ரூபி ஸ்டெல்லாக்கு லேசாக மாறுகண். “எங்கனுக்குள்ள பாக்க?”னு யாராச்சும் லந்தடிச்சா “இப்ப அதத் தெரிஞ்சி ஜில்லா கலெக்டரு ஆகப் போறியாக்கும்? எனக்குத் தெரியுது எங்க பாக்கேன்னு. நீ ஒன் ஜோலிக் கழுதையைப் பாரு”னு ஆஞ்சுபோடுவா. வேதக்கோயில் பள்ளியோடத்துல அவ படிச்சாலும் ரீசஸ் பீரியடுக்குத் தேரடி முக்குக்கு என்னப் பாக்க ஓடியாந்துடுவா. ‘எல்லாம் ஏசுவே, எமக்கெல்லாம் ஏசுவே’ பாட்டை முழுசா ராகம் போட்டுப் பாடச் சொல்லித்தந்தது அவதான். நல்ல அடர் கருப்பில் களையா இருக்கும் ரூபி மிட்டாய் ரோஸ், கிளிப் பச்சை கவுனில் ஞாயிறு வேதக்கோயிலுக்குப் போய்விட்டு நேராக சன்னதித் தெருவுக்கு வந்துருவா.
‘மணல் தள்ளி’ வெளாட்டுக்கு ஆளச் சேத்துக்கிட்டு மதிய வெயிலில் பெருமாள் கோயிலுக்குள்ள போயி வேதக்கோயிலில் பொழுசாய மணி அடிக்கும் வரை ரெண்டு பேரும் ஆட்டம் போடுவோம். ரூபியின் அப்பா மில்லு ஷிப்டு முடிந்து, நேரா கோயில் வாசலுக்கு வந்து சைக்கிள் மணியடிப்பார். “ஏ ரூபி... அந்த மானிக்க என்ன இப்படிப் பொசுக்குன்னு போற”ன்னு கத்த கத்த ‘மணல் தள்ளி’ வெளாட்டப் போட்டது போட்டபடி ஓடிருவா.
தோசக்கல்லு செட்டியாரு மகன் பரமசிவத்துக்கு ரூபின்னா பச்சநாவி. அவ கவுன எப்டியாச்சும் அழுக்குப் பண்ணாம வுட மாட்டான். “கவுன போட்டாப்ல, பெரிய ஏஞ்சலு”னு கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருப்பான். அதுக்கேத்தாப்புல ரூபியும் அவன வம்புக்கிழுத்து, “ஏ... சவம்... சவம்”னு வேணும்னே இழுத்துக் கூப்புடுவா. ரெண்டு பேரும் சண்டை கட்டி எகிறுனா ‘மணல் தள்ளி’ வெளாட்டுல ஒரே வசவும் கத்தலுமாத்தான் இருக்கும்.
“வுடு ரூபி, அவங்கூட ஏன் எக்குப் போடற”னு கேட்டா, “ஒனக்குத் தெரியாது செமதி. போனவாட்டி நா டவுனுக்கு சினிமாக்குப் போனப்ப இவனும் வந்திருந்தான். நியூ முத்து டாக்கீஸ்ல தா - இவனப் பாத்துட்டு மூஞ்சியத் திருப்பிக்கிட்டேன். அங்க இருந்து கத்துதான் - ரெண்டு எம்.சி.யார் ஒனக்கு நாலாத் தெரிவாங்களா”ன்னு சொல்லும்போது ரூபியின் மூக்கு வெடவெடன்னு செவசெவத்துவிடும்.