குரங்கணி சித்தன் கதை - 4

By வடவீர பொன்னையா

‘படையற்றோர், வலுவற்றோர்,

பெண்டிர், குழந்தைகள் இவர்களைத் தாக்குதல் இழிவு!'

ஆனா, பெரும்பிறவி பாண்டியனோ, ஆள்பலமும் ஆயுதபலமும் வெச்சிருக்கான்! அவன் செய்துக்கிட்டு இருக்கிற குத்தங்களும் பெரிசுதான். ஆக, தாக்கி அழிக்க சிறந்த குற்றவாளி... நியாயமான எதிரி அவன்தான்!

பெரும்பிறவி பாண்டியனோட வம்சம்தான் சின்னமனூரை ஆண்டுக்கிட்டு இருக்காங்க. அவனோட ஏழாவது தாத்தா காலத்திலிருந்து குரங்கணி மலையில வேட்டையாடி முயல், மான், காட்டுப்பன்னி, வரையாடு, கேளையாடு எல்லாத்தையும் வகைதொகையில்லாம கொல்றாங்க. தந்தத்துக்காக யானையைக் கொல்றாங்க. மருந்துக்கு குரங்கோட ஈரல் வேணுமுன்னு கருமந்தியைக் கொன்னு இனத்தை அழிக்கிறாங்க. மலைச்சாதி புலையர்கள், பளியர்கள், முதுவர்கள் மேல கயிறு போட்டு இழுத்துக்கிட்டுப் போயி அடிமைத்தொழில் செய்ய வைக்கிறாங்க.

அதோடில்லாம, பெரிய பெரிய மரங்களை வெட்டிக்கொண்டு போய் அரண்மனை கட்டுறேன்னு காட்டை அழிச்சுக் காயப்போட்டுட்டாங்க. அப்பப்ப நடக்கிற இனச்சண்டையில ஆதிவாசிகளைத் தாக்கி, அவங்க எல்லையில இருந்த மா, பலா, கமுகு, பாக்கு, தோதகத்தி மரங்களையெல்லாம் சொந்தங் கொண்டாடுறாங்க. உயிர்ச்சேதம் வேற!

ஏழு தலைமுறையா 490 வருசமா இந்தக் காரியத்தைச் செய்துகிட்டு இருக்காங்க.

பெரும்பிறவி பாண்டியன், `ராணித்தேனீ'க்கு அலையுறான். பொம்மிதான் அந்த ராணித்தேனீ! பொம்மி, தாய்வழிச் சமூகங்கிறதால மலைச்சாதிக்காரங்க அவளைத்தான் சுத்திச் சுத்தி வர்றாங்க. பொம்மி மட்டும் கையில சிக்கினால் அவளுக்காக வேலை செய்யிற `வேலைக்கார தேனீக்கள்' அம்புட்டு பேரும் தனக்கு அடிமை ஆவாங்கன்னு நினைக்கிறான்,

ஆதிவாசி இனத்துல பொம்மிதான் ஏழாவது தலைமுறை. பரம்பரையா சொந்தத்துக்குள்ளேயே கல்யாணம் பண்ணி, கடைசியாய் இப்போ குழந்தை இல்லாம நிக்கிறா. ஆதிவாசி சனங்களுக்கும் பொம்மிக்கும் ஆதரவா இருக்கிறது நம்ம குரங்கணி சித்தன் மட்டும்தான்... புரிஞ்சுப் போச்சா!?

அமாவாசைக்கு மறுநாள், முந்தல் சந்தை கூடுற நாள். மலைவளங்கள் இறங்கி தரைக்கு வரும் நாள். தரைவிளைச்சல் மேலே ஏறிப் போகும் நாள்! அங்கு நடக்கிறது பழங்குடிகளோட சந்தைக்கூட்டம். `பண்டமாத்து' முறையில ஒண்ணுகூடுற சந்தை.

பாறை மேல நின்னுக்கிட்டுருந்த சித்தன், கண்ணுக்கு மேல கையை அணவு கொடுத்துக் கீழே பார்க்குறான். அடர்ந்த மரங்களா இருக்கிற காட்டுக்கு நடுவுல வகிடு எடுத்த மாதிரி ஆதிவாசிகள் கீழே இறங்குற பாதை தெரியுது. மலங்காட்டுல விளையுற அம்புட்டையும் தலையில சுமந்துக்கிட்டு எறும்புகள் சாரைசாரையாய் போற மாதிரி தெரியுது.

மலைக்கிழங்கு, மலைவாழை, மலைநெல்லி, பெருந்துளசி, தேன், தேனடை, இலுப்பை எண்ணெய், சித்தரத்தை, கடுக்காக்காய், ஏலம், கிராம்பு, அதிமதுரப்பட்டை, குங்கிலியம், நன்னாரிவேர், காட்டுமாங்காய், பலாப்பழம், மாதுளம்பழம், அன்னாசிப்பழம், சீதாப்பழம், எலுமிச்சை, மூங்கிலரிசி, தினையரிசி, வரகரிசி... இப்படி எல்லாமே தலைச்சுமையா இறங்கிக்கிட்டு இருக்கு. அவுச்சுத் திங்கிறதுக்கும் இருக்கு, ஊறுகா போட்டுத் திங்கிறதுக்கும் இருக்கு.

`இன்னிக்குத்தான் ஒரு முடிவுக்கு ஆரம்ப நாள்'னு நினைச்சுக்கிட்டே இருந்த சித்தனை, அவனோட செல்ல நாய் ‘நுய்நுய்'னு காலைச் சுத்தி வந்தது. கூப்பிடு தூரத்தில, (கூப்பிடு தூரம்ங்கிறது எவ்வளவுன்னா... பத்து விரற்கிடை தூரம் - ஒரு சாண், இரண்டு சாண் - ஒரு முழம், நாலு முழம் - ஒரு கோல், நூறு கோல் - ஒரு கூப்பிடு, நூறு கூப்பிடு (தூரம்) - ஒரு காவதம். காவதம் என்பது கண்ணுக்கு எட்டிய தூரம்!) பத்து பதினைஞ்சு ஆதிவாசிகளோட போய்கிட்டிருந்த பொம்மியைக் கூப்பிட்டான். காயாம்பூவைத் தலையில வைச்சு கையிலயும் காலுலயும் பச்சைக்குத்தி, தேன் கலயத்தை இடுப்புல வைச்சுக்கிட்டு ஒரு தெம்போட நடந்து வந்த பொம்மி, சித்தன்கிட்ட வந்து நின்னு சிரிச்சா.

`நீ சொன்னதெல்லாம் ஞாபகத்தில இருக்கு சித்தா. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எனக்குப் பிறகு வாரிசு இல்லாமல் என்னோட இனம் `அம்மாக்கிழவி' இல்லாமல் அழிஞ்சு போகுமோன்னுதான் பயம். எனக்கு யாரும் கோயில் கட்ட வேண்டாம். எனக்கு ஒரு வாரிசு வருமேனு அம்புட்டையும் செய்யப்போறேன், சித்தா!'

இப்படியெல்லாம் பொம்மி பேசுவாள்னு உத்தேசித்த சித்தன், இப்படியொரு உபாயத்தைச் சொல்ல ஆரம்பிச்சான்...

`பொம்மி... இதுவரைக்கும் பெரும்பிறவி பாண்டியன் உன்னைப் பார்த்ததில்லை. அதுக்குத் தோதா அவன்கிட்ட சங்கோஜப்படாம நடந்துக்கோ. உன்னோட நேசம் அவனுக்குக் கிடைச்சா, இந்த மலையையே ஆளலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கான். அந்தப்...'

`அவங்க நமக்கு...'

`ஆங்கடி... குறுக்க பேசாதே! அவங்க நமக்கு எதிரியாச்சே, நம்மை எப்படி நம்புவாங்கன்னு சந்தேகப் படுற... அதானே?  இந்தப் பூமியை அழிக்க நினைக்கிறவன், எல்லாத் தீர்வுக்கும் ஒரு பிரச்சினை வச்சிருப்பான். பாண்டியனால ஆதிகுடிகளுக்கு மட்டுமில்ல, எனக்கும் அபாயம் காத்துக்கிட்டுருக்கு. பாண்டியனோட பிரச்னைக்கு எங்கிட்டதான் தீர்வு இருக்கு. அதுதான் சமாதான சாஸ்வத தர்மம்! போ... போய் உன் கண்ணைக் காட்டு! எப்படியாவது அவனை இங்கே மலை மேல கூட்டிக்கிட்டு வந்துரு'

கொட்டக்குடி ஆத்துக்கரையில முந்தல் சந்தை கூடுற இடம். கூட்டம் அலையடிக்குது. தரைக்காட்டுலயிருந்து வந்த கூண்டுவண்டியில அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம், கரும்பு, சுண்ணாம்பு, பருத்தித்துணி, சணல் சாக்கு, ஊறுகாய் சாடி, மம்பட்டி, கடப்பாரை, இரும்புக்கோடாரி அம்புட்டும் இறங்குது. அணா பைசா யாவாரமில்ல... பண்டமாத்து வணிகம்தான்!

பெரியகுளத்துலயிருந்து வந்த வைத்தியர் சுண்ணாம்புக் கூடையைக் கொடுத்திட்டு மூலிகைச் செடிகளையும், கடுக்காக்காய்களையும் வாங்கினார். பல்லவராயன்பட்டி பெருமக்கள் மலைக்கிழங்கையும் காட்டு மாங்காயையும் வாங்கிக்கிட்டு அதுக்கு ஈடா எடைக்கு எடை நெல்லு சோளத்தைக் கொடுத்தாங்க. காட்டு மாங்காயை அறுத்துக் காய வச்சு வத்தல உப்புல ஊறபோட்டு குழம்பு வைச்சா அடேங்கப்பா... அதோட மருத்துவ குணம் தெரிஞ்சவங்களுக்குத்தான் நாக்கும் ஊறும், உடம்பும் ஊறும்! குரங்குகளுக்கெல்லாம் காட்டுமாங்காய்தான் குலதெய்வம்.

தேனீக்கூடல், வீரபாண்டி கிராமத்துச் சனங்க உப்பு மூட்டைகளை கொடுத்திட்டு, ஏலக்காய், கிராம்பு வாங்கிட்டுப் போனாங்க. பொம்மியும் தம்மாவும், அவங்க கூட்டமும் தேன் கலயத்தையும், தினையரிசி யையும் தூரிகட்டி தோள்ல சுமந்துகொண்டு வந்துசேர்த்தாங்க.

அவ்வளவு பெரிய கூட்டத்துல பளிச்சுன்னு தெரிஞ்சது பெரும்பிறவி பாண்டியனோட கூண்டு வண்டி... என்ன அலங்காரம்! மணி மாடுகள், அருகம்புல் மெத்தை, மாவிலைத் தோரணம். உசர உசரமா அவனுக்கான காபந்து சேவுகமாருகள். நீள நீளமா மூங்கில்கோல்கள் வச்சிருந்தாங்க.

அவங்களுக்கு நடுவால, வில்லு மாதிரி மீசையைத் திருகிக்கிட்டு, தலையில உருமாவை இருக்கி கட்டிக்கிட்டுருந்தான், பெரும்பிறவி பாண்டியன். காலையில சாப்பிட்ட கம்மங்கூழு அவன் மார்ல தெரிஞ்சது. புலிநகம் கோர்த்த தங்கமாலை கழுத்துல தொங்கிட்டு இருந்துச்சு. அவனை மொத மொதல பார்க்குது பொம்மி. கூண்டுவண்டியை நெருங்கி, பாண்டியனைப் பார்த்துக் கை நீட்டுனா பொம்மி.

பாண்டியனுக்கு தன் பக்கத்தில வந்து நிக்கிறது பொம்மின்னும் தெரியாது; இப்படி அவ தன் பக்கத்துல வருவாள்னும் அவன் எதிர்பார்க்கல. அவள் தான் பொம்மி என்று தெரிந்ததும் சேவுகமார்கள வழிவிடச் சொன்ன பாண்டியன்,  ஒரு குழப்பத்தோட பொம்மியைப் பார்த்துச் சிரிச்சான்.

`எனக்குக் கோவமெல்லாம் இல்ல. சும்மா பக்கத்துல வாங்க. எங்க பக்கமிருந்து தேவையான சாமான்கள் இனிமேல் தடையில்லாமல் ஆதிகுடிகளுக்குக் கிடைக்கும். அதை நான் ருசுப்படுத்துறேன். தூதன் வந்து சொன்னான். சமாதானமா போயிடலாம். உங்க தாத்தன் எருமைத்தலையை வெட்டிக் கொட்டக்குடி ஆத்துல போட்டு அசிங்கப்படுத்துனதை மறந்துட்டேன். எங்க பாட்டன் பூட்டன் செய்ததை நீங்களும் மறந்துடுங்க. இறங்கி வந்துட்டேன்...

நீங்க இவ்வளவு வடிவா இருப்பீங்கன்னு நான் நினைச்சுப் பார்க்கல பொம்மி!' வச்ச கண்ணு வாங்காம பதமாப் பேசினான் பாண்டியன்.

உடனே பொம்மி, `நானும் இறங்கி வந்துட்டேன். எங்களுக்கு வேணும்ங்கிறதை உங்ககிட்ட வாங்கிக்கிறோம். உங்களுக்கு வேண்டியது எங்ககிட்ட நிறைய இருக்கு. நாங்களும் மனசார தர்றோம். ஆனா நீங்க முந்தலுக்கு மேல வர வேணாம், எல்லை தாண்ட வேணாம், உயிர்பலி வேணாம்... சமாதானமாய்ப் போயிடலாம்!' ஏனோத் தெரியல குரங்கணி சித்தன் அவளுக்குப் பின்னால சிரிச்ச மாதிரி தெரிஞ்சது.

பாண்டியனோட காது பக்கத்துல நெருங்கின ஒரு சேவுகன், கையை குவிச்சு, `அண்ணே... எல்லாம் தயாரா இருக்கு, பொம்மியை வளைச்சிறலாமா?'னு மெதுவாக் கேட்டான்.

வேண்டாம்னு கண்ணக் காட்டின பாண்டியன், பொம்மி பக்கம் திரும்பி, `அதெல்லாம் இருக்கட்டும் பொம்மி... வர்ற பௌர்ணமிக்கு உங்க குரங்கணி சித்தனை எங்க சின்னமனூர்த் தோட்டத்துக்குக் கூப்பிட்டுவர்றயா...?'

`ஏன்... எதுக்கு சாமி?'

- சொல்றேன்...

- வடவீர பொன்னையா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE