குழந்தையின் பிறந்தநாளுக்காக உணவு அளிக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு, படுத்த படுக்கையாக இருந்த பெரியவர் ஒருவர் உணவை மறுத்து, அதற்குச் சொன்னக் காரணம் கண்களைக் குளமாக்கிவிட்டது. “பசிக்குதுதாம்பா... சாப்பிட்டா வெளிக்கி போகணும், என்னால நகரக்கூட முடியாதேப்பா...” என்றபோது அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது. நாகர்கோவிலில் சரவணமுத்து என்கிற சாமானியர் கண்டுபிடித்திருக்கும் சாதனத்தைப் பார்த்தபோது, அந்தப் பெரியவர்தான் நினைவில் வந்துப்போனார்.
உலகையே புரட்டிப்போட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம். ஆனால், மனிதனை நேசத்துடன் அணுகும் கண்டுபிடிப்புகளே, காலங்கள் கடந்தும் ஈரத்துடன் நினைவுகூரப்படுகின்றன. படுத்தப் படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்காக சரவணமுத்து உருவாக்கியிருக்கும் கட்டில் அந்த ரகம்தான்.
அதில் படுத்துக்கொண்டே கை அருகே இருக்கும் ரிமோட்டை அழுத்தினால், கட்டிலின் நடுப்பகுதி லேசாக விலகிக்கொள்கிறது. மற்றொரு பட்டனை அழுத்தினால், அந்த இடைவெளியில் கழிப்பறைக் கோப்பை வருகிறது. படுக்கையில் இருப்பவர் படுத்தவாறே, இயற்கை உபாதையைக் கழிக்க முடியும்.
கட்டிலின் ஒரு பகுதியில் தண்ணீர் ‘குளோசெட்’ இருக்கிறது. இன்னொரு பட்டனை அழுத்தினால் வேகத்தோடு சீறிப்பாயும் தண்ணீர், சுகாதாரத்தையும் பார்த்துக்கொள்கிறது. படுத்தப் படுக்கையில் இருக்கும் முதியோர்களுக்கும் நோயாளிகளுக்கும் மிகப்பெரிய வரம் இந்தக் கட்டில். இதை உருவாக்கிய சரவணமுத்து, மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதுதான் கூடுதல் ஆச்சரியம்!