அஜய்யை சந்தித்த அந்தத் தருணங்கள் அற்புதமானவை. அவன் கண்களைக் குறும்பாக உற்றுப் பார்க்கிறேன்.அவனும் கண்களைச் சுருக்கி கண்ணிமைக்காமல் குறும்பாகப் பார்க்கிறான். பின்பு ‘என்ன’ என்பதுபோல் புருவங்களை உயர்த்துகிறான். அப்புறம் அவனது அந்தச் சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. ‘வேலை இருக்கு அங்கிள்…’ என்று செல்லமான சலிப்புடன் கணக்கு நோட்டில் மூழ்குகிறான்.
நொடிகளில் கூட்டல் கழித்தலை அவன் அனாயாசமாகக் கையாண்ட வேகம் பிரமிப்பாக இருக்கிறது. ஒரு விஷயம், அஜய் ஒரு சிறப்புக் குழந்தை... ‘டவுன் சிண்ட்ரோம்’ பாதிப்புக்குள்ளான சிறப்புக் குழந்தை!
“அவனை ஒரு ஹோம்ல சேர்த்திடுங்கனு பலரும் சொன்னாங்க… ஆனா எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு… சர்க்கார் வேலையை விட்டுட்டு அவனை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்திருக்கேன். அவன் நல்ல நிலைமைக்கு வந்தப் பின்னாடிதான் திரும்பவும் பணியில் சேர்ந்தேன்” என்கிறார் அஜய்யின் தாய் ஜெயக்கொடி. இப்போது அவர் நெல்லை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவர்.
ஜெயக்கொடி - மோகன்ராஜ் தம்பதியினரின் மூத்த மகன் அஜய். 14 வயதாகும் அஜய் பிறவியிலேயே ‘டவுண் சிண்ட்ரோம்’ பாதிப்புக்குள்ளானவன். மூளை வளர்ச்சி குன்றிய இவர்கள் மந்தமாக இருப்பார்கள். புறச்சூழல் குறித்த புரிதல் இருக்காது. பாடங்களைப் படிப்பது சிரமம். கணக்கு துளியும் வராது. ஆனால், இவற்றை எல்லாம் உடைத்து தூள்தூளாக்கியிருக்கிறான் அஜய்.