பாடுக பாட்டே! - 6

By நாஞ்சில் நாடன்

வீரமோ காதலோ ஒரு மொழி பேசுகிறவர்களுக்கே, அல்லது ஒரு இனத்தவருக்கே, ஒரு உயிரினத்துக்கே உரியது என்பதல்ல. தமிழர்கள் மாத்திரமே வீரமும் காதலும் மிக்கவர் எனக் கம்பலை செய்வது அரசியல், இலக்கிய மேடைப் பேச்சாளருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால், அறிவுலகுக்குப் பொருந்தாது.

காதலில் கைக்கிளை என்றும் பெருந்திணை என்றும் இரண்டைக் கூறும் தமிழ் இலக்கணம். கைக்கிளை என்றால் ஒருதலைக் காதல் - தன் மீது நாட்டமில்லாத ஆடவரை அல்லது பெண்டிரைக் காதலிப்பது. பெருந்திணை என்பது நாற்பது வயதுப் பெண் இருபது வயதுப் பையனை, இருபது வயதுப் பெண் அறுபது வயது ஆணைக் காதலிப்பது. நைரோபி, உகாண்டா, தைவானில் சென்று இதுபோன்ற பொருந்தா வயது ஜோடிகள் ஓடிப் பிடித்துக் காதலிக்க இயலாது என்பதனால் திரையுலகப் படைப்பாளிகள் பெருந்திணையைப் பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை.

மாந்தருள் மாத்திரம்தான் காதல் உணர்ச்சி உண்டா என்ன? விலங்கு, பறவை எனத் தமிழ் இலக்கியத்தினுள் ஏராளமான சான்றுகள் உள்ளன. முத்தொள்ளாயிரத்தையே நாம் தொடர்ந்து போகலாம். போருக்குப் போய்த் திரும்புகிறது கிள்ளிவளவனுடைய களிறு - ஆண்யானை. பகைநாட்டு மன்னர்களின் கொடி பறக்கும் கோட்டை மதில்களைப் பாய்ந்து தாக்கி, களிற்றின் மருப்புகள் இற்று முறிந்துவிட்டன. மருப்பு என்றால் தந்தம்.

பகையரசரின் மணிமுடிகளை இடறி இடறிக் கால் நகங்கள் தேய்ந்தும் பெயர்ந்தும் போயின. களிற்றுக்கு நாணமாக இருக்கிறது, தனது பிடியானையின் பக்கம் சென்று நிற்பதற்கு. பிடி எனில் பெண்யானை. போர் முடிந்து திரும்பியும்,  தனக்கான யானைத் தாவளத்தின் உள்ளே சென்று தனது காதற் பிடியைக் கொஞ்சுவதற்கு வெட்கி, புறங்கடை நிற்கிறது களிறு. புறங்கடை எனில் வெளிப்புறம்.

‘கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும், அரசர்

முடி இடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு

பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே!

கல்லார் தோள்க் கிள்ளி களிறு!'

கல்லார் தோள் என்றால் கல்லையொத்த வலுவான தோள் என்று பொருள்.

மற்றொரு முத்தொள்ளாயிரப் பாடலில், பகையரசின் கோட்டை மதில்களின் கற்பாளங்களைக் குத்திச் சரித்த களிற்றின் கொம்புகள் முறிந்தன. எனவே, குறைபட்ட தன் கோலத்தைப் பெண்யானையிடம் காட்ட நாணி, பகையரசரிடம் பிடுங்கிய குடலால் முகம் மறைத்து நிற்குமாம் அந்தக் களிறு!

‘அடுமதில் பாய அழிந்தன கோட்டைப்

பிடி முன்பு அழகு அழிதல் நாணி - முடியுடை

மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல் வேல்

தென்னவர் கோமான் களிறு!'  -என்பது பாடல்.

எப்பேர்ப்பட்ட களிறு அது! படைகள் பெருத்த பகை அரசர்களது விரிந்து கவிந்து முத்துச்சரங்கள் தொங்கும் வெண்கொற்றக் குடைகளைப் பறித்துத் தரையில் வீசிய களிறு அது. அந்தப் பழக்கத்தால், வானில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் முழுமதியையும்கூட ஏதோவோர் பகை அரசரின் குடை என்று நினைத்து, அதைப் பறித்து வீசுவதற்காகத் தும்பிக்கையை நீட்டக்கூடிய யானை அது.  ஆனால், அந்த ஆண் யானை தன் காதல் பிடி யானையின் முன் நாணி, முகம் கோணி நிற்கிறது. இதுவும் ஒரு வகையான நேசம்தான்.

இதுவே, காதல் வயப்பட்ட பெண்ணின் பாடோ பெரும்பாடு...

‘அன்னையும் கோல் கொண்டு அலைக்கும், அயலாரும்

என்னை அழியும் சொல் சொல்லுவர்.'

இவளுடைய அன்னையோ கோல் கொண்டு நையப் புடைப்பாள். அண்டை அயலார் தர்மத்துக்குப் பழிச்சொல் உரைப்பார்கள். அவள் பாடோ தேரை உண்ட தெங்கின் பாடாக இருக்கிறது. எல்லாம் வளவன் மேல் கொண்ட காதலின் வினை.

காதலில் வீழ்ந்தவளுக்கு என்னவெல்லாம் அவஸ்தைகள்!

‘தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி

களையினும், என் கை திறந்து காட்டேன்'

என்கிறாள் ஒரு பெண். இதழ் விரிந்த பூமாலை சூடிய செவிலித் தாயரே, நற்றாயரே..! என் உயிரை விட்டாலும் விடுவேனே அல்லால், என் உள்ளக்கிடக்கையைத் திறந்து காட்ட மாட்டேன் என்கிறாள். அப்படி ஒரு அந்தரங்கம் அவளுக்கு!

இன்னொரு பெண் சொல்கிறாள்... சிப்பியில் பிறந்த, நிலவின் குளிர்ச்சியான ஒளி வீசுகின்ற நன்முத்துக்கள் கொற்கையில் மாத்திரமே விளையும் என்று சொல்ல ஏலாது. குருதி தோய்ந்த வேல் தாங்கிய பாண்டியனின் குளிர்ந்த சந்தனம் பூசிய அகலமான மார்பைத் தழுவக் காமுற்ற பெண்ணின் கண்களிலும் முத்துக்கள் விளையும் என்று.  அதாவது, காதல் வயப்பட்டால் கண்ணீர்தான் என்பது பொருள். கண்ணீர் முத்துக்கள்!

‘இப்பி ஈன்றிட்ட எறிகதிர் நித்திலம்

கொற்கையே அல்ல படுவது - கொற்கைக்

குருதிவேல் மாறன் குளிர் சாந்து அகலம்

கருதியார் கண்ணும் படும்.'  -என்பது முத்தொள்ளாயிரப் பாடல். இப்பி என்றால் முத்துச்சிப்பி.

சோழன் பவனி வரும்போது, தன் மகள் அவனைக் கண்டுவிட்டால், அவள் பாடு பெரும்பாடு ஆகிவிடும் என்று அஞ்சிய அன்னை, மகளை வீட்டின் உள்கட்டில் இருக்கச் செய்து, வாசல் கதவைச் சாத்தி வைக்கின்றாள். சற்று நேரம் கழித்து செவிலித்தாய் வந்து பார்க்கிறாள். மகளின் ஏக்கத்தையும் திட்டுமுட்டாடுதலையும் பார்க்கிறாள். அன்னையைப் பார்த்துச் சொல்கிறாள் -

‘திறந்திடுமின், தீயவை பிற்காண்டும் மாதர்

இறந்துபடில் ஏதந்தான் என்னாம்!'

தாயாரே... கதவைத் திறந்து வையுங்கள். என்ன கேடு வந்தாலும் பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம். ஏக்கத்தில் இவள் உயிர் போய்விட்டால் பெரும்பழி அல்லவா வந்துசேரும் என்பது பொருள்.

குலைகுலையாகக் காய்த்துத் தொங்கும் தென்னைகள் சூழ்ந்த கூடல் மாநகருக்குக் கோமானான பாண்டியனை நாடி விரும்பிச் சென்றது என் நெஞ்சம். அதை அறிய மாட்டாள் என் அன்னை. என்னை வீட்டினுள் அடைத்து வைத்துக் காவல் செய்கிறாள். காடையைப் பிடித்து மணலில் கூடைபோட்டுக் கவிழ்த்து வைத்தான் வேடன். காடையோ மணலைப் பறித்து வெளியேறிவிட்டது. அங்ஙனம் ஏமாந்த வேடனைப் போன்றவள் என் அன்னை.

‘கோள் தெங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என

வேட்டு அங்கு சென்ற என் நெஞ்சறியாள் - கூட்டே

குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல், அன்னை

வெறுங் கூடு காவல் கொண்டாள்!' -என்பதும் முத்தொள்ளாயிரமே! கோள் தெங்கு - குலைகுலையாய்க் காய்த்த தென்னை, குறும்பூழ் - காடை.

மற்றொரு பெண்ணுக்கு, நாம் பாண்டியனைக் கூடுவோமா, மாட்டோமா என்று ஐயம். ஏக்கமாகவும் இருக்கிறது. என்ன செய்வாள் பாவம்... ஆருடம் கேட்கலாம், குறி கேட்கலாம். அன்னை அறியாமல் அதைச் செய்ய இயலாது. இரண்டு விரல்களை நீட்டி, தோழியிடம் சொல்லி ஒன்றைத் தொடச் சொல்லலாம். அவளும் ஏன் என்று கேட்பாள்.

வீட்டை அடுத்திருக்கும் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில், மரத்தடி நிழலில் உட்கார்ந்திருக்கிறாள். சுற்றிலும் மணல்வெளி.  கழக ஆட்சிகள் கால் பதியாத காலம், மணலும் நிறையவே இருந்தது. கண்ணை மூடிக் கொள்கிறாள். ஆள்காட்டி விரலால் மணலில் வட்டம் வரைந்து பார்க்க முனைகிறாள். வட்டம் கூடினால் காதலனைக் கூடுவேன். வட்டம் கூடாவிட்டால், நானும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று தனக்குத் தானே கற்பித்துக்கொண்டாள்.

கண்மூடி, மணலில் விரலால் வளையம் வரையும் போதே, அவளுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. ஒருவேளை வளையம் சேராமல் போய்விட்டால், அவனைக் கூடாமல் போய்விடுவேனே! மனம் பதைத்து, வட்டம் வரைவதை நிறுத்திக்கொள்கிறாள்.

கூடல் இழைத்தல் என்று இதற்குப் பெயர்.

(இன்னும் பாடுவோம்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE