குரங்கணி சித்தன் கதை - 3

By வடவீர பொன்னையா

தாயையும் தாரத்தையும் விலக்கினால்கூட தண்ணிய மட்டும் விலக்கவே கூடாது’னு நம்ம மூத்தகுடிகள் சொலவடை சொல்லுவாங்க!

“ஏந்தெரியுமா?”- குரங்கணி சித்தன் தெம்பா பேச ஆரம்பிச்சான், “ஆதிகாலத்திலிருந்து சகல ஜீவராசிகளுக்கும் தண்ணிதான் ஜீவனம்! அதுதான் உசுரு... அதுதான் விந்து!

ஆறும் குளமும் மனுசன பிரிக்கிறதில்ல... மனசனோட மனசுதான் பிரிக்குது. ஆசை... பேராசை!

இந்தக் குரங்கணி மலையில, குகையிலயிருந்து வெளிய வந்த மனுசப் பயலுக கூடிக்கூடி, முதுவாக்குடி,மண்ணாங்குடி, பளியங்குடி, கொட்டக்குடி, நரிக்குடி... நாய்க்குடின்னு நாகரிகத்துக்குப் போகத் தனிக்குடியா போனாங்க!

எல்லா ஆதிகுடிகளும் கொட்டக்குடி ஆத்தை மட்டுமே நம்பி இருந்தாங்க. கொட்டக்குடி ஊத்துத் தண்ணிதான் யானைகளுக்கும் மானுக்கும் கவுதாரிகளுக்கும் காவாலி களுக்கும் மனுசனுக்கும் மாட்டுக்கும் ஜீவாதார உசுருத் தண்ணி. பிறந்த குழந்தைங்கள தொப்புள்கொடியோட குளிப்பாட்றது இந்த ஊத்துத் தண்ணியிலதான். இந்த ஊத்துத் தண்ணிய எடுத்துத்தான் கோயிலே கட்டுவாங்க..!” - சொல்லி நிறுத்தின சித்தன், ரெண்டு கையால தன் முகத்தை மூடி, மெதுவா தாடியோட வழிச்சு எடுத்தவன், ரெண்டு கையையும் வானத்துக்குத் தூக்கினான்.

‘‘அந்த ஊத்துத் தண்ணியிலதான் எருமைத் தலைகள வெட்டிப் போட்டான் உங்க தாத்தன்! ம்... வெட்டிப் போட்டுக்கிட்டே இருந்தான்! ஆசையினால வந்த பகை... பகையினால வந்த கோபம்..!” சித்தன் சொல்லச் சொல்ல, உடம்பு புல்லரிக்கக் கேட்டுக்கிட்டே இருந்தா பொம்மி... அவளோட புருஷன் தம்மனுக்கு உடம்பு நடுங்குச்சு!

‘‘அதுமட்டுமா... பெரிய பெரிய பாறைகளைத் தூக்கிக்கிட்டு வந்து, கொட்டக்குடி ஆத்துக் கரையில மேற்காலயும் கெழக்காலயும் போட்டு, யாருமே போக விடாம செஞ்சான். யானை, புலி, மானு... மட்ட எதுவும் தண்ணிகிட்ட போக முடியல..!”

பொம்மியோட வயித்த உத்துப் பாத்தான், சித்தன்!

குரங்குகளோட சத்தம் கூடிப்போச்சு.

‘‘அங்க பாரு... இந்தக் கொட்டக்குடி ஆத்துக்கு ரெண்டு பக்கமும் பாத்தியா பொம்மி... ஒரு பக்கம் சாம்பல் நெறத்துல மந்தி குரங்குக, மறுகரையில கருப்பு நெறத்துல கொத்தாளக் குரங்குக. காலம் காலமா மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கே, ஏந்தெரியுமா? நவ்வா மரத்துக்கு அந்தக் குரங்கு வராது... கோங்கு மரத்துக்கு இந்தக் குரங்கு போகாது! அதுக மேற்குக் கரையில மூத்திரம் பேயும், இதுக கிழக்குக் கரையில மூத்திரம் அடிக்கும்... புரியுதா பொம்மி?  இங்க பாரு... ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல... அஞ்சாயிரம் வருஷம் இந்தக் கதைதான்.

சாம்பல் குரங்கு தாய்வழிச் சமூகம்... அந்தக் கூட்டத்துக்குப் பொட்டக் குரங்குதான் மொரச்சுப் பார்க்கும்.இந்தக் கருங்குரங்கு கூட்டம் தந்தைவழிச் சமூகம்... ஆம்பளக் குரங்குதான் எட்டி உதைக்கும்... கடிச்சு வைக்கும்!’’

‘‘ஆமா... கருங்குரங்கு கடிச்சா, சாம்பல் குரங்கு பயந்து ஓடிப்போயிருதே சித்தா... ய்யேன்?’’

‘‘ஆமா, அதுகளுக்குத் தெரியும், தாத்தாக்கள் எல்லாம்

கருப்பனோட சண்டை போட்டு தோத்து ஓடிப்போய், உச்சிமலையில உக்கார்ந்து புண்ண நக்கிக்கிட்டு இருந்துச்சுனு! அதுலயிருந்து சாம்பல் குரங்கு, புத்தியத்தான் தீட்டிக்கிட்டே இருக்கும். ஆனா, அடி வயித்துல நெருப்பு எரிஞ்சுக்கிட்டே இருக்கும். அதுக குத்தால மலைக்குப் போகும், வருசநாடு மலைக்குப் போகும், சதுரகிரிமலை வரைக்கும் போகும்... வரும். பொண்டாட்டியக்  கூட்டிட்டுப் போறதுக்கு எடம் பாத்துட்டு வரும்..! சொந்தத்துல கல்யாணம் பண்ணாது... கூடிக் களிக்காது... குதிரையேறாது!

ஆனா, கருங்குரங்கு இருக்கே போக இடமில்ல. சுகவாசி. காலை ஆட்டிக்கிட்டே சாப்பிடும். ஏமாத்தும், திருடும். சொந்தத்துலதான் கல்யாணம் பண்ணும். தன் இணைய வேத்துக் குரங்கு தொட்டா கோவம் வரும். கடிக்கும், கட்டையெடுத்து அடிக்கும். பொம்பளைய ஜெயிக்கணும்ங்கிற கோவத்துலதான் கல்லையும் கட்டையையும் ஆயுதமாப் பயன்படுத்த ஆரம்பிச்சதுக.

‘‘சரி பொம்மி... நீ சொந்தத்துலதான கல்யாணம் பண்ணிக்கிட்ட?’’ - சித்தன் கோளாறாப் பேச்சை ஆரம்பிச்சான்.

பக்கத்துல வேப்பங் கொழுந்த ஆஞ்சுக்கிட்டு இருந்த தம் புருஷன் தம்மாவைக் காட்டின பொம்மி, ‘‘ஆமா, இவரு அப்பாவழிச் சொந்தந்தான். பலாப்பழத்த தூக்கி வந்து, எங்க குடிசைக்குப் பின்னால இருந்த மரத்துமேல ஏறி, ராவும் பகலுமா தூங்காம கொள்ளாம என்னக் கட்டிக்கணும்னு காத்துக் கெடந்தாரு. சோறு தண்ணி இல்ல. நான்தான் ஆர்வப்பட்டு, ‘இறங்கி வந்து எங்குடிசையில வந்து படுய்யா’னு சொன்னேன்.அதுலயிருந்து எனக்காகத் தேனெடுப்பாரு... தெனமாவு இடிப்பாரு... ஏன் சிரிக்கிற சித்தா?’’

சிரிப்பை அடக்க மாட்டாத சித்தன், ‘‘இல்ல... ரெண்டாவது புருஷனை எப்படிப் புடிச்ச?’’னு கேட்டான்.

‘‘அவனுக்கு என்னவிட வயசு கம்மி. ‘குத்தாலத்து மலையில கெடச்சது’னு நீளமா வாழப்பழம் கொண்டு வந்தான். வாட்டசாட்டமா இருந்தான். வடக்காலயும் தெக்காலயும் போயி நவ்வாப்பழம், நண்டு, ஆடு, கோழி எல்லாம் கொண்டுவருவான். நல்லா கசாப்புப் போடு வான். அவனும் அம்மாவழி சொந்தம்தான். அவனையும் வீட்ல வந்து படுத்துக்கோனுட்டேன்!’’

‘‘நியாயப்படி பார்த்தா, நீயும் தாய்வழிச் சமூகத்துல வந்தவ. சொந்தத்துல கல்யாணம் பண்ணியிருக்கப் படாது. சொத்து சொகம் எல்லாம் உங்க அம்மா மூலம்தான் வரும். அப்பாவை தூரத்துல மரத்துமேல உக்கார வெச்சுடுவீங்க. தூரமாப் போய் சம்பாதிச்சுட்டு வான்னு சொல்லிப் பழக்கிட்டீங்க. அடங்கித்தான் போவான்!

எல்லாம் உங்க தாத்தன் செஞ்ச வேலை. கொட்டக்குடி ஆத்தை மறுச்சதால இந்தப் பக்கம் யானையும் போக முடியல, யானைத்தடம் பார்த்துப் போற சிக்காரியும் (வேட்டை விலங்குகளும்) போக முடியல. யானைகளும் புலிகளும் கரடிகளும் சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்காது. மனுசப் பயலுக அதுக போற பாதைய கல்லுக்கதவு போட்டு மூடுனா அது எந்தக் கூட்டத்தோட சேரும்? ஒண்ணுக்குள்ள ஒண்ணா மெய்யாகிப்பிறக்கிற யானைக்குத் தந்தம் வளராமல் போகும். புலிக்குப் பல்லு வளராது... கரடிக்கு நகம் வளராது. ஆகாரம் குறையும். ஒரு கட்டத்துல குட்டியே போட முடியாம இனமே அழிஞ்சு போகும்! உங்க தாத்தன் செஞ்ச அதர்மம் இதுதான். அந்தப் பாவம் சும்மா விடுமா?’’னு சொன்ன சித்தன், திரும்பவும் பொம்மியோட அடிவயித்தப் பார்த்தான்.

‘‘வருவான்... ஒருத்தன் வருவான். தண்ணியத் திருப்ப வேற நெலத்துல இருந்து படையோட வருவான்.ரெண்டு கரையிலயும் மாறி மாறி சொத்து சேக்குறீங்களே... அந்த நெலத்தையும் கிராம்பையும், ரெண்டுபேர் கிட்ட இருந்தும் பிடிங்கிக்கிட்டுப் போக ஒருத்தன் வருவான். அவன் தண்ணியில மெதந்து வருவான். நான் பார்க்கத்தான் போறேன்!'' - செம்போத்துப் பறவ ஒண்ணு, சித்தன் சொன்னது நடக்கும்னு ஆமோதிக்கிற மாதிரி றெக்கைய அடிச்சுத் தலையைத் தூக்கி ‘‘பவ்வோவ், பவ்வோவ்’’னு ஒலி எழுப்புச்சு.

‘‘அது சரி... எனக்குக் குழந்தை எப்போதான் பொறக்கும் அதச் சொல்லு முதல்ல..?'' - பொம்மி கொஞ்சம் ஏக்கத்தோடதான் கேட்டாள்.

‘‘அதுக்கு முன்னாடி எனக்கு நீ ஒரு உபகாரஞ் செய்யணும்..!'' கண்ணைச் சுருக்கி நம்பிக்கையாக் கேட்டான் சித்தன்.

‘‘என்கிட்ட என்ன இருக்கு..?’’- ஆச்சரியமாக் கேட்டாள் பொம்மி.

‘‘எல்லாமே உன்கிட்டதான் இருக்கு பொம்மி. எப்படியாவது பெரும்பிறப்பு பண்டியனை என்கிட்ட கூட்டிக்கிட்டு வந்துரு. ஆண்டாண்டு காலமா என் மேலயும்

பகையா இருக்கான். சமாதானம் சகலமும் சித்தம்!’’

‘‘வருவாரா..? என்னை நம்புவாரா..?’’

‘‘நைச்சியம் பண்ணிக் கூப்பிடு, வருவான். பிரிஞ்சு போன இனம் ஒண்ணுசேரும். நீதான் காரணம்னு உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுவாங்க!"

‘‘எப்பிடி..?’’

- சொல்றேன்...

வடவீர பொன்னையா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE