மல்லுக்கட்டத் தயாராகும் மணியனும் ஜெயபாலும்!
நாகை மாவட்ட அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், ஓ.பி.எஸ். பக்கம் நின்றவர். ஆனால், கழகங்கள் இணைந்த பிறகு இவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லையாம். அதற்காக அதிருப்தியில் இருந்தார். இது தெரிந்ததும் தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான பொறுப்பாளராக ஓ.எஸ்.மணியனுடன் இவரையும் சேர்த்துப் போட்டு வாட்டம் போக்கியிருக்கிறார்கள். இதையடுத்து ஜெயபால் இப்போது குஷி. அடுத்து, கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிக பதவிகளை வென்றெடுப்பது யார் என்ற கோதாவில், மணியனும் ஜெயபாலும் மல்லுக்கட்டத் தயாராகி வருகிறார்கள்.
செரினாவும் செல்ல மகனும்!
செரினாவை ஞாபகம் இருக்கிறதா? கஞ்சா வைத்திருந்ததாக 2003-ல் அதிமுக அரசால் கைது செய்யப்பட்டவர். உண்மையில் அப்போது செரினா சிறைவைக்கப்பட்டதன் காரணம் வேறு. 10 கிலோ கஞ்சாவும் ஒரு கோடியே நாற்பது லட்ச ரூபாயும் செரினாவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் சொன்னது. வழக்கின் இறுதியில் செரினா குற்றமற்றவரானார். அந்த செரினா இப்போது சென்னையில் வசிக்கிறார். வெளிநாட்டு வங்கி ஒன்றில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டவருக்கு, இப்போது ஒரு வயதில் செல்லமாய் ஒரு மகனும் இருக்கிறார்.