இப்போதில்லை எனக்குத் திருமணம்!- - பிரமிக்க வைக்கும் பிரியதர்ஷினி

By காமதேனு

“எந்த ஒரு மாற்றமும் தன்னிடமிருந்தும் தன் இடத்தில் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும்” என்ற மகாத்மாவின் சொற்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார் சீர்காழி புதுத்துறையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மா.பிரியதர்ஷினி. சராசரி பெண்களைப் போல் படித்தோம், வேலைக்குப்போய் சம்பாதித்தோம் என்று இருந்துவிடாமல், சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கே திரும்பிப்போனவர், அங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்கள் வியக்கவைக்கின்றன. அவரைத் தேடி புதுத்துறைக்குப் பயணமானோம்.

புதுத்துறை, பெரும்பகுதி ஏழைகள் வசிக்கும் சிறிய கிராமம். அந்தக் கிராமத்துக்குள் நுழைந்து ‘பிரியதர்ஷினி வீடு’ என்று கேட்டால் சிறுபிள்ளைகளும் கூட “தோ, பள்ளியோடத்துக்கு பக்கத்தாப்புல இருக்கே” என்று பிரியதர்ஷினி வீட்டுக்கு வழிகாட்டுகிறார்கள். அங்கு போனதுமே வெளியில் வந்து நம்மை வரவேற்று, கட்டியும் கட்டாமலும் கிடக்கும் அந்த மாடிவீட்டின் போர்டிகோவில் கிடந்த  பெஞ்சில் அமரவைத்தார்.

வீட்டில் ஏழெட்டு வயது முதல் பதின் வயதுவரையிலான சிறுமிகள் ‘அக்கா அதென்னக்கா, இதென்னாக்கா’ என்று அவரை மொய்த்த வண்ணமே இருந்தார்கள். அவர்களுடைய இருப்பால் அந்த இடமே குதூகலமாகியிருந்தது. திடீரென்று ஒரு சிறுமி என்னிடம் வந்து “உங்க வீட்ல டாய்லெட் இருக்கா?” என்று கேட்க, நானோ குழப்பத்துடன் “இருக்கும்மா” என்றதும் சந்தோஷத் துள்ளலுடன் ஓடினாள் அந்தச் சிறுமி. தமிழ் என்ற இன்னொரு சிறுமி பிரியதர்ஷினியின் அருகில் வந்து ஏதோ கேட்டுவிட்டு கூரைவீட்டுக்குள் ஓடினாள். சற்றுநேரத்தில் சூடான டீயுடன் வந்தாள்.

“தெனமும் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் இங்க வந்துடுவாங்க. ராத்திரி எட்டுமணிபோல, வெரட்டுனாத்தான் வூட்டுக்குப் போவாங்க. ஸ்கூலு லீவுன்னா காலைல வந்துட்டு ராத்திரிக்குத்தான் போவுங்க. என்னய ஒரு வேலயும் செய்யவிடாதுங்க” என்றவர் முகத்தில் போலியான ஒரு சலிப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE