கல்வி வளர்ச்சி குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த துணைவேந்தரை, ஏதோ முக்கியப் பணி குறித்து விவாதிப்பதற்காக அழைக்கிறார் கல்வியமைச்சர். ‘‘எனக்கு முக்கியமான பணிகள் உள்ளன. உடனடியாக விவாதித்தே தீரவேண்டும் என்ற அளவுக்கு முக்கியமான விஷயம் ஏதேனும் இருந்தால் பதிவாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்’’ என்று கூறி சந்திக்க மறுத்துவிட்டார் துணைவேந்தர்.
இது நடந்தது, காமராஜர் ஆட்சிக்காலத்தில். அழைத்தவர் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன். சந்திக்க மறுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார்!
இன்றைய துணைவேந்தர்கள் மாதத்திற்கு ஒருமுறை உயர்கல்வித்துறை அமைச்சரை வீடு தேடிப் போய்ப் பார்க்கிறார்கள். கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க அல்ல... கைக்கூலிகளாக செயல்பட்டு வசூலித்த அந்த மாத கையூட்டு வருவாயைப் பங்கு பிரித்துக் கொள்வதற்காக. அப்போது அமைச்சர் வீட்டு வேலைகளைச் செய்வதற்குக் கூட இவர்கள் தயங்குவதில்லை.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு சீரழிந்தன? அதற்கு யார் காரணம்? ஆயிரமாயிரம் வினாக்களுக்கும் இந்த இரு உதாரணங்களிலேயே விடை இருக்கிறது.