நீதியே, உன் வலிமை இதுதானா?

By காமதேனு

உச்ச நீதிமன்றத்தின் மாண்பும் வலிமையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. ஏற்கெனவே, இதே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு காற்றில் பறக்கவிட்டது. நீதிமன்றம் கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது, காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்கான கெடு தேதி முடியும் வரை கைகட்டி இருந்துவிட்டு, தமிழகத்தின் கதறல்கள் காதிலேயே விழாதது போல மவுனம் காக்கும் மத்திய அரசுக்கு என்ன கடுமைகாட்டப் போகிறது உச்ச நீதிமன்றம்?

சட்டத்தையும் நீதியையும் இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கும் மக்களுக்கு, அந்த நம்பிக்கையை நிலைநாட்டிக் காட்டவேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. கழுவிய மீனில் நழுவிய மீனாக கடமையைத் தட்டிக்கழிக்க இது  அத்தனை சாதாரண வழக்கல்ல.

நெடுஞ்சாலையை ஒட்டி மதுக்கடைகள் கூடாது என்ற தீர்ப்புக்கே  ‘தண்ணி காட்டும்’ வகையில் நெடுஞ்சாலைகளை எல்லாம் ஒரே மூச்சில் உள்ளூர் சாலைகளாக மாற்றி  ‘பெப்பே’ காட்டிய அசகாய சூர அரசியல்வாதிகளின் தேசமிது. அப்போது போல் இப்போதும் அரசியல்  சித்து விளையாட்டுக்களை உச்ச நீதிமன்றம் கண்டும் காணாது இருந்துவிட்டால், நீதிபதிகள் நியமனம் தொடங்கி மற்ற செயல்பாடுகள் வரையில் அரசியல் குறுக்கீடு இருப்பதாக நீதியரசர்களே எழுப்பிவரும் குற்றச்சாட்டு குமுறல்களுக்கும் மக்கள் ஆதரவு கிடைக்காது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE