயிரும் வடிவமும் கொள்கின்றன என்பது சீனத் தத்துவத்தின் மையம். இந்த இரண்டு சக்திகளின் சமநிலை பேணப்படவில்லையென்றால் உலகில் ஆக்கிரமிப்பு, போர், இயற்கைப் பேரழிவு போன்றவை தலைவிரித்தாடும் என்பது தாவோயிஸத்தின் கருத்து. மென்மையைப் பெண்மைக்கு உரிய அடையாளமாக லாவோ ட்சு கருதுகிறார்.

இதனால், மறைமுகமாக பெண்மையை பலவீனத்துடன் லாவோ ட்சு முடிச்சுப் போடுகிறார் என்று கருதிவிட வேண்டாம். வலுவானதை மென்மைதான் வெல்லும் என்றும் மூர்க்கத்தனம் வீரம் அல்ல என்றும் தொடர்ந்து லாவோ ட்சு சொல்கிறார்.

ஜென் குரு ஹ்ஸுவான்-ஷாவின் மடத்துக்கு ஒரு இளந்துறவி வருகிறார். ஹ்ஸுவான்-ஷாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு “குருவே, நான் இந்த மடாலயத்துக்குள் நுழைந்துவிட்டேன். தயவுசெய்து அந்தப் ‘பாதை’க்குள் நுழைவது எப்படி என்று எனக்குச் சொல்லுங்கள்” என்கிறார்.

“பள்ளத்தாக்கில் சலசலக்கும் ஓடையின் ஓசை உனக்குக் கேட்கிறதா?” என்று கேட்கிறார் ஹ்ஸுவான்-ஷா.

“ஆமாம்” என்கிறார் இளந்துறவி.

“அங்கே நுழை!” என்கிறார் ஹ்ஸுவான்-ஷா.

‘ தாவோ’ என்ற சொல்லுக்கு ‘பாதை’ என்ற பொருளும் உண்டு என்பது நமக்குத் தெரியும் அல்லவா! தாவோவின் பாதை பள்ளத்தாக்கின் பாதை!

(உண்மை அழைக்கும்...)

-ஆசை

“பள்ளத்தாக்கும் ஆத்மாவும்

ஒருபோதும் சாவதில்லை.”

பள்ளத்தாக்காலும் ஆத்மாவாலும்

ஆத்மீக அன்னை ஆக்கப்பட்டவள்.

ஆத்மீக அன்னையின் வாயிலில் இருந்துதான்

வானக, வையகத்தின் மூலாதாரம் ஆரம்பிக்கிறது.

அந்த மூலாதாரம்

எப்போதும் இருப்பதாகவே தோன்றுகிறது.

எவ்வளவு பயன்படுத்தினாலும்

அது தீர்ந்துவிடுவதேயில்லை.

- 2,500 ஆண்டுகளுக்கு முன்பு

சீன ஞானி

லாவோ ட்சு எழுதிய

‘தாவோ தே ஜிங்’

நூலிலிருந்து;

தமிழில்: சி.மணி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE