தாவோ: பாதை புதிது - 5

By ஆசை

அதிகாலையில் கூடுவாஞ்சேரி வானத்தின்கீழ் என் வீட்டு மொட்டைமாடியில் நடப்பது மிகவும் அலாதியானது. கூட்டம்கூட்டமாகவோ உதிரிஉதிரியாகவோ செல்லும் மடையான்கள், நீர்க்காகங்கள், அன்றில்கள், நத்தைகுத்தி நாரைகள்… இவை எல்லாம் மேற்கூரை ஓவியங்கள் என்றால் உள்ளூர் நண்பர்களான காகம், மைனா, தேன்சிட்டு, தையல்சிட்டு, கருஞ்சிட்டு, வாலாட்டிக்குருவி, கரிச்சான் போன்ற தரையோவியங்களையும் சுவரோவியங்களையும் அந்த அதிகாலை இயற்கை நான் கண்டுகளிக்க வழங்கும்.

இவையெல்லாம் கண்ணுக்குத் தெரிபவை. அக்காக்குருவி, ஆள்காட்டி, செம்பகம் இவற்றின் ஒலி மட்டும் திடீரென்று எங்கிருந்தோ வந்து அதிகாலையின் அமைதியை மேலும் ஆழமாக்கும். அதிலும் இந்தச் செம்பகம் இருக்கிறதே கனமும் மென்மையும் கூடிய குரல் அதற்கு. செம்பகத்தை ஒரு திரையிசைப் பாடகராகக் கற்பனை செய்துகொள்ள வேண்டுமென்றால் நான் சிதம்பரம் ஜெயராமனாகவே கற்பனை செய்துகொள்வேன். காற்றைப் பொத்திப் பொத்தி அழகாகத் தட்டும் குரல் செம்பகத்துடையது.

இயற்கையின் அழகுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது இந்தப் பிரபஞ்சத்தின் சாத்தியங்களை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. இயற்கை தனது படைப்புத் திறனில் மட்டுமல்ல, அழிக்கும் திறனிலும் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது. ‘சூப்பர்நோவா’ என்ற ‘பெருவிண்மீன் வெடிப்பு’ எனும் நிகழ்வில் தொடங்கி, இயற்கையின் அங்கமாக இருக்கும்

(ஆனால் அதை உணராமல் இருக்கும்)

மனிதர்கள் நிகழ்த்தும் போர் முதலான அழிவுகள் வரை இயற்கைக்குள்  அத்தனை அழிவுசாத்தியங்களும் அடங்கியிருக்கின்றன.

உலகில் லட்சக்கணக்கான செம்பகங்கள் இருக்கலாம். அவை தினமும் கணக்கற்ற முறை குரலெழுப்புகின்றன. அதே போல் கோடிக்கணக்கான பறவைகளும் குரலெழுப்புகின்றன.

சத்தங்களையெல்லாம் உண்டியலில் போடும் காசு போல் நினைத்துக்கொண்டால் அத்தனை பறவைகள் போட்ட காசுகளையும் மனிதர்கள், விலங்குகள், கருவிகள், பெருவிண்மீன் வெடிப்புகள் எழுப்பிய சத்தத்தின் காசுகளையும் போட்டும்கூட இந்த அண்டவெளி உண்டியல் நிரம்பவில்

லையே. ‘இதற்கு மேல் என்னிடம் இடமில்லை, நீ ஒலியெழுப்பாதே செம்பகம்’ என்று இயற்கை கூறவில்லை. எவ்வளவு நிரப்பினாலும் நாம் நிரப்ப முடியாத பாத்திரம் இயற்கை.

சத்தம், ஒளி போன்றவை மட்டுமல்ல… இந்தப் பிரபஞ்சத்தில் பூமி உள்ளிட்ட கோள்களில் தோன்றிய உயிர்கள், அவற்றின் எண்ணங்கள், கற்பனைகள், ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் விண்பொருட்கள், அணுக்கள் என்று வெவ்வேறு வகை பிரித்துப் பார்த்துக்கொண்டே போனால், இத்தனை பருப்பொருட்களையும் அவற்றின் சாத்தியங்களையும் உள்ளடக்கியிருந்தாலும் இந்தப் பிரபஞ்சம் 96 சதவீதத்துக்கும் மேல் காலி இடம்தான் என்கிறது நவீன அறிவியல். (காண்க: பெட்டி)

காலி பாத்திரத்திலிருந்து…

இவ்வளவு விண்மீன்கள், கோள்கள் ஏனைய விண்பொருட்கள் எல்லாம் எவ்வளவு நிறை கொண்டிருக்கும்? அத்தனையும் உருவானது இன்மையிலிருந்து. பெருவெடிப்பில் அணுவுக்கும் சிறிய அளவு புள்ளி வெடித்து இந்தப் பிரபஞ்சம் உருவானது. பெருவெடிப்பு தோன்றியபோதுதான் காலமும் இடமும் தோன்றியது. அதற்கு முன் காலம் இடம் இரண்டுமே இல்லை. ஆகவே, ‘காலி’ என்ற சொல்லுக்கு இங்கே காலம், இடம் இல்லாத நிலை என்று பொருள். ஒரு புள்ளிக்குள்தான் கிட்டத்தட்ட இன்று இருக்கும் அனைத்து நிறையும் இருந்திருக்கிறது. காலி நிலையிலிருந்து தோன்றிய புள்ளி அன்றிலிருந்து இன்றுவரை, எதிர்வரும் காலத்துக்கும் சேர்த்து, அளவில்லாத சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

தான் எதிலிருந்து தோன்றியதோ அந்த ‘இன்மை’யைத் தனது அம்சமாக இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரும் கொண்டிருக்கிறது. நாமெல்லாம் அந்த இன்மையின், வெற்றிடத்தின் இசை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

காலி இடத்தின் சாத்தியத்தைப் பற்றிச் சொல்வதற்குப் புல்லாங்குழலை உதாரணமாகச் சொல்லலாம். எவ்வளவு ஸ்வரங்கள், அபஸ்வரங்களுக்குமூலாதாரமாக இருக்கிறது புல்லாங்குழலின் காலி இடம். புல்லாங்குழல் உடைந்து இற்றுப்போனாலும் அதனுள் இருக்கும் காலி இடம் அப்படியே இருக்கிறது. அதன் இசை சாத்தியங்களும் அப்படியே இருக்கின்றன. இந்த உலகத்தின் அனைத்து இசைக்கருவிகளையும் உடைத்துப்போட்டாலும் இசையின் சாத்தியம் அப்படியே இருக்கும். அது வெற்றிடத்தின் சாத்தியம். ரூமியின் கவிதை நினைவுக்கு வருகிறது.

இவ்வுலகின் யாழையெல்லாம்

நீ உடைத்தாலுமென்ன மௌலா?

வேறுவேறு யாழுண்டு

ஆயிரமாயிரமாய் இங்கே.

காதல் யாழின் பிடிக்குள் விழுந்த நமக்கு

என்ன கவலை, நமது யாழும் குழலும் தொலைந்தால்.

இவ்வுலகின் யாழும் துந்தனாவும் எரிந்துபோனாலும்

மறைந்துகிடக்கும் யாழுண்டு பல, நண்பா.

கேட்புத்திறனற்றோரின் காதை எட்டவில்லையென்றாலும்

மீட்டொலியும் டங்காரமும் விண்ணைத் தொடும்.

இவ்வுலகின் விளக்குகளும் மெழுகுவர்த்திகளும்

அணைந்துபோகட்டுமே, சிக்கிமுக்கிக் கல்லும் இரும்பும் இங்கே இருக்கும் வரை

என்ன கவலை?

எல்லாவற்றையும் படைத்து, படைத்தவற்றின் மூலாதாரமாக இருந்து இயக்கிக்கொண்டிருக்கும் அந்த ‘காலி’த்தன்மையைத்தான், இன்மையைத்தான் லாவோ ட்சு ‘தாவோ’ என்று அழைக்கிறார். எல்லாவற்றையும் படைத்தது என்றால் படைப்பவற்றுக்கு வெளியில் இருந்துகொண்டு, ஒரு குயவர் பானை செய்வதைப் போல அல்ல. பானையாக உருவாகிக்கொண்டே தன்னைப் படைக்கும் பானைதான் தாவோ. ஆகவே, தாவோ கடவுள் அல்ல. ‘தாவோ தே ஜிங்’ நூலில் ஒரு இடத்தில் கூட கடவுள் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்கலாம். இந்தப் பிரபஞ்சத்தின் மூலாதாரம், வாழ்க்கையின் மூலாதாரம் என்று ஒன்று இருக்குமானால் அதுதான் தாவோ என்று தாவோயிஸம் கருதுகிறது.

(ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை)

(உண்மை அழைக்கும்...)

அதிகாரம் 4

காலியாக இருக்கிறதென்பதால்

தாவோ பயன்படுத்தப்படும்போது

அது நிரப்பப்படுகிற சாத்தியமில்லை.

தன் நுண்மையின் நுண்மையில்

அது அனைத்தின் மூலாதாரமாகத் தோன்றுகிறது.

அதன் ஆழத்தைப் பார்க்கும்போது

அது எப்போதும் இருப்பதாகவே தோன்றுகிறது.

எனவே, தாவோ

யார் குழந்தை என்று எனக்குத் தெரியாது.

ஆனால்,

இயற்கையின் மூதாதைபோலத் தோன்றுகிறது.

-2,500 ஆண்டுகளுக்கு முன் சீன ஞானி லாவோ ட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’, தமிழில்: சி.மணி

அத்தனையும் வெற்றிடமா?

பிரபஞ்சம் நம்மால் கற்பனையே செய்துபார்க்க முடியாத அளவுக்கு மிகவும் விசாலமானது. நம் கண்ணுக்கும் அறிவியலுக்கும் புலனாகக்கூடிய பிரபஞ்சத்தின் அளவு 9,300 கோடி ஒளியாண்டுகள். ஒளி ஒரு ஆண்டுக்குப் பயணிக்கக்கூடிய தொலைவுதான் ஒளியாண்டு. அதாவது 9,50,000,00,00,000 கிலோமீட்டர்கள். இதனுடன் 9,300 கோடியைப் பெருக்கினால் வரும் தொலைவுதான் நமக்குப் புலனாகக்கூடிய பிரபஞ்சத்தின் குறுக்குவெட்டு நீளம். எனில், ஒட்டுமொத்த பிரபஞ்சமும் எவ்வளவு பெரிதாக இருக்கும்?

நமக்குப் புலனாகக்கூடிய பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 300 செக்ஸ்டில்லியன் (1 என்ற எண்ணிக்கைக்குப் பிறகு 21 பூஜ்ஜியங்களைப் போட்டால் அதுதான் ஒரு செக்ஸ்டில்லியன்). புலனாகக்கூடிய பிரபஞ்சத்தில் இருக்கும் ஒட்டுமொத்த அணுக்களின் குத்துமதிப்பான எண்ணிக்கை 1 என்ற எண்ணுக்குப் பிறகு 80 பூஜ்ஜியங்களைப் போட்டுப்பார்த்தால் கிடைக்கும். இவ்வளவு எண்ணிக்கையிலான பருப்பொருளைக் கொண்டிருந்தாலும் பிரபஞ்சம் 96% வெற்றிடம்தான். வெற்றிடம் என்றாலும் அது பரிபூரண வெற்றிடம் இல்லை.

கண்ணுக்குப் புலனாகாத கரும்பொருளும் (டார்க் மேட்டர்), கரும் ஆற்றலும் (டார்க் எனர்ஜி) அந்த வெற்றிடத்தில் நிரவியிருக்கின்றன என்பது அறிவியலாளர்களின் கணிப்பு. ஆக, வெற்றிடம் என்பதை ஆற்றலைச் சூல் கொண்ட வெற்றிடம் என்று வரையறுக்கலாம்.

பிரபஞ்சம், விண்மீன்கள் என்ற பிரம்மாண்ட அளவில் மட்டுமல்ல, அணுவின் உள்ளே சென்று பார்த்தாலும் அப்படித்தான். ஒரு மில்லி மீட்டரை கோடியில் ஒரு பங்காக வகுத்தால் அதுதான் ஒரு அணுவின் அளவு. கிட்டத்தட்ட அணுவின் 99.9%-க்கும் மேற்பட்ட நிறையை அதன் உட்கரு கொண்டிருக்கிறது.

ஆனால், அணுவின் ஒரு லட்சத்தில் ஒரு பங்கு இடத்தை மட்டுமே உட்கரு அடைத்திருக்கிறது. அணுவுக்குள் இருக்கும் வெற்றிடத்தைப் பற்றி கிராப்பர் என்ற அறிவியலாளர் இப்படி கூறியிருக்கிறார், “ஒரு தேவாலயத்தின் அளவுக்கு அணுவின் அளவை உருப்பெருக்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தேவாலயத்துக்குள் பறக்கும் ஈயின் அளவுக்குதான் அணுவின் உட்கரு இருக்கும். ஆனால், தேவாலயத்தைவிட பல்லாயிரக் கணக்கான மடங்கு கனமாக இருக்கும் அந்த ஈ.” தேவாலயத்துக்குள் பறக்கும் ஈதான் உட்கரு என்றால் மீதியுள்ள இடம்? வெற்றிடம்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE